eye donation லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
eye donation லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 8 செப்டம்பர், 2012

ஏழைகளுக்கு இலவசப் பண்டுவம் செய்யும் கண் மருத்துவர்: இன்று தேசிய கண் கொடை நாள் - free eye operation by Dr.Parikumar

ஏழைகளுக்கு இலவசப் பண்டுவம்  செய்யும் கண்  மருத்துவர்: இன்று தேசிய கண்  கொடை நாள்
தர்மபுரி: மருத்துவ துறையில், சேவை மனப்பான்மை குறைந்து வரும் நிலையில், தர்மபுரியில், தனியார் கண் மருத்துவர், ஏழைகளுக்கு, இலவச கண் அறுவை சிகிச்சை செய்து வருகிறார்.

வேலூர் மாவட்டம், திருப்பத்தூரை சேர்ந்தவர் கண் மருத்துவர் பாரிக்குமார், 45. திருப்பத்தூரில் பள்ளி படிப்பையும், செங்கல்பட்டில் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பும், சென்னையில் கண் மருத்துவத்துக்கான உயர் படிப்பையும் படித்துள்ளார். படிக்கும் போதே சேவை மனப்பான்மை கொண்ட பாரிக்குமார், 2000ம் ஆண்டு கண் மருத்துவர்கள் குறைவாக இருந்த தர்மபுரியில், கண் மருத்துவமனை தொடங்கி ஏழைகளுக்கு தொடர்ந்து இலவச சிகிச்சை அளித்து வருகிறார். தர்மபுரி கண்தான மையத்தினருடன் இணைந்து இறந்தவர்களின் கண்களை இலவசமாக ஆப்ரேஷன் செய்து, கண் இல்லாதவர்களுக்கு கண் ஒளி கொடுக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இது வரை, இறந்த, 240 பேரின் கண்களை இலவசமாக ஆப்ரேஷன் மூலம் தானமாக பெற்று, பெங்களூரு மற்றும் கோவை கண் மருத்துவ மையத்துக்கு அனுப்பி வைத்துள்ளார். தர்மபுரி மாவட்டத்தில், கண் அலர்ஜி மற்றும் பிறவி குறைபாடு, கிருமிகளால் கண் பார்வை பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு, கண் பரிசோதனை, அறுவை சிக்சைகளை, 12 ஆண்டாக இலவசமாக செய்து வருகிறார். இவர் இது வரை, 15 ஆயிரம் கண் அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதில், 7,000 சிகிச்சை இலவசமாக செய்துள்ளார். தர்மபுரி மாவட்டத்தில், தொழுநோயால் பாதிக்கப்பட்ட, 300 பேருக்கு இலவச கண் அறுவை சிகிச்சை செய்திருப்பது குறிப்பிடதக்கது. இவரது மருத்துவமனையில், 2008ம் ஆண்டு முதல் ஏழைகளுக்கு மட்டும் முழு நேர இலவசமாக சிகிச்சை அளித்து வருகிறார்.

மனித நேயத்துடன் மருத்துவ பணிக்கு பெருமை சேர்க்கும் கண் மருத்துவர் பாரிக்குமார், கண் தான தினத்தில், கண் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு தேவை என வலியுறுத்தி கூறியதாவது: மனிதனுக்கு, கண் மிகவும் முக்கியமான உறுப்பு. இதை மனிதர்கள் தங்கள் இருக்கும் வரை பாதுகாக்க வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு சோதனை செய்து கண்களை பாதுகாத்து கொள்ள வேண்டும். மதுவினால் கண்பார்வை பாதிக்கும் நிலையுள்ளதால், மது அருந்துவதை தவிர்க்க வேண்டும். இந்தியாவில் ஆண்டுக்கு, ஒரு லட்சத்துக்கும் மேலானவர்களுக்கு, கண்கள் தேவைப்படுகிறது. பொதுமக்கள் கண்தானம் வழங்க முன் வர வேண்டும். இதன் மூலம் நாம் மண்ணை விட்டு மறைந்தாலும், நம் கண்கள் பார்வையற்ற பலருக்கு ஒளியாய் அமையும், மண்ணில் தொடர்ந்து வாழும். இவ்வாறு அவர் கூறினார்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

பாரிவள்ளல் பெயர் கொண்டவர் பெயருக்கேற்ப வாழ்வதற்குப் பாராட்டுகள்.  அனைத்து மருத்துவர்களும் இவரைப் பின்பற்ற வேண்டும்.  கண்கொடைச் செய்தியை இவர் தொண்டு மூலம் விளக்கி உள்ள தினமலருக்குப் பாராட்டுகள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /
 

ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

எளிமையாக க் கற்கலாம் ஆங்கிலம்!


சொல்கிறார்கள்


ஆங்கில வழிக் கல்வியை, "கற்க' எனும் திட்டத்தின் மூலம், மாணவர்களுக்கு இலவசமாக வழங்கி வரும், ஆல்டஸ் அறக்கட்டளை அமைப் பாளர் கீர்த்திவாசன்: பொதுவாக, கல்வி, வசதி வாய்ப்புள்ள குழந்தைகளுக்கும், வசதி வாய்ப்பற்ற குழந்தைகளுக்கும் ஒரே மாதிரி கிடைப்பது கிடையாது. அதனால், கல்வியின் தரம், சமச்சீர் இல்லாமல் உள்ளது. இந்த முரண்பாட்டில், மாற்றம் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தின், சிறு முயற்சி தான், இந்த, "கற்க' திட்டம். ஒரு மாணவனுக்கு முழுமையான கல்வி கிடைக்க வேண்டுமானால், ஆழமான, அடிப்படைக் கல்வி, சரியாக அமைய வேண்டும். அப்போது தான், அவனால், முழுமையான திறமையுடன் செயல்பட முடியும்.மயிலாப்பூரிலுள்ள, அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் படிக்கும், முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, முதல் முறையாக ஆங்கில வழிக் கல்வியைத் துவக்கியுள்ளோம். பாட வாரியாக ஆங்கிலம், கணிதம், அறிவியல் என, மூன்று வகுப்பறைகளை பிரித்து வைத்துள்ளோம். ஒவ்வொரு பாடத்திற்கும் ஏற்றாற் போல், வகுப்புகளை மாற்றியமைத்து, அதற்கேற்ற சூழ்நிலையில், பாடங்கள் நடத்தப்படும்.முக்கியமாக, பாடம் நடத்தும் போது, கரும் பலகைப் பயன்பாட்டை, பெரும்பாலும் தவிர்க்கிறோம்; செயல்வழிக் கற்றல் முறை தான். உதாரணமாக, கணிதத்தில் சிறிய எண், பெரிய எண்களை வரிசைப்படுத்த ஐஸ்கிரீம் குச்சிகளை பயன் படுத்தி கற்றுத் தருகிறோம். இந்தக் கற்றல் முறையை, மாண வர்கள் மிகவும் ரசிக்கின்றனர்.இந்த முறையில் சொல்லிக் கொடுக்கும் போது, கடினமான கணக்குப் பாடம் கூட, எளிதாக அவர்களுக்குப் புரிகிறது. ஈடுபாட்டுடன் கற்றுக் கொள்கின்றனர். அதேபோல், ஆங்கில வார்த்தைகளை, கணினி வழியாக கற்றுக் கொடுக்கிறோம். ஆங் கிலத்திலுள்ள நாட கங்கள், கதைகள், பெரிய திரை, "டிவி'க்களின் மூலம், காண்பிக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்படுகின்றன. இதன் மூலம், எளிதில் பாடங்கள் கற்கின்றனர். வறுமையை வெல்ல, விதைகளை விதைக்கிறோம்.

மனிதனுக்கு த் "தானம்' அழகு

 கண் தான விழிப்புணர்வு பற்றி பிரசாரம் செய்யும் ஜெயராமன்: ரோட்டரி கிளப் உதவியுடன், கண்தான விழிப்புணர்வு குறித்த, பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறேன். நாமும், ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில், கண்தானம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த, செயலில் இறங்கினேன். கண் தான அவசியம் குறித்து, அனைவரும் அறிந்திருப்பர் என, நினைத்திருந்த எனக்கு, அதிர்ச்சியாக இருந்தது. இந்தியாவில், 500 கண் வங்கிகள் உள் ளன. 15 லட்சம் பேர், "கார்னியா' எனும் விழி வெண்படலத்தில் ஏற்பட்ட பாதிப்பால், பார்வைத்திறன் இல்லாமல் உள்ளனர். மாற்றுக் கண் பொருத்துவதன் மூலம், இவர்களுக்கு பார்வை தர முடியும்.ஆண்டிற்கு, ஒரு லட்சம் கண்கள் தேவை. கடந்த ஆண்டு மட்டும், 75 லட்சம் பேர், கண் தானம் செய்திருக்க முடியும். இதன் மூலம், 150 லட்சம் கண்கள் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், 500 வங்கிகளிலும் சேர்த்து, 40 ஆயிரம் கண்கள் மட்டுமே பெற முடிந்தது.அதிலும், மற்றவர்களுக்கு பொருத்தக் கூடிய நிலையில் இருந்தது, வெறும், 15 ஆயிரம் கண்கள் தான். கண் வங்கியை தொடர்பு கொண்டு, எத்தனை பேர் உறுதி மொழி எடுத்துக் கொள்கின்றனர் எனக் கேட்ட போது, அதிகபட்சம், 4,000 பேர் என்ற தகவல், அதிர்ச்சியாக இருந்தது.கண் தானம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த இன்னும் எளிமையாக, புதுமையாகச் செய்தால், நிறையப் பேர் கண் தானம் செய்யவும், கண்களை தானமாக பெற்றுத் தரவும் முன் வருவர் எனத் தோன்றியது. அதன் விளைவு தான், எஸ்.எம்.எஸ்., சேவை.கண் தானம் செய்ய விரும்புபவர், 108ஐ தொடர்பு கொண்டால், அவர்கள், அருகிலுள்ள தனியார் அல்லது அரசு கண் வங்கிக்குத் தொடர்பு ஏற்படுத்தித் தருவர். மருத்துவக் குழுவினர் வந்து, கண்களை பெற்றுக் கொள்வர். தவிர, கண் தானம் செய்ய விரும்புவோர், தங்கள் பெயர், ஊர் விவரங்களைச் சேர்த்து, 99443-13131 என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ்., செய்தால் போதும்.தொடர்புக்கு: 098341-43650.








சனி, 25 ஆகஸ்ட், 2012

கண்தான விழிப்புணர்வு நாள்




இரு விழிகளில் பலருக்கு க் கிடைக்கும் வழி: இன்று கண்தான விழிப்புணர்வு  நாள்

ஒவ்வொருவரும் கண்கொடை செய்தால் நம் நாட்டில் பார்வை இல்லாதவர்களே இருக்க மாட்டார்கள்! இது குறித்துக், கண்கொடை செய்தவர்கள், பெற்றவர்கள், கண்கொடை அளிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்கள் ஆகியோரின் கருத்துகள்:

மருத்துவர்.சீனிவாசன்:
வாழும் காலத்தில் நாம் எத்தனையோ கொடை, அறம், உதவிகள் செய்கிறோம். அவற்றையெல்லாம் விட, வாழ்ந்து முடித்த பிறகு பிறருக்குச் செய்யும் கண்கொடைதான் மிகச்சிறந்த கொடை.

கண்கொடை செய்ய வயது வரம்பு இல்லை. ஒருவர் இறந்த ஆறு மணி நேரத்திற்குள் கண்கொடை செய்ய வேண்டும். இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வை வேண்டிக் காத்திருக்கின்றனர். ஒருவர், தனது கண்களைக் கொடையாக அளிப்பதன் மூலம் இரண்டு பேர் பார்வை பெறுகின்றனர். இரண்டு குடும்பங்களுக்கு நம்பிக்கையும், மகிழ்ச்சியும் கிடைக்கிறது. கண்கொடை செய்வதை வாழ்க்கையில் ஒவ்வொருவரும் கடமையாக ஏற்க வேண்டும்!

செகதீசன் (சமூக சேவகர்):
கடவுள் படைத்த உறுப்புகளில் கண்தான் மிக உயர்ந்த உறுப்பு. மனிதன் உடலிலிருந்து உயிர் பிரிந்தாலும் கண்களிலிருந்து உயிர் பிரிவதில்லை. வாழும்போது குருதிக்கொடை, வாழ்ந்த பிறகு கண்கொடை என்பதை ஒவ்வொருவரும் குறிக்கோளாகக் கொள்ள வேண்டும்! கொடையாக வழங்கப்பட்ட கண்கள் மூலம், இறந்தவர் மீண்டும் இந்த உலகத்தைக் காண்கிறார். கண்கொடை பெற்றுத் தருவதை ஒரு சேவையாக நான் செய்து வருகிறேன். இறந்தவர்களிடமிருந்து கண்களைக் கொடையாகப் பெற்று இது வரை 1056 பேருக்குப் பார்வை கிடைக்க உதவி இருக்கிறேன். கண்கொடை அளிக்கவும் பெறவும் விரும்புவோர் 9443263868 எனும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

நாகரத்தினம்:
கண்கொடை அளிப்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. என் கணவர் இறந்தபோது, கண்கொடை கேட்டுச் சமூக சேவகர் ஒருவர் என்னை அணுகினார். நான் துக்கத்தை அடக்கிக் கொண்டு, என் கணவரின் கண்களைக் கொடுக்க ஒப்புக் கொண்டேன். அதன் பிறகுதான் கண்கொடை அளிப்பது குறித்த விழிப்புணர்வு எனக்கு ஏற்பட்டது. எங்கள் குடும்பத்தில் மட்டும் இதுவரை ஐந்து பேர் கண்கொடை அளித்துள்ளனர். அதன் மூலம் 10 பேருக்குப் பார்வை கிடைத்துள்ளது.

வழக்குரைஞர்.சந்தானம் (இயற்கை வழக்கறிஞர்கள் சங்கச் செயலாளர்):
மனித வாழ்க்கையில் ஏற்படும் மிகப்பெரிய துக்கம், இறப்பு மட்டும்தான். அந்தத் துக்கத்தில் ஒரு நன்மை இருக்கிறது என்றால் அஃது, இறந்தவர் தன் கண்களைக் கொடையாக அளிப்பதுதான். இறந்தவர்களுக்குச் செய்யும் சடங்குகளைப் போலக் கண்கொடை அளிப்பதையும் ஒரு சடங்காக எண்ணிக் கண்களைக் கொடையாக அளிக்க வேண்டும். இயற்கை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், கண்கொடை, குருதிக்கொடை அளிப்பது பற்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.

கணேசன் (வாழ்நாள் காப்பீட்டு முகவர்):
நான் ஈருருளியில் போகும்போது, நச்சு வண்டு தாக்கி என் இடது கண் பார்வை போய் விட்டது. என் எதிர்காலமே இருண்டு விட்டது என்ற எண்ணத்தோடு வாழ்ந்த எனக்கு, இறந்தவர் ஒருவர் தன் கண்களைக் கொடையாகக் கொடுத்ததால், இழந்த பார்வை மீண்டும் கிடைத்தது. அந்த நல்ல உயிரைப் போல் அனைவரும் கண்கொடை செய்தால், நம் நாட்டில் பார்வை இல்லாதவர்களே இருக்க மாட்டார்கள்.

சிவராம் (அரசு ஊழியர்):
இறந்தவரின் கண்கள் மூலம் இன்னொருவர் இந்த உலகத்தைப் பார்க்க முடியும் என்றால் அதைக் கொடுத்து செல்வதில் தவறில்லை. வாழும்போது நாம் மற்றவர்களுக்கு வழங்க முடியாத ஒன்றை இறந்த பிறகு வழங்க முடிகிறது என்றால், அவை கண்கள் மட்டும்தான்.

சுபா:
கண்கொடை அளிப்பது பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவை. எங்கள் வீட்டில் மூன்று பேர் கண்கொடை அளித்துள்ளனர். ஆறு பேருக்குப் பார்வை கிடைத்திருக்கிறது. இன்றைக்கு ஆறு குடும்பங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறன. கண்கொடையை விடச் சிறந்த நல்வினை (புண்ணியம்) வேறு எதுவும் இல்லை.

உசா:
என் கணவர், இளம் வயதில் மாரடைப்பால் இறந்து விட்டார். அந்தத் துயரமான நேரத்தில், பிறருக்குப் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு அவரது கண்களைக் கொடையாக அளிக்க ஒப்புக் கொண்டேன். இன்று என் கணவர் இல்லை எனும் வருத்தம் இருந்தாலும், அவரது கண்கள் யாரோ ஒருவருக்குப் பார்வை கொடுத்துக் கொண்டு இருக்கின்றன என்பதால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது!