செவ்வாய், 17 ஜூலை, 2012

நெல்லிலும் நகை செய்யலாம்!

தினமலர்


நெல்லிலும் நகை செய்யலாம்!




நெல் மணி, தானியங்களில், விதவிதமாக அணிகலன்கள் செய்யும் பாலமுரளி: திருச்சி, லால்குடி அருகில் விடுதலைபுரம் தான், என் சொந்த ஊர். அப்பாவிற்கு, இயற்கை விவசாயம் மற்றும் மூலிகை மீது, பெரிய மதிப்பு இருந்தது. தமிழகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தோன்றாத காலத்திலேயே, கிராமப் பொருளாதாரம் முன்னேற வேண்டும் என, பெண்களை ஒருங்கிணைத்து, மூலிகைப் பண்ணை மூலம், இந்தப் பகுதியில் மறுமலர்ச்சி ஏற்படுத்தினார். நான், ஆட்டோமொபைல் பொறியியல் படித்துள்ளேன். ஆனாலும், என் அப்பா மூலம், இயற்கை விவசாயத்தின் மீதான மதிப்பை உணர்ந்தேன். என் அப்பா, தன் மூலிகைப் பண்ணையில், 900 வகையான மூலிகைகள் வைத்து பராமரித்து வந்தார்.ஒரு காலத்தில் எங்கள் பகுதியில் பலருக்கும், வைத்தியச் சாலையே எங்களின் மூலிகைப் பண்ணை தான். இன்றும், மிகச் சிறப்பாக இயங்கி வருகிறது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு, மூலிகைப் பண்ணை அமைத்தும் தருகிறோம்.நெல் மணியிலும், தானியங்களிலும் நான் அணிகலன்கள் தயாரிப்பில் ஈடுபட்டதே, வித்தியாசமான அனுபவம் தான். ஒரு மகளிர் சுய உதவிக்குழு நிகழ்ச்சியில், தரையில் சிதறிக் கிடந்த நெல்மணிகளைப் பார்த்த போது, கம்மல் போன்ற உருவம் தெரிந்தது. அப்போது தான், இதைக் கொண்டு நகையாக மாற்றலாமே, என்ற எண்ணம் ஏற்பட்டது; அதற்கான செயலில் இறங்கினேன். ஆரம்பத்தில் மிகவும் சிரமப்பட்டேன். கொஞ்சம் கொஞ்சமாக, அணிகலன்களுக்கு உருவம் கொடுக்க ஆரம்பித்தேன். என் உழைப்பிற்கும், நான் பட்ட கஷ்டத்திற்கும் பலன் கிடைத்தது. இதற்காக ஒரு குழுவை உருவாக்கி, இன்று நெல்லில், கம்மல், நெக்லஸ், பிரேஸ்லெட், செயின் என, ஒவ்வொன்றிலும் நிறைய செய்கிறோம்.கைவினைப் பொருட்களுக்கு பெரிய நகரங்களில், தனி வரவேற்பு இருப்பதை உணர்ந்தோம். சென்னை, பெங்களூரு, ஜெய்ப்பூர், மும்பை, ஐதராபாத் என, பல முக்கிய நகரங்களுக்கும், திருச்சியிலிருந்து நகை தயாரித்து அனுப்புகிறோம். தற்போது, "ஆன்-லைன்' மூலமாகவும் விற்பனை செய்கிறோம்.

1 கருத்து:

  1. வாழ்த்துகள்... எனக்கும் மூலிகை மருத்துவத்தில் ஆர்வம் உண்டு. கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக இன்றுவரை ஒருநாள் கூட விடுப்போ மருத்துவ விடுப்போ எடுத்ததில்லை...

    நெல்லில் நகைகள்... மாறுபட்ட சிந்தனை. வாழ்த்துகள். ஒருசில படங்களையாவது வெளியிடடிருக்கலாமே...

    SSDAVID63@YAHOO.COM

    பதிலளிநீக்கு