இலங்கை ச் சிக்கலில் கருணாநிதி இரட்டை வேடம்: பழ.நெடுமாறன்
சென்னை, ஜூலை 17: இலங்கைப் பிரச்னையில் திமுக தலைவர் கருணாநிதி இரட்டை வேடம்
போடுவதாக இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன்
குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழீழம் உருவாவதை விரைவில் காண வேண்டும் என்று கருணாநிதி அறிவித்திருந்தார்.
இதற்காகத்தான் டெசோ மாநாடு நடத்தப்படுவதாகத் தெரிவித்திருந்தார். ஆனால் கருணாநிதி
அறிவித்து 40 நாள்கள் ஆவதற்குள் அவர் பேச்சில் பொங்கி வந்த கோபம் மறைந்துவிட்டது.
டெசோ மாநாட்டில் தனி ஈழம் கோரிக்கை தீர்மானம் நிறைவேற்றப்படாது என்று இப்போது
கூறியுள்ளார்.
மத்திய அரசின் ஓர் அங்கமாக விளங்கும் திமுக செய்ய வேண்டியதைச் செய்து ஈழத்
தமிழர்களின் துயரைத் துடைக்காமல் இப்போது முச்சந்தியில் மாநாடு நடத்தி துயரைத்
துடைக்கப் போவதாகக் கூறுவது பித்தலாட்டம். கருணாநிதியின் இரட்டை வேடத்தை வன்மையாகக்
கண்டிக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
தமிழருவி மணியன்: 5 முறை முதல்வராக இருந்த கருணாநிதி தமது பதவிக் காலத்தில்
ஈழம் மலர வேண்டும் என்று உளப்பூர்வமாக ஒருபோதும் சிந்தித்தது இல்லை. இப்போதும் உலகத்
தமிழர்களின் வெறுப்புப் பார்வை மட்டும்தான் கருணாநிதிக்கு எஞ்சியுள்ளது. மீண்டும்
தெளிவற்ற அறிக்கைகள் மூலம் மிகச் சிறந்த குழப்பவாதி என்பதை கருணாநிதி
நிரூபித்துள்ளார் என்று தமிழருவி மணியன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக