செவ்வாய், 17 ஜூலை, 2012

புலிகள் மீது தடையை நீட்டித்து தமிழீழ விடுதலையை முடக்கிட முடியாது

புலிகள் மீது தடையை நீட்டித்து தமிழீழ விடுதலையை முடக்கிட முடியாது: நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் கட்சி
1 vote, average: 5.00 out of 51 vote, average: 5.00 out of 51 vote, average: 5.00 out of 51 vote, average: 5.00 out of 51 vote, average: 5.00 out of 5 (1 votes, average: 5.00 out of 5, rated)

இலங்கை சிங்கள பெளத்த இனவெறி அரசின் தமிழின அழிப்புப் போருக்கு எல்லா வகையிலும் உதவி, தமிழனைக் கொன்று குவித்த குருதிக் கரைபடிந்த இந்திய மத்திய காங்கிரஸ் அரசு, தமிழீழ மக்களின் விடுதலைக்காக தொடர்ந்து போராடிவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டிப்பதாக அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலர் தர்மேந்திர சர்மா கையெழுத்திட்டு விடுத்துள்ள அந்த அறிவிக்கையில், இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாட்டை தொடர்ந்து கடைபிடித்துவரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தால், இந்திய குடிமக்களுக்கு பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதாகவும், எனவே புலிகள் இயக்கத்தை சடடத்திற்குப் புறம்பான இயக்கமாக அறிவிக்க வேண்டிய அவசியம் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்திய உள்துறை அமைச்சகத்தின் இந்த வாதம் எந்த சான்றும் அற்ற, திட்டமிட்ட திசை திருப்பல் ஆகும். இலங்கையில் தமிழருக்கு எதிரான போரை நடத்த ராஜபக்சவுக்கு முழுமையாக உதவி, ஒன்றே முக்கால் இலட்சம் தமிழர்களை அழித்தொழிக்க இந்திய மத்திய காங்கிரஸ் அரசு உதவியது என்பதை உலகே அறியும். ஆனால் அந்த அளவிற்கு உதவியும், ராஜபக்ச அரசு இந்தியாவோடு நிற்காமல், முழுமையாக சீனாவின் நட்பு நாடாக மாறிவிட்டது. அம்மன்தோட்டா துறைமுகத்தில் இருந்து, இலங்கையில் பல திட்டங்களை செயல்படுத்துவது மூலம் அந்நாட்டிற்குள் சீனா வலிமையாக கால் பதித்து விட்டது. தமிழ்நாடு அரசின் ஒப்புதலின்றி தாரை வார்க்கப்பட்ட கச்சத் தீவில் சீனா தனது கடைப்படை தளத்தை அமைக்க முயற்சித்து வருவதை தமிழ்நாட்டின் மீனவர்களுக்குக் கூட தெரிந்து இரகசியமாகும். இலங்கை பிரச்சனையில் தமிழினத்திற்கு எதிராக இந்திய மத்திய காங்கிரஸ் அரசு கடைபிடித்த அயலுறவுக் கொள்கை, அதன் எதிரி நாடான சீனா இலங்கையில் வலிமையாக கால் பதிக்க உதவிவிட்டது. இப்போது சீனத்தின் அச்சுறுத்தல் வளையத்திற்குள் இந்தியாவின் தென்பகுதி சிக்கியுள்ளது என்பதே இராணுவ ரீதியான உண்மையாகும். சீனாவிற்கு ஆதரவாக ராஜபக்ச அரசு செயல்பட்டுவருவதன் எதிரொலியே அமெரிக்காவும், இந்தியாவும் ஒன்றாக நின்று ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இலங்கை அரசுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை தீர்மானத்திற்கு வாக்களித்தன. ஆயினும் சீன நட்பை உதரித்தள்ள ராஜபக்ச இணங்கவில்லை. இலங்கையின் வட பகுதியில் உள்ள பலாலி விமான தளத்தை விரிவுபடுத்தும் இந்தியாவின் திட்டத்தை ராஜபக்ச அரசு நிராகரித்துவிட்டது அதற்கு அத்தாட்சியாகும். எனவே விடுதலைப் புலிகளால் இந்தியாவின் குடிமக்களுக்கு அச்சுறுத்தல் என்று உள்துறை அமைச்சகம் கூறுவது சீனத்தால் ஏற்பட்டுள்ள அச்சறுத்தலை மறைக்கும் மோசடியாகும்.

விடுதலைப் புலிகளின் தோல்விக்கு இந்திய அரசின் தலைவர்களும், அதிகாரிகளும்தான் காரணம் என்று புலம் பெயர்ந்த தமிழர்கள் இணையத் தளங்களில் பரப்புரை செய்து வருகின்றனர் என்று குற்றம் சாற்றுகிறது உள்துறை அமைச்சகத்தின் அறிவிக்கை. அதில் என்ன பிழை உள்ளது என்று தெரியவில்லை. தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தை அழித்தொழிக்க, அவர்களோடு நின்ற ஒன்றே முக்கால் இலட்சம் தமிழர்களை அழித்தொழிக்க இந்திய மத்திய காங்கிரஸ் அரசு உதவியதா இல்லையா? எம் இனத்தை அழித்தொழித்த அரசுக்கு எதிராக பரப்புரை செய்வதில் என்ன தவறு?

போரில் தோற்கடிக்கப்பட்ட பிறகும் ஈழ விடுதலை எனும் கருத்தை விடுதலைப் புலிகள் இயக்கம் கைவிடவில்லை என்றும், ஈழ விடுதலைக்காக இன்றளவும் அது இரகசியமாக செயல்ப்பட்டு வருகிறது என்றும் கூறியுள்ள உள்துறை அமைச்சக அறிக்கை, தமிழீழம் எனும் தமிழர்களுக்காண தனி நாடு என்ற கோரிக்கை இந்தியாவின் ஒற்றுமைக்கு இறையாண்மைக்கும் அச்சறுத்தல் என்றும் அது இந்தியாவை பிளவுபடுத்தும் நோக்கம் கொண்டது என்றும் கூறியுள்ளது.

தமிழீழ விடுதலை என்பது அரை நூற்றாண்டுக் காலமாக நடந்துவரும் அரசியல் விடுதலைப் போராட்டம். தங்களுடைய இனத்தை திட்டமிட்டு அழித்துவரும் சிங்கள பெளத்த இனவாத அரசின் பிடியில் இருந்து விடுபட்டு தனிநாடு காண்பது மட்டுமே, ஈழத் தமிழினத்தை அழிவின் பிடியில் இருந்து காத்துக்கொள்வதற்கான ஒரே வழி என்பதில் உறுதியுடன் இருந்து எம் சொந்தங்கள் நடத்திவரும் போராட்டமாகும். அதற்காகவே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பிறந்தது. எனவே, அந்த இலக்கை புலிகள் இயக்கம் மட்டுமல்ல, தமிழினம் ஒருபோதும் விட்டுத்தராது. அதனால்தான் தமிழர்களின் பெரும் தாயாகமான தமிழ்நாட்டில் தமிழீழ விடுதலைக்கு பெரும் ஆதரவு நிலவுகிறது. அதன் எதிரொலியே தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ்   திமுக கூட்டணிக்கு விழுந்த மரண அடி என்பதை இந்திய மத்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும்.

தங்களது இயக்கம் இந்தியாவின் ஒற்றுமைக்கோ, அதன் இறையாண்மைக்கோ அல்லது அதன் பூகோள நலன்களுக்கு ஒருபோது எதிரானதல்ல என்பதை தமிழீழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன், சுதுமலை பொதுக்கூட்டத்தில் இருந்து தான் ஆற்றிய பல மாவீரர் தின உரைகளில் உறுதிப்படுத்தியுள்ளார். எனவே இலங்கையில் தமிழர்கென்று தனி நாடு என்பது அங்கு வாழும் இஸ்லாமிய தமிழர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆனதே என்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் அழுத்தம் திருத்தமாக பல முறை கூறியுள்ளனர். அதனை நன்றாக அறிந்திருந்தும், அவர்களின் இலக்கு இந்தியாவின் ஒற்றுமைக்கும் இறையாண்மைக்கு எதிரானது என்று ஒவ்வொரு முறையும் இந்திய மத்திய அரசு கூறுவது, அப்படிக் கூறினால்தான் அந்த இயக்கத்தை தடை செய்ய முடியும் என்பதற்காகவும், தமிழீழ விடுதலைக்கு தமிழ்நாட்டு மக்கள் உதவிடாமல் தடுத்திட முடியும் என்பதற்காகவுமே என்பதை விவரமறிந்த அனைவரும் புரிந்தே உள்ளனர்.

இலங்கைத் தமிழர்கள் நலனில் அக்கறை உள்ளதாகக் கூறி தமிழினத்தை ஏமாற்றிவருகிறது மத்திய காங்கிரஸ் அரசு. போர் முடிந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்ட பிறகும், அவர்களுக்கு ஒரு நேர்மையாக அரசியல் தீர்வை பெற்றுத் தர யோக்கியதை அற்ற இந்திய அரசு, இலங்கை அரசுடன் இணைந்து தான் நடத்திய தமிழினப் படுகொலையை மறைக்க, ஈழத் தமிழினத்தின் விடுதலைக்காகப் போராடிய ஒரு தியாக இயக்கத்தை சட்டத்திற்கு எதிரான இயக்கம் என்று கூறி தடை செய்வவது, அது தனது குற்ற முகத்தை மூடிக்கொள்ளும் முயற்சியே தவிர, அதனால் தமிழீழ விடுதலையை தடுத்து நிறுத்திட முடியாது. இந்தியாவின் பூகோள நலனும், பாதுகாப்பும் உறுதியாக வேண்டுமெனில் இலங்கையில் தமிழர்கென்று ஒரு நாடு பிறந்தால் மட்டுமே சாத்தியமாகும் என்பதையும், தெற்காசியப் பகுதியில் மாபெரும் இராஜதந்திர தோல்வியை சந்தித்துள்ள இந்திய மத்திய அரசு, தமிழீழ விடுதலையை ஆதரிக்கும் காலக்கட்டாயம் ஏற்படும் என்பதையும் நாம் தமிழர் கட்சி அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்துக்கொள்கிறது.

நாம் தமிழர் கட்சிக்காக,


செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக