சொல்கிறார்கள்
"அம்மாவை ப் பெருமைப்பட வைக்கணும்!'
"ஸ்கேட்டிங்'கில் தேசிய அளவில் சாம்பியன் பட்டம் வென்ற சம்யுக்தா: நான் மூன்று வயது சிறுமியாக இருந்த போது, என் அப்பா மாரடைப்பால் இறந்து விட்டார். அவர் இல்லாத குறையே தெரியாமல், அம்மா என்னை வளர்த்தார். எனக்கு விருப்பமான விளையாட்டில், சாதனை புரிய உற்சாகப்படுத்தினார். ஆறு வயதில், மாமா தான் எனக்கு, "ஸ்கேட்டிங்'கை அறிமுகப்படுத்தினார். வகுப்பில் சேர்ந்தபோது, பயிற்சி மிகவும் கஷ்டமாக இருந்தது. அதைவிட, ஆர்வம் அதிகமாக இருந்தது. காலை, மாலையில் தினமும் கிட்டத்தட்ட, ஆறு மணி நேரம் பயிற்சி எடுப்பேன். முதல் வகுப்பு படிக்கும் போதே, ஆறு வயதிற்குட்பட்டோருக்கான மாநில போட்டியில், முதல் பரிசு வாங்கினேன். அதில் துவங்கி, மாநில அளவிலான போட்டிகளில், 10த்திற்கும் மேற்பட்ட தங்கப் பதக்கங்கள் வாங்கி விட்டேன். ஆனாலும், தேசிய அளவிலான போட்டியில், சாம்பியன் ஆக வேண்டும் என்பது தான் கனவாக இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் அது கனவாகவே கழிந்தது. நான் பிளஸ் 1 படித்த போது, 10வது முறையாக தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்றேன். இந்த முறை, ஜெயித்தே ஆக வேண்டும் என, மனதில் ஒரு வெறி. நாடெங்கிலும் இருந்து, 30 போட்டியாளர்கள் பங்கேற்ற, 16 வயதிற்குட்பட்டோருக்கான போட்டியில், நான் எதிர்பார்த்த சாம்பியன் பட்டம் வென்றேன். தமிழகத்திற்குப் பெருமை சேர்த்தது மகிழ்ச்சியாக இருந்தது. என்னுடைய பல ஆண்டு கனவு நனவானதில், அதிகம் பெருமைப்பட்டவர், அம்மா தான். பள்ளியில் பாராட்டு விழா நடந்தபோது, அம்மாவையும் அழைத்து, கவுரவித்தனர். அந்த தருணம், என் வாழ்க்கையில் மறக்க முடியாதது. "ஸ்கேட்டிங்'கில், இன்னும் நிறைய சாதனைகள் செய்ய வேண்டும். என் அம்மாவைப் பெருமைப்பட வைக்க வேண்டும்.
"அன்பே மனநோய்க்கு மருந்து':
மன நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளித்து வரும் ஜோன் சாந்த குமாரி: நம் நாட்டில் உள்ள, மொத்த மக்கள் தொகையில், ஒரு கோடி பேர், மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களைக் குணப்படுத்த, மிகக் குறைந்த அளவிலேயே மன நல மருத்துவர்கள் உள்ளனர். காய்ச்சல், தலைவலி போன்று, மன நோயை உடனே குணப்படுத்த முடியாது. அன்பும், அரவணைப்பும் தான் அவர்களுக்கு மிகவும் முக்கியம். என் சகோதரர் ஒருவர், மனநலம் பாதிக்கப்பட்டு, 20 ஆண்டுகளுக்குப் பின் தான் முழுமையாகக் குணமடைந்தார். பாதிக்கப்பட்டவர்களை எங்களுடைய மன நல மையத்திற்கு அழைத்து வந்து, சிகிச்சை அளிக்கிறேன். இதற்காக, "நலிவுற்றோர் நல வாழ்வு மேம்பாட்டு மையம்' என்ற பெயரில், ஒரு இல்லத்தை துவங்கி இருக்கிறேன். இங்கு உள்ள அனைவரையும், என் குழந்தையைப் போலவே எண்ணி, அவர்களுக்கு சிகிச்சையும் அளிக்கிறேன். அவ்வளவு சீக்கிரம் யாரும், நான் சொல்வதைக் கேட்க மாட்டார்கள்; இருந்தாலும், பொறுமையுடன் சிகிச்சை அளிக்க வேண்டும். மன நோயாளிகள் ஓரளவு குணமடைந்த பின், அவர்களுக்குக் கைவினை பொருட்கள் செய்யும் பயிற்சியைக் கற்றுக் கொடுப்போம். இதனால், அவர்கள் தேவையற்ற குழப்பங்களில் இருந்து, வெளியே வந்து விடுவர். வருங்காலத்தில் இது அவர்களுக்கு, வருமானம் தரும் சிறு தொழிலாக அமையும். பிள்ளைகளுக்கு என பெற்றோர், இந்த காலத்தில் நேரமே ஒதுக்குவது இல்லை. குழந்தைக்கு அன்பு, உறவுமுறை என, எதுவும் கிடைக்காமல் போகும் போது, மனதில் பிரச்னைகள் ஆரம்பமாகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக