தற்போதைய செய்திகள்
குன்னூரில் இலங்கை இராணுவத்தினர்: நாளை கருத்தரங்கில் கலந்து கொள்வதால் பரபரப்பு
First Published : 15 Jul 2012 02:59:29 PM IST
Last Updated :
15 Jul 2012 05:48:53 PM IST
குன்னூர்,
ஜூலை 15: இலங்கை ராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கக் கூடாது
என்று தமிழக முதல்வர் உள்பட எதிர்க்கட்சிகள் பலவும் எதிர்ப்புக் குரல்
எழுப்பின. இந்நிலையில், தமிழகத்தில் அவர்கள் பயிற்சி பெற இருந்தது,
பெங்களூருக்கு என்று மாற்றி அமைக்கப்பட்டது. இதற்கும் எதிர்ப்புக் குரல்
எழுந்தது. இந்தியாவில் எங்குமே இலங்கை ராணுவத்தினர் பயிற்சி பெறக்கூடாது
என்று கண்டனங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடந்து வருகின்றனர்.குன்னூருக்கு அருகே கொடநாடு பகுதியில் தமிழக முதல்வர் தங்கியுள்ளார். அவரைக் காண அமைச்சர்கள் பலரும் வந்து சென்றுள்ளனர். இந்நிலையில்,
குன்னூரில் தாஜ் ஹோட்டலில் இலங்கை ராணுவ அதிகாரிகள் 4 பேர் வந்து
தங்கியுள்ளனர். இவர்களுக்கு குன்னூரில் எம்.ஆர்.சி எனப்படும் மெட்ராஜ்
ரெஜிமெண்ட் செண்டரில் பயிற்சி வகுப்பு இருப்பதாகவும், அவர்கள் இன்று
குன்னூரில் சுற்றுப் பயணம் செய்துவிட்டு, நாளை நடக்கும் வகுப்பு மற்றும்
கருத்தரங்கில் கலந்து கொள்வர் என்று தெரிவிக்கப்பட்டது.இலங்கையில்
தமிழர்களுக்கு எதிராக போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இலங்கை ராணுவத்துக்கு
எதிராக, தமிழகத்தில் ஆர்ப்பாட்டங்கள் எதிர்ப்பு என அரசியல் சூழ்நிலை
நிலவும்போது, இந்தச் செய்தி குன்னூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வரும் அந்தப் பகுதியில் தங்கியிருப்பதால், இது பெரும் பிரச்னையை
ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. இந்நிலையில், இதற்கு
எதிர்ப்புக் குரல் எழுந்ததை அடுத்து, போலீஸார் தாஜ்-கேட் வே விடுதிக்கு
முன்னர் குவிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு அந்தப் பகுதியில்
பலப்படுத்தப்பட்டுள்ளது.
7/15/2012 3:46:00 PM
7/15/2012 3:43:00 PM
தமிழ்நாட்டில் நடைபெறும் ராணுவ முகாமிற்கு இலங்கை அதிகாரிகளை அனுமதித்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ராணுவ தகவல் பரிமாற்றம் தொடர்பான பயிற்சி முகாம் குன்னூரில் நாளை நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக இலங்கை, வங்கதேசம், சீனாவைச் சேர்ந்த் 40 ராணுவ அதிகாரிகள் குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவக் கல்லூரிக்கு வந்துள்ளனர்.
இதில் இலங்கை சார்பில் 4 அதிகாரிகள் வந்துள்ளனர். ஏற்கனவே தமிழகத்தில் உள்ள தாம்பரம் முகாமில் இலங்கை விமானப்படை வீரர்கள், பயிற்சி பெற்றபோது கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து அந்த வீரர்களை மத்திய அரசு வாபஸ் பெற்றது.
இந்நிலையில் இலங்கை அதிகாரிகள் வெலிங்டன் ராணுவ கல்லூரிக்கு வந்திருப்பது, மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அங்கிருந்து இலங்கை அதிகாரிகளை உடனே வெளியேற்ற வேண்டும் என்று பெரியார் திராவிடர் கழகம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளன.
இலங்கை அதிகாரிகளை வெளியேற்றாவிட்டால் வெலிங்டன் கல்லூரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்றும் பெரியார் தி.க. எச்சரித்துள்ளது.