சனி, 21 ஜூலை, 2012

புதுக்கோட்டை அருகே சங்கக் காலத் தமிழ்ப்பிராமி நடுகல்!

புதுக்கோட்டை அருகே சங்க காலத் தமிழ் பிராமி நடுகல்!



நடுகல்லை பார்வையிட்ட தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் ம. திருமலை உள்ளிட்டோர். (உள்படம்) நடுகல்லில் உள்ள வரிகள்.
தஞ்சாவூர், ஜூலை 20: புதுக்கோட்டை அருகே சங்க காலத் தமிழ் பிராமி எழுத்துப் பொறிக்கப்பட்ட நடுகல்லை தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக மாணவர்கள் அண்மையில் கண்டெடுத்தனர்.  கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லை ஆய்வு செய்ததன் மூலம் பண்டைய தமிழகத்தில் வாழ்ந்த வேளாண், கால்நடை மேய்ப்புச் சமூக மக்கள் எழுத்தறிவு கொண்டவர்களாக இருந்துள்ளனர் என்பது உறுதியாகிறது என்கிறார் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம. திருமலை.  இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை மேலும் தெரிவித்தது:  இந்தப் பல்கலைக்கழகத்தின் கல்வெட்டியல் - தொல்லியல் துறையைச் சேர்ந்த ஆய்வு மாணவர்கள் த. தங்கதுரை, எஸ். பாண்டியன், அ. மோசஸ் ஆகியோர் புதுக்கோட்டை பகுதியில் கடந்த வாரம் கள ஆய்வு மேற்கொண்டனர்.  அப்போது, புதுக்கோட்டை மாவட்டம், பொற்பனைக்கோட்டைக்கு அருகே துணி துவைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த இந்த நடுகல்லை கண்டெடுத்தனர்.  இதையடுத்து, புதுவை பல்கலைக்கழகப் பேராசிரியர் க. ராஜன், இந்திய தொல்லியல் துறை தெற்கு வட்டார இயக்குநர் து. தயாளன் உள்ளிட்டோர் அதைப் பார்வையிட்டனர்.  இந்த நடுகல்லில் கி.பி. 2-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி (தமிழி) எழுத்துகள் இடம் பெற்றுள்ளன. இது இந்தியக் கல்வெட்டியலில் மிக முக்கியமானது. தமிழ் பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட 5-வது கல்வெட்டு இது.  நம் நாட்டிலேயே இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட நடுகல்களில் காலத்தால் முற்பட்ட நடுகல்களில் இதுவும் ஒன்று என்றார் அவர்.  இந்த நடுகல்லை பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் சு. ராசவேலு, ந. அதியமான், வி. செல்வகுமார், ம. பவானி, முன்னாள் பேராசிரியர் எ. சுப்பராயலு, கல்வெட்டு ஆய்வாளர் வெ. வேதாசலம் ஆகியோர் ஆய்வு செய்தனர்.  இதுகுறித்து ராசவேலு தெரிவித்தது:  தலா 2 அடி அகலம், நீளமுடைய இந்த நடுகல் முக்கோண வடிவில் உடைக்கப்பட்டு, எழுதப்பட்டுள்ளது. இதில் கோவென் கட்டிற் நெதிர, ணறு பொன்கொங்கர் விண்ணகோன், ஆ எறிஇத்து ஏவ அதவ்வனரு, அங்கபடைத தாணையன் கணங், குமரன் கல்  என 5 வரிகள் எழுதப்பட்டுள்ளன.  அதாவது, கோவன் கட்டி என்பவருக்கு அடுத்து வந்த பொன் கொங்கர் விண்ணகோன் காலத்தில் அதவன்னூரைச் சார்ந்த கணங்குமரன் என்பவர் ஆநிரைப் போரில் பசுக் கூட்டத்தைக் கைப்பற்றி இறந்தமைக்காக எடுக்கப்பட்ட நடுகல்.  கணங்குமரன் என்பவர் மெய்க்காவல் படைத் தலைவராகவும், கோட்டையைக் காக்கும் தலைவனாகவும் இருந்துள்ளது இந்தக் கல்வெட்டின் மூலம் தெரிய வருகிறது. தாணையன் என்பது கோட்டை அல்லது அரணைக் காக்கும் தலைவன் எனப் பொருள்படும். மேலும், அங்கப் படை என்பது அக்காலத்தில் இருந்த மெய்க்காவல் படையைக் குறிக்கும்.  இந்தக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்ட பொற்பனைக்கோட்டை, சங்கக் காலத்தில் கோட்டைப் பகுதியாக இருந்துள்ளது. இப்போதும், இந்தக் கோட்டையின் இடிபாடுகள் காணப்படுகின்றன.  எனவே, இந்தக் கோட்டையைக் காக்கும் தலைவனாக இப்போரில் இறந்த கணங்குமரன் இருந்திருக்க வேண்டும்.  இந்த நடுகல் கல்வெட்டில் உள்ள தமிழ் பிராமி எழுத்துப் பொறிப்புகளின் அமைப்பைப் பார்க்கும் போது, அரச்சலூர், அம்மன்கோவில்பட்டி, பூலாங்குறிச்சிக் கல்வெட்டுகளுக்கு முற்பட்டதாக உள்ளது.  எழுத்தமைப்புப்படி, இது கி.பி. 2 ஆம் நூற்றாண்டாகவும், கரூர் அருகே புகலூரில் கண்டெடுக்கப்பட்ட முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த சேரர் கல்வெட்டுக்குப் பிற்பட்டதாகவும் உள்ளது என்றார் அவர்.  இந்தக் கல்வெட்டில் இடம் பெற்றுள்ள கட்டி மரபினர் குறித்து அகநானூறில் உள்ள பாடல் வரிகள் மூலம் பல்கலைக்கழக இலக்கியத் துறைத் தலைவர் வ. குருநாதன் விளக்கினார். பின்னர், நடுகல்லை கண்டெடுத்த மாணவர்களையும், ஆய்வு செய்த பேராசிரியர்களையும் துணைவேந்தர் பாராட்டினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக