புதன், 18 ஜூலை, 2012

அழிவின் விளிம்பில் அரிய வரலாற்றுச் சின்னங்கள்!


மலைக்கு ப் பின்புறம் பூட்டியே கிடக்கும் குடவரைக் கோயில்.


அழிவின் விளிம்பில் அரிய வரலாற்றுச் சின்னங்கள்!

திருப்பரங்குன்றம் , ஜூலை 17: மது ரை மாவட்டம், திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள பழங்கால வரலாற்றுச் சின்னங்கள் முறையான பராமரிப்பின்றி அழிவின் விளிம்பில் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.  மதுரையை அடுத்துள்ள திருப்பரங்குன்றம் ஸ்ரீ முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடாக விளங்குகிறது.  குடவரைக் கோயிலான இத்தலத்தில் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி, தெய்வானை திருமணக் கோலத்தில் அருள்பாலிப்பது சிறப்பான அம்சமாகும். திருப்பரங்குன்றத்தில் அரிய பல வரலாற்றுச் சின்னங்கள் இருந்தும், அவை குறித்த விளம்பரங்கள், வழிகாட்டிப் பலகைகள் இல்லாததால், அவை சுற்றுலாப் பயணிகளின் கவனத்துக்கு வராமலேயே போய்விட்டதாகப் புகார் எழுந்துள்ளது.  சமணர் படுகைகள்: பல நூற்றாண்டுகளுக்கு முன்பு திருப்பரங்குன்றம் பகுதி சமணர்களின் வாழ்விடமாக இருந்துள்ளது. இங்குள்ள சமணர் படுகைக்குச் செல்ல, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மூலம் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், அவை முறையான பராமரிப்பின்றி சிதிலமடைந்து காணப்படுகிறது.  அதேபோல, சமணர்கள் வசித்த குகைக்கு யாரும் செல்ல முடியாத அளவுக்கு ஆக்கிரமிப்புகளும், முட்புதர்களும் நிரம்பி உள்ளன.  தென்பரங்குன்றம் குடவரைக் கோயில்: திருப்பரங்குன்றம் மலையின் பின்புறம் அமைந்துள்ள குடவரைக் கோயிலானது, கி.பி. 8-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.  தொல்லியல் துறை சார்பாக பராமரிக்கப்பட்டு வரும் இந்தக் கோயில் பெரும்பாலும் பூட்டியே கிடக்கிறது.  பதினாறுகால் மண்டபம்: திருப்பரங்குன்றம் கோயிலுக்குச் செல்லும் வழியில் சன்னதி தெருவில் உள்ளது 16 கால் மண்டபம். இது பல ஆண்டுகளாக பூட்டியே கிடக்கிறது. ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் உள்ள இந்த பதினாறுகால் மண்டபம் விளம்பர பேனர்கள் கட்டவும், அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்தும் இடமாகவும் மாறியுள்ளது.  நக்கீரர் குகை: இது சரவணப் பொய்கை பகுதியில் அமைந்துள்ளது. முற்காலத்தில் நக்கீரர் சரவணப்பொய்கை பகுதியில் கடும் தவம் மேற்கொண்டதாகவும், அப்போது அவரை கட்முகி எனும் பூதம் சிறைப்பிடித்து, அருகில் உள்ள குகையில், 999 துறவியரோடு அடைத்து வைத்ததாகவும், அவர்களை முருகப்பெருமான் விடுவித்ததாகவும், அதனால் நக்கீரர் திருமுருகாற்றுப்படை எனும் காப்பியத்தை இயற்றியதாகவும் செவிவழிச் செய்திகள் உள்ளன.  இந்த நக்கீரர் குகை, தற்போது சமூக விரோதிகள் கூடாரமாக மாறிவிட்டதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.  புண்ணிய தீர்த்தங்கள்: ராமேசுவரம் போன்று, திருப்பரங்குன்றம் கோயில் பகுதியிலும் அதனைச் சுற்றிய இடங்களிலும் பல புண்ணியத் தீர்த்தங்கள் இருந்தன. ஒரு காலத்தில் இந்த தீர்த்தத்தை நோய்த் தீர்க்கும் மருந்தாக பக்தர்கள் அருந்தியதாகவும், மதுரைக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்ததாகவும் வரலாறு உள்ளது.  ஆனால், அவற்றில் ஒருசில தீர்த்தங்கள் தவிர, மற்றவை பராமரிப்பின்றி குப்பைகள் மண்டி காணப்படுகிறது. இதுபோன்ற பழமையான அரிய வரலாற்றுச் சின்னங்களை புதுப்பித்து பராமரிக்காவிட்டால், அவை இருந்த தடம் தெரியாமல் அழிந்துவிடும் அபாயம் உள்ளதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.  ஆகவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த வரலாற்றுச் சின்னங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த கண்ணன் என்பவர் கூறுகையில், திருப்பரங்குன்றம் பகுதியில் சமணர் குகை இருப்பதாகக் கேள்விப்பட்டு வந்தோம். ஆனால், அங்கு செல்ல முடியாத அளவுக்கு முட்புதர்களும், ஆக்கிரமிப்புகளும் உள்ளதால் பார்க்க முடியவில்லை என்றார்.  பாண்டி என்பவர் கூறுகையில், திருப்பரங்குன்றத்தில் சில லட்ச ரூபாய் செலவில் இந்த அரிய வரலாற்றுச் சின்னங்களைப் புதுப்பித்தால் பக்தர்கள் வருகையும் அதிகரிக்கும் என்றார்.  இதுகுறித்து கோவில் நிர்வாக அதிகாரி இரா. செந்தில்வேலவன் கூறுகையில்,மலைக்குப் பின்புறம் உள்ள குடவரைக் கோவிலும்,சமணர் படுகையும் தொல்லியல் துறையினர் பராமரிப்பில் உள்ளது. அதேசமயத்தில் கோயில் வசமுள்ள பதினாறுகால் மண்டபம்,நக்கீரர் குகை, புண்ணியத் தீர்த்தங்களைச் சீரமைத்து விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர உயர் அதிகாரிகளின் அனுமதி பெற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக