தமிழுக்குச் செய்ய வேண்டுவன – ஆட்சித் தமிழ்
வேண்டுநர் : இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழ், தன் நாட்டு மக்களாலேயே உரிய இடம் அளிக்கப்படாத நிலையில்
உள்ள அவலம், வேறு எந்த மொழிக்கும் இல்லை என்று சொல்லலாம். 1947 ஆம் ஆண்டில்
இந்தியா விடுதலை அடைந்த பொழுதே தமிழும் பிற மொழிகளின் தாக்குதல்களில்
இருந்து விடுபட்டிருக்க வேண்டும். ஆனால், இந்திய வலையில் சிக்கிய தமிழ்
மீள முடியாமல் தவித்துக் கொண்டுள்ளது. 1967 இல் தமிழுக்குக் குரல் கொடுத்த
தி.மு.க., ஆட்சிக் கட்டிலில் ஏறியதும் பேரறிஞர் அண்ணாவின் செயல்பாடுகளால்
தமிழ் விடுதலை பெறும் என்ற நம்பிக்கை துளிர் விட்டது. ஆனால் அவரின்
எதிர்பாராத மறைவு ஒரு பின்னடைவை ஏற்படுத்தி விட்டது. 1967-இற்கு முன்பும்
பின்பும் என ஒப்பிட்டுப்பார்த்தால் தமிழுக்கு வளம் சேர்க்கும் பல பணிகள்
நடைபெற்றன என்பதை மறுப்பதற்கில்லை. எனினும் தமிழுக்கு முழு நலம் சேர்க்கும்
சூழல் இல்லை என்பதுதான் வேதனையான உண்மை. தமிழ்நாட்டில் அனைத்து
இடங்களிலும் தமிழே தலைமையிடத்தில் இருக்கும் சூழல்
இருந்தால்தான் தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி செய்வதாகக் கருத இயலும். அத்தகைய
நிலை வர குறிப்பிட்ட முதன்மைப் பிரிவுகளில் தமிழக அரசு செய்ய
வேண்டியனவற்றைப் பார்ப்போம். முதலில் ஆட்சித்தமிழின் அவலநிலை காண்போம்!
1. ஆட்சித் தமிழ்
தமிழ்நாட்டின் ஆட்சி மொழி தமிழ் என்பது பெயரளவிற்குத்தான்
உள்ளது. 1956 ஆம் ஆண்டிலேயே 30- ஆவது சட்டமாக ஆட்சிமொழிச் சட்டம்
இயற்றப்பட்டு 19.1.1957 இல் ஆளுநரின் ஒப்புதலைப் பெற்றது. இருப்பினும்
இந்தச் சட்டமே ஒரு நொண்டிச்சட்டம்; பேராயக்கட்சியான காங்கிரசின்
ஆட்சியில், மிகுந்த ஆர்வத்துடன் மன்ற உறுப்பினர்களால் வரவேற்கப்பட்டு நல்ல
முறையில் அறிமுகப்படுத்தப்பட்டு இச்சட்டம் இயற்றப்பட்டாலும் பயன் எதுவும்
விளையவில்லை. தமிழ்நாட்டில் தமிழ் மட்டும்தான் ஆட்சிமொழி என்று சட்டம்
இயற்றவில்லை. மாறாக, இதற்கு முன்பு ஆங்கிலம் பயன்படுத்தப்படும் இடங்களில்
எல்லாம் ஆங்கிலமே பயன்படுத்தப்படும் என ஆங்கிலத்திற்குக் காவடி தூக்கியது.
சிறு குழந்தைகளுக்கு இனிப்பைத் தந்து ஏமாற்றுவதுபோல், தமிழ் ஆட்சி மொழி
என்று அறிவித்து விட்டனர்; ஆனால்,முழுமையாய் நடைமுறைப்படுத்தாமல், பகுதி
பகுதியாய் நடைமுறைப்படுத்த மட்டுமே சட்டம் வாய்ப்பு
அளிக்கிறது;அஃதாவது, அவ்வப்போது வெளியிடுகின்ற அறிவிக்கையின் மூலமாக அந்த
அறிவிக்கையில் குறிப்பிடப்படுகின்ற அலுவல்முறைச் செயல்களுக்குத் தமிழ்
பயன்படுத்த வேண்டும் என்று கட்டளையிடலாம் என்றுதான் ஆட்சிமொழிச்சட்டம்
கூறுகிறது. எனவே, துண்டு துண்டாக அவ்வப்பொழுது ஆணைகள்
பிறப்பிக்கப்படுவதாலும் அவற்றிலும் இதற்கு முன்பு ஆங்கிலம்
பயன்படுத்தப்பட்ட இடங்களில் ஆங்கிலம் பயன்படுத்த மறைமுகமாக விலக்கு அளித்து
வருவதாலும் தமிழ்நாட்டில் அயல்மொழி மாளவில்லை! தமிழும் வாழவில்லை!
தமிழ் முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக ஆங்கிலத்
தட்டச்சுப்பொறிகளை ஒப்படைத்து விட்டுத் தமிழ்த்தட்டச்சுப் பொறிகளை
ஒன்றுக்கு இரண்டாகப் பெற்றுக் கொள்ளலாம் என்றெல்லாம் ஆணையிட்டனர்.
இருப்பினும் போதிய தமிழ்த்தட்டச்சுப் பொறி இல்லையென இவையும் தவணை
முறையிலேயே வழங்கப்பட்டன. தட்டச்சு வாயிலாகத் தமிழுக்கு உரிய இடம்
அளிக்கலாம் என்னும் நம்பிக்கையுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பொழுதே
கணிணி வந்து விட்டது. கணிணி ஆங்கிலத்திற்கு மட்டும்தான் இடம் கொடுக்கும்
என்ற தவறான நம்பிக்கையில் உள்ள செயலக அதிகாரிகள், கணிணி வாயிலாகத் தமிழை
முழுமையாகப் பயன்படுத்தாமல், ஆங்கிலத்திலேயே அறிக்கைகள், புள்ளி விவரங்கள்
கேட்பதால் தமிழுக்கான வாயில் இழுத்து மூடப்பட்டது. மத்திய அரசிற்கு
அறிக்கைள் அளிக்க வேண்டும் என்ற போர்வையில் மாநிலத் தன்னுரிமை
கேட்பவர்களால் தமிழுரிமை அடகு வைக்கப்பட்டு ஆங்கிலத்திலேயே சார்நிலை
அலுவலகங்களில் இருந்து விவரங்கள் கேட்பது பெருகிவிட்டது.
எனவே, தமிழ்ப்படிவங்களுக்கு வேலையின்றிப் போய்விட்டது.
அரசில் இருந்து செல்லும் எல்லாம்
தமிழாக இருந்தால் கடைநிலைவரை தமிழ்தானே ஆட்சி செய்யும். அரசு
விடுமுறைப்பட்டியல் கூட இதுவரை தமிழில் வந்ததில்லை என்னும்பொழுது தமிழ்
ஆட்சிமொழிச் செயலாக்கம் என்பது கனவேயன்றி வேறில்லைதானே! தமிழ் தொடர்பான
எல்லா ஆணைகளுமே பெயரளவிற்குத்தான் நடைமுறையில் உள்ளன. அரசே தன் ஆணைகளைப்
புறந்தள்ளி ஆங்கிலத்திற்குக் குடைபிடித்தால் ஆங்கில நிழலில் தமிழ்
தளிர்க்குமா?சான்றுக்குச் சிலவற்றைப் பார்ப்போம். தமிழில் கையொப்பம்
இடவேண்டும் என்று ஓர் ஆணை. இந்த ஆணைகூட ஒப்புக்குச் சப்பாணி ஆணைதான்.
எனவேதான் 21.6.1978 இல் ஆங்கிலத்தில் பிறப்பிக்கப்பட்ட இந்த ஆணையில்கூடத்
தமிழில் கையொப்பம் இடப்படவில்லை. தமிழில் கையொப்பம் இடும் ஒருசாரார் கூட
ஆங்கிலக் கோப்புகளிலும் நிதி தொடர்பானவற்றிலும் தமிழில் கையொப்பம்
இடுவதில்லை. முதல்எழுத்து அல்லது தலைப்பெழுத்துகளும் தமிழில் குறிக்கப்பட
வேண்டும் என்றும் 16.9.98 இல் ஆணை பிறப்பிக்கப்பட்டும் பயனில்லை.
அனைவருக்கும் முன்மாதிரியாக அமைச்சர்கள், செயலர்கள், துறைத்
தலைவர்கள், ஆட்சியர்கள் தங்கள் பெயர்களைத் தமிழ் முதலெழுத்துகள் மூலமே
குறிக்க வேண்டும். நல்ல தமிழ்ப்பெயர்கள் உடையவர்கள்கூட ஆங்கில
முதலெழுத்தைத்தான் பயன்படுத்துகின்றனர். இதனால் அவர்களின் தந்தை அல்லது
பெற்றோரையே மாற்றிக்கூறும் இழிநிலை இருப்பதுகூட அவர்களுக்குப் புரியவில்லை.
(கபிலனின் மகன் முதல் எழுத்தாகக் க எனக் குறிக்காமல் கே எனக் குறித்தால் கே என்னும் எழுத்தில் தொடங்குபவரின் மகனாக மாறிவிடுகிறார் அல்லவா?)
ஊர்திகளில் பதிவுவிவர எழுத்துகளைத் தமிழில் குறிக்க வேண்டும் என்று ஆணை
பிறப்பிக்கப்பட்டது. ஆனால்,அமைச்சர்களோ உயர் அலுவலர்களோ அதனைப்
பின்பற்றவில்லை. பிறர் எங்கே பயன்படுத்துவர்? பிற மாநில அல்லது பிற நாட்டு
ஊர்திகளில் அவர்கள் மொழியிலேயே எண்கள் குறிக்கப்படுவதைக் காண முடிகிறது.
நம் நாட்டில் தமிழ் எண்களைக் குறித்தால் காவல்துறை தடுக்கிறது. வெறும்
கையொப்பங்களால் அல்லது ஊர்தி எண் பலகைகளில் மட்டும் தமிழ் வாழாதுதான்.
ஆனால் அங்குகூடத் தமிழுக்கு இடமில்லை என்பதை நாம் உணரவேண்டும்.
ஆட்சிமொழி என்பது என்ன? அரசில் மட்டும் தமிழ் இடம்பெறுவதா? நாட்டில்
அனைத்து இடங்களிலும் அனைத்துத் தரப்பாராலும் தமிழ் பயன்படுத்துவதுதானே!
ஆனால், அரசிலாவது ஓரளவு தமிழைப் பார்க்க முடிகிறது. தமிழ்நாட்டிலுள்ள
மத்தியஅரசு அலுவலகங்கள், பிற மாநில அலுவலகங்கள், அயல்நாட்டு
அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள் ஆகியவற்றில் தமிழுக்கு முற்றிலும்
தடைதான். பெயர்களுக்கு முன்னால் குறிக்கப்பெறும் திரு முதலானவை
பயன்படுத்தப்படவும் தடைதான்.
பெயர்ப்பலகைகள் தமிழில் இருக்க வலியுறுத்திச் சட்டம் இருப்பினும் காணும்
இடமெல்லாம் கவின்மிகு தமிழைக் காண இயலவில்லையே! செம்மொழி மாநாட்டை
முன்னிட்டு நாடெங்கும் பெயர்ப்பலகைகளையும் விளம்பரப் பலகைகளையும் தமிழில்
வைத்திருக்கச் செய்திருக்கலாமே! சென்னை மாநகராட்சி யின் முந்தைய தலைவர்
முயற்சியால் ஓரளவு சென்னையில் தமிழ்ப் பெயர்ப்பலகைகளைக் காண முடிகிறது.
ஆனால் முழுமையும் தமிழ் மணக்கும் சூழல் இல்லை.
இவ்வாறு ஒவ்வொரு பிரிவாகப் பார்த்தால் தமிழ் சில இடங்களில்
பெயரளவிற்கும் பல இடங்களில் மறைக்கப்பட்டும் காட்சியளிப்பதைக் காணலாம்.
போனவை போகட்டும்! இனியாவது தமிழ்நாட்டில் தமிழகஅரசு, மத்திய
அரசு, தனியார்,அயலகம், என்ற வேறுபாடின்றி அன்னைத்தமிழே ஆட்சி செய்ய என்ன
செய்யலாம் எனப் பார்ப்போம்.
தவணை முறையில் ஆட்சிமொழிச் செயலாக்கத்திற்கு வழி வகுக்கும் தற்போதைய சட்டத்தால் எப்பயனும் இல்லை. எனவே,
1. தமிழில் உள்ள
ஆணைகள், வரைவுகள், ஒப்பந்தங்கள், உடன்படிக்கைகள், படிவங்கள்,நிதியாணைகள், காசோலைகள், வரைவோலைகள்
முதலியன மட்டுமே செல்லத் தக்கன எனப் புதிய சட்டம் பிறப்பிக்க வேண்டும்.
2. பிறப்புச் சான்றிதழ்கள் பதியும் பொழுதே தமிழ் முதல்
எழுத்துகளுடன் பெயர்களைப் பதிய சட்டம் இயற்றி, அனைத்து இடங்களிலும்
பெயர்கள் தமிழ் முதல் எழுத்துகளுடன் தமிழில் குறிக்கப்பட்டால் மட்டுமே
செல்லத்தக்கன என நடைமுறைப்படுத்த வேண்டும்.
3. தமிழ்நாட்டிலுள்ள எந்த அலுவலகமாயினும் அதன் அலுவல் மொழி
தமிழாகத்தான் இருக்க வேண்டும். தமிழ் நாட்டிற்கு அப்பால் தொடர்பு
கொள்ளும் பொழுது மட்டும் அதன் தலைமை அலுவலகம் எந்த மொழிப் பகுதியைச்
சார்ந்தததோ அந்த மொழியை அல்லது ஆங்கிலத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என
விலக்கு அளிக்க வேண்டும்.
4. தமிழ் நாட்டிலுள்ள வணிக நிறுவனங்கள் கடைகள் தமிழிலேயே விலைச்சீட்டு பற்றுச் சீட்டு முதலானவற்றை அளிக்க வேண்டும்.
5. தமிழ் நாட்டில் விற்பனையாகும் எந்தப் பொருளாயினும் அதன்
பெயர், விலை, பொருள் விவரம் முதலான யாவும் தமிழில் அல்லது தமிழிலும் இருக்க
வேண்டும்.
6. தமிழ் நாட்டிலுள்ள
பெயர்ப்பலகைகள், விளம்பரப்பலகைகள், அமைப்புகள் நிறுவனங்கள் முதலானவற்றின்
பெயர்கள், அவற்றின் சுருக்கப் பெயர்கள் தமிழில் அல்லது பிற மொழி
தேவைப்படும் இடங்களில் தமிழுக்கு முதன்மை அளித்து இருக்க வேண்டும்.
7. தமிழ்நாட்டில் தமிழே ஆட்சி செய்ய வேண்டும் என்பது தமிழ்
மக்கள்உணர்விற்கேற்ப அரசு எடுத்த கொள்கை முடிவு. எனவே, இதைஎதிர்த்து
நீதிமன்றம் செல்ல இயலாது. அவ்வாறு எதிர்ப்பவர்கள் தமிழ்நாட்டில் வணிகமோ
கல்வ நிறுவனமோ அமைப்போ நடத்த இயலா வண்ணம் அவர்களின் உரிமம் அல்லது
ஏற்பிசைவு நீக்கம் செய்யப்படும் என்றும் அறிவிக்க வேண்டும்.
இவற்றை நடைமுறைப்படுத்தும் வகையில் ஒரே ஒரு சட்டம் இயற்றினால்
போதுமானது. வேறு எந்த விரிவான சட்டமும் தேவையில்லை. தானாகவே தமிழ்
அரியணையில் அமரும். இவற்றிற்கிணங்கத் தமிழ் என வாயளவில் பேசும் கட்சிகளும்
தமிழ் மக்களால் பயன்பெறும்கட்சிகளும் தமிழ் இயக்கங்களும் தமிழ்
அமைப்புகளும் இவற்றைப் பி்ன்பற்றாதவர்கள் தங்கள் கட்சி அல்லது இயக்கம்
அல்லது அமைப்பில் நீடிக்கும் தகுதியை இழப்பதாக அறிவித்து அவர்களை
உடனடியாக விலக்கி வைக்க வேண்டும்.
இன்றைய முதல்வர் முதல்முறை முதல்வராக இருந்த பொழுது உலகின் முதல் மொழி தமிழ் மொழி; உலகின் முதல் இனம் தமிழினம்; எனக்
குறிப்பிட்டுப் பேசி உள்ளார். அத்தகைய மூவாச் சிறப்பு உடைய முதல் மொழி
என்றும் வாழ,ஆட்சிப் பீடத்தில் அன்னைத் தமிழ் உண்மையாய் அமர உடனே நடவடிக்கை
எடுக்க வேண்டும்.
அரசினரின் மொழியாக, அரசியலார் மொழியாக, அரசியல் சார்
வரிசையுறு சட்டமன்றின் மொழியாக, வையம்அறி மொழிய தாகத்
திருமலிந்த தமிழ்மொழிதான் ஆகும்வகை (பாவேந்தர் பாரதிதாசன்)
அரசு உரிய பணிகளை ஆற்ற வேண்டும். தமிழ்த் தேசிய உணர்வாளர்களாலும்
அவர்களின் பரப்புரைப் பணிகளாலும் ஆட்சியில் அமர்ந்துள்ள அரசு தமிழ்த்தேசிய
உணர்வை வளர்த்தெடுக்கும் வகையில் வாக்காளர்களுக்கு நன்றிக்கடனாகவாவது தமிழ்
ஆட்சிமொழித்திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்த வேண்டும். வாழ்க்கை நலத்
திட்டங்களை நடைமுறைப்படுத்தத் தொடங்கி உள்ள அரசு தமிழ்நலத்திட்டங்களைச்
செயல்படுத்த வேண்டும். அவற்றுள் முதல்பணியாகத் தமிழ்நாட்டில் தமிழ் மட்டுமே
ஆட்சி மொழி என்னும் நிலையை நடைமுறைப்படுத்த வேண்டும். அதனால் தமிழன்னைக்கு
ஏற்படும் மலர்ச்சி தமிழ்நாட்டை வளர்ச்சிப்பாதையில் இட்டுச் செல்லும்.
எதிர்பார்ப்பு நிறைவேறும் அல்லவா?
தமிழுண்டு தமிழ்மக்க ளுண்டு – இன்பத்
தமிழுக்கு நாளும்செய் வோம்நல்ல தொண்டு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக