வியாழன், 19 ஜூலை, 2012

வாழ்க்கையை மெருகேற்றிய பாத்திரக் கடை!

 
வாழ்க்கையை மெருகேற்றிய பாத்திரக் கடை!
பாத்திரக் கடை தொழிலில் ஈடுபட்டுள்ள மாலதி: என் சொந்த ஊர் வேலூர். வீட்டிற்கு ஒரே பெண் என்பதால், செல்லமாக வளர்ந்தேன். பி.எஸ்சி., நர்சிங் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த போது, என் அப்பாவிற்கு இதயத்தில் பிரச்னை வர, அவசர அவசரமாக திருமணத்தை முடித்தனர்.என் கணவர் போளூரில், உறவினர் பட்டறையில், பித்தளை பாத்திரம் செய்யும் வேலையில் இருந்தார். திருமணத்திற்குப் பின், தனியாக தொழில் செய்யுமாறு கூறி விட்டனர். அதற்கு முதலீடு தேவை என்பதால், ஒரு ஆண்டு வரை, எங்களுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் விவசாயம் பார்த்து, அதில் கிடைத்த வருமானத்தில் ஜீவனம் நடத்தினோம்.எப்படியும், தொழில் துவங்க வேண்டும் என்ற வைராக்கியத்தில், என் நகைகளை அடகு வைத்து, 50 ஆயிரம் ரூபாய் முதலீட்டில், பித்தளைப் பாத்திர பட்டறையும், அதை விற்பனை செய்ய, சிறிய கடையையும் ஆரம்பித்தோம்.ஆரம்பத்தில் வாரம் ஒரு முறை, ஆட்டோவில் ரேடியோ கட்டி, சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமங்களில், கடையைப் பற்றி விளம்பரப்படுத்தினோம். வாடிக்கையாளர்களைக் கவர, தீபாவளி பாத்திரச் சீட்டு நடத்தினேன்; எதிர்பார்த்தபடி வருமானம் இல்லை.என் கணவருக்கு, தொழில் கற்றுக் கொடுத்த சவுந்திரராஜன் என்பவர், பித்தளைப் பாத்திரங்கள் செய்ய, மூலப் பொருட்களை எங்கிருந்து வாங்க வேண்டும் என, அறிவுறுத்தினார்.நாங்களும் அங்கேயே பொருட்களை வாங்கினோம். கட்டுப்படியான விலையில் அனைத்தும் கிடைத்தன; லாபமும் பெருகியது.வாடிக்கையாளர்களிடம் எப்போதும், சிரித்த முகத்துடன் பழக வேண்டும் என, என் கணவர் கற்றுக் கொடுத்தார். இப்போது, நான் எதிர்பார்த்தபடி, வியாபாரம் சிறப்பாக உள்ளது.இந்த தொழில் மூலம் மாதம், 20 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. சம்பாதித்த பணத்தில், இடம் வாங்கி, வீடு கட்டியுள்ளேன். அவ்வப்போது, கடையிலும் மாற்றம் செய்கிறேன்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக