ஞாயிறு, 15 ஜூலை, 2012

அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார்: தனிமனிதனாக ச் சாதிக்கும் கருப்பையா


அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார்: தனிமனிதனாக ச் சாதிக்கும் கருப்பையா
 
தினமலர்


ராஜபாளையம்: ராஜபாளையம் நக்கனேரியை சேர்ந்தவர் கருப்பையா, 73. முன்பு மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்ட இவர், அந்த வருமானம் மூலம் மகன் தமிழ்செல்வனை படிக்க வைத்தார். தற்போது மகன் ஸ்ரீவில்லிபுத்தாரில் உள்ள பள்ளியில் தலைமை ஆசிரியராக உள்ளார். மகனது அறிவுரையால், வனம், மரங்களால் ஏற்படும் நன்மைகளை உணர்ந்த கருப்பையா, மரங்களை வெட்டியதற்கு பிராயச்சித்தமாக தற்போது, மரக்கன்றுகளை நட்டு வருகிறார். ரோட்டோரம், பள்ளி, ரேஷன் கடை, மேல்நிலை குடிநீர் தொட்டி சுற்றுபகுதி, அரசு அலுவலக காலி இடங்களில் தனது சொந்த செலவிலே மரக்கன்றுகளை நடுகிறார். மனிதர்கள் மற்றும் விலங்குகளிடம் இருந்து பாதுகாக்க, கம்பி வலை அடித்து, தள்ளுவண்டியுடன் சென்று தண்ணீர் ஊற்றுகிறார்.

கருப்பையா கூறுகையில், ""ஒரு மரத்தில் எறும்பு முதல் பறவைகள் வரை வாழ்கின்றன. மரங்கள் எல்லா உயிர்களுக்கும் நிழல், மழை தருகின்றன, என்பதை உணர்ந்த நான், முன்பு செய்த தவறுக்கு பிராயசித்தம் தேடி ,2003 முதல் மரக்கன்றுகளை நட துவங்கினேன். அதன்படி தெற்கு வெங்காநல்லூர் 65, கொல்லங்கொண்டான் ரோடில்75, நக்கனேரி 300 என, பல கிராமங்களில், புங்கை, வேம்பு, மருதம், அரசமரம், ஆலமரம், புளி, இலுப்பை என , மரக்கன்றுகளை நட்டு உள்ளேன். எனது ஆர்வத்தை பார்த்த பலர், வீடு தேடி வந்து மரக்கன்றுகளை வாங்கி செல்கின்றனர். மகன் தரும் பணத்தில் எனது செலவு போக மீதியை, மரக்கன்றுகளை நட செலவிடுகிறேன். வயதானதால், தண்ணீர் குடத்துடன் வண்டியை தள்ள முடியவில்லை. அதற்கு வனத்துறை போன்ற அரசு அமைப்புகள் உதவினால் , இன்னும் பல மரங்களை நட முடியும்,'' என்றார். தொடர்புக்கு: 94882 12911.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக