தினமணி First Published : 18 Jul 2012 03:16:58 AM IST
Last Updated :
18 Jul 2012 03:37:38 AM IST
சென்னை, ஜூலை 17: துபையில் அமெரிக்க கடற்படையினரால் தமிழக மீனவர் சுட்டுக்
கொல்லப்பட்ட சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட நாடுகளின் கவனத்துக்கு எடுத்துச் சென்று
விரிவான விசாரணை நடத்த வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கை முதல்வர் ஜெயலலிதா
வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, பிரதமருக்கு அவர் செவ்வாய்க்கிழமை எழுதிய கடிதத்தின் விவரம்:
துபை கடல் பகுதியில் அமெரிக்க கடற்படையால் கடந்த 16-ம் தேதி சுடப்பட்டு தமிழக
மீனவர் ஒருவர் உயிரிழந்த துயரமான சம்பவத்தை தங்களின் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஏ. சேகர் (25), எம். பாண்டுவநாதன் (22),
கே.முத்துக்கண்ணன் (32), ஆர்.முத்துமணிராஜ் (27) ஆகிய நான்கு பேரும் மீன்பிடித்
தொழிலுக்காக துபை சென்றனர். அங்கு தினக்கூலி அடிப்படையில் மீன்பிடித் தொழில் செய்து
வந்தனர்.
சம்பவத்தன்று அவர்கள் ஜபேல் அலி துறைமுகம் என்ற இடத்துக்கு அருகே 30 அடி நீளம்
கொண்ட பயணிகள் படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். இது அமெரிக்க கடற்படையைச்
சேர்ந்த கப்பல் அடிக்கடி நங்கூரமிடும் இடமாகும். இந்த நிலையில் "ரப்பான்நாக்' என்ற
அமெரிக்க கடற்படை கப்பலில் இருந்த பாதுகாப்புப் படையினர், மீனவர்கள் நான்கு பேரை
நோக்கிச் சுட்டுள்ளனர்.
இந்திய நேரப்படி கடந்த 16-ம் தேதி மாலை 6 மணிக்கு இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக
ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க கடற்படை வீரர்களின் எச்சரிக்கையை மீறியதாகவும்,
வீரர்களின் கப்பலை நோக்கி மீனவர்கள் முன்னேறி வந்ததாகவும் செய்திகள் கூறுகின்றன.
இந்தச் சம்பவத்தில் ராமநாதபுரம் மாவட்டம் தோப்புவலசை கிராமத்தைச் சேர்ந்த
ஏ.சேகர் என்ற மீனவர் உயிரிழந்தார் என்ற தகவலை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்
கொள்கிறேன். அவருடன் இருந்த மீனவர்கள் 3 பேர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முன்பு நடந்த சம்பவம்: இதேபோன்ற சம்பவம் கடந்த பிப்ரவரியில் நடைபெற்றதை
தங்களின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். கொச்சி கடல் பகுதியில் கன்னியாகுமரி
மாவட்டத்தைச் சேர்ந்த அஜீஸ் பின்கோவும், கேரளத்தைச் சேர்ந்த மற்றொருவரும் மீன்
பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, இத்தாலிய சரக்குக் கப்பலில் இருந்த பாதுகாப்புப் படையினர் மீனவர்களை
நோக்கிச் சுட்டனர். இந்தச் சம்பவத்தில் தலையிட்ட மத்திய அரசு, உயிரிழந்த மீனவர்களின்
குடும்பத்துக்கான நிவாரண நிதியை சம்பந்தப்பட்ட இத்தாலிய கப்பல் நிறுவனத்திடம்
இருந்து பெற்றுத் தந்தது.
எனவே, துபையில் இப்போது நடைபெற்ற சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட அமெரிக்கா,
துபை மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் கவனத்துக்கு கொண்டு சென்று
விரிவான விசாரணை நடத்த உதவிடும்படி தங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
உயிரிழந்த மற்றும் காயமடைந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு போதிய நிவாரணம்
கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமெனவும் தங்களை கேட்டுக் கொள்கிறேன். மருத்துவமனையில்
சிகிச்சை பெற்று வரும் மீனவர்களுக்கு உரிய மருத்துவ உதவிகள்
கிடைப்பதற்கு அங்குள்ள இந்தியத் தூதரகத்தை தாங்கள் கேட்டுக் கொள்ள வேண்டும்.
மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரத்துக்காக கடலில் மீன்பிடித் தொழிலை செய்கின்றனர்.
அவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தப்படுவதை
உறுதி செய்ய வேண்டும் என்று தனது கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா கேட்டுக்
கொண்டுள்ளார்.
ரூ. 5 லட்சம் நிவாரண நிதி: உயிரிழந்த மீனவர் சேகரின் குடும்பத்துக்கு
முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு
ரூ.50 ஆயிரமும் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
கருத்துகள்