ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010


திராவிட சகாப்தம் முடியாது: முதல்வர் கருணாநிதி

First Published : 01 Aug 2010 12:43:17 AM IST

Last Updated : 01 Aug 2010 01:36:07 AM IST
சென்னை, ஜூலை 31: ஓர் ஆட்சி முடியலாம்; ஆனால், திராவிட சகாப்தம் முடியாது என்று முதல்வர் கருணாநிதி பேசினார்.சென்னையை அடுத்த மீஞ்சூரில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை சனிக்கிழமை தொடங்கிவைத்து முதல்வர் கருணாநிதி பேசியது:சென்னை மக்களுக்கு குடிநீர் வசதியை எப்படி ஏற்படுத்தித் தருவது, அவர்களுக்கு தட்டாமல், தவறாமல் தாகத்துக்குத் தேவையான தண்ணீரை அளிக்க யோசித்தபோது  உருவானதுதான் இந்தத் திட்டம். காங்கிரஸ் ஆட்சியிலேயே கூட பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டபோதும், குடிநீர்த் தேவையைப் போக்க இன்னும் பல திட்டங்கள் தேவைப்பட்டன. இதனால், மறைந்த நண்பர் தங்கப்பனை தலைவராகக் கொண்டு குடிநீர் வடிகால் வாரியம் தொடங்கப்பட்டது.ஓர் இரவில் 12 ஆயிரம் குழாய்கள்இதன் மூலம் ஓரளவு குடிநீர் தேவை தீர்க்கப்பட்டது. மறைந்த வேலூர் நாராயணன், சென்னை மாநகர மேயராக இருந்தபோது வறட்சி கடுமையாகத் தாக்கியது. குடிநீர் இல்லாமல் மக்கள் சங்கடப்பட்டனர். அப்போது நான் முதல்வராக இருந்தேன். அந்த சமயத்தில் சென்னை நகரம் முழுவதும் ஒரே நாள் இரவில் 12 ஆயிரம் குழாய்கள் அமைக்கப்பட்டன. சென்னை மக்களின் தேவைகளை, அதிலும் குறிப்பாக தண்ணீர் தேவைகளை தீர்த்துவைக்கக் கூடிய ஆர்வமும், அக்கறையும் எனக்கு பலமடங்கு உள்ளது. இந்த 12 ஆயிரம் குழாய்கள் ஒரே நாள் இரவில் அமைக்கப்பட்டும் கூட சென்னை நகரின் குடிநீர் தேவை என்பது தீர்ந்தபாடில்லை.கிருஷ்ணா நீர் வேண்டும் என்று கேட்டு ஆந்திர அரசோடு பேச்சுவார்த்தை நடத்தினோம். எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்திலேயே கூட இதற்கான முயற்சிகள் நடந்தன. அப்போது வராத தெலுங்கு கங்கை தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்டது.அந்தத் திட்டம் ஓரளவுக்கு வெற்றிகரமாக முடிந்து, சென்னை நகர மக்களுக்கு கிருஷ்ணா நீரும் கிடைத்தது. ஆனாலும், குடிநீர்ப் பிரச்னை தீரவில்லை; காரணம், மக்கள்தொகைப் பெருக்கம்.கிருஷ்ணா நீரும் சரியாக கிடைக்கவில்லை என்ற நிலை வந்தபோது, நமது கவலையை உணர்ந்து புட்டபர்த்தி சாய்பாபா நேரில் வந்து தெலுங்கு கங்கை திட்டத்தில் உள்ளகுறைகளை அகற்ற முயற்சி செய்வதாகக் கூறினார். இந்தத் திட்டத்தை முழுமைப்படுத்த அவரும் முயற்சிகள் மேற்கொண்டார்.பக்கத்து மாநிலங்களின் தயவு தேவைதமிழகத்தில் நீர், நில வளம் நிரம்ப இருப்பதாக அழகுக்காக சொல்கிறார்கள். ஆனால், நீர் வளம் இல்லாத மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. தண்ணீருக்காக பக்கத்து மாநிலங்களைதேடிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆந்திரத்தில் கிருஷ்ணா நீரும், கர்நாடகத்தில் காவிரியின் தயவும் தேவைப்படுகிறது. பக்கத்து மாநிலங்கள் உதவினால்தான் தண்ணீர் தேவை நிறைவேற்றப்படும் என்ற நிலை உள்ளது.அதனால் ஏற்படும் சண்டை, சச்சரவுகளை நீங்கள் அறிவீர்கள். அண்டை மாநிலங்களில் நல்லுறவு வைத்திருப்பதால், தண்ணீரில் நம்முடைய பங்கைப் பெற நியாயமான, சட்ட ரீதியான வழிகளைக் கையாள்கிறோம்.அண்டை மாநிலங்களுடன் நட்புறவு கொண்டு தேவைகளை நிறைவேற்றி வருகிறோம். மழை இல்லாவிட்டால் தென்னகம் முழுவதும் தண்ணீர்த் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை உள்ளது. கர்நாடகத்தில் மழைபொழிந்தால்தான் நமக்கு தண்ணீர் தருவோம் என்கிறார்கள். மழை பொய்த்துவிட்டால் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்ய பெரிய முயற்சிகளைச் செய்ய வேண்டும் என நினைத்து அதில் ஈடுபட்டு பெற்றுள்ள வெற்றிகளில் இதுவும் ஒன்று.நீர் வளம் இல்லாவிட்டால், நில வளமும் இருக்க முடியாது. தண்ணீர்த் தேவையைப் பூர்த்திசெய்ய நிறைவேற்றப்படும் காரியங்களில் இதுவும் ஒன்று.  கடல் நீரை குடிநீராக மாற்றி சென்னை நகர மக்களுக்கு இங்கு கொடுக்கிறார்கள். இதுபோன்ற திட்டங்களை அரசு தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது.ஆட்சி தொடரும்நெமிலி பகுதியில் இதுபோன்ற ஒரு திட்டத்தை சென்னையின் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்போவதாக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.  இதேபோன்று ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டமும் 2011-12 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது.இந்த ஆட்சிக்கே இன்னும் ஓராண்டு ஆயுள்தானே! இரண்டாண்டு காலத்தில் எப்படி இந்தத் திட்டம் நிறைவேறும் என்ற கேள்வி எழலாம். ஓர் ஆட்சி முடியலாம்; ஆனால், திராவிட சகாப்தம் முடியாது.இதுபோன்ற ஆட்சிகள் என்னுடைய தலைமையிலோ, அல்லது வேறு யார் தலைமையிலேயோ தொடரும்; திராவிட என்ற அடைமொழியை முன்னதாகக் கொண்ட எல்லாக் கட்சிகளுக்கும் இது பொருந்தாது.திராவிடம் என்பது ஓர் இன உணர்வு. இதைக் கொண்டு ஆட்சியின் வழியாக பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இதுபோன்ற ஒரு அரசுக்குத் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என்றார் முதல்வர் கருணாநிதி.துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.மீன்வளத் துறை அமைச்சர் கே.பி.பி. சாமி, தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி, சென்னை குடிநீர் வாரியத்தின் மேலாண் இயக்குநர் சிவதாஸ் மீனா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைச் செயலாளர் அசோக்வர்தன் ஷெட்டி, சென்னை வாட்டர் டிசாலிநேசன் லிமிடெட் இயக்குநர் எஸ்.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.சென்னையை அடுத்த மீஞ்சூரில் அமைக்கப்பட்டுள்ள கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தை சனிக்கிழமை தொடங்கிவைக்கிறார் முதல்வர் கருணாநிதி. உடன் (இடமிருந்து) சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் சிவதாஸ் மீனா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் அசோக்வர்தன் ஷெட்டி, துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி, மீன்வளத் துறை அமைச்சர் கே.பி.பி. சாமி, சென்னை மாநகர மேயர் மா. சுப்பிரமணியன்.
கருத்துக்கள்

கலைஞர் காலம் என்றோ தி.மு.க. காலம் என்றோ சொலலாமல் திராவிடர் காலம் எனக் கூறுவதன் மூலம் திராவிடக் கட்சிகள் ஆட்சியில் அமரலாமே தவிர 67இல் விரட்டியடிக்கப்பட்ட காங்.எக்காலமும் ஆட்சியில் அமராது என விளக்கியுள்ள கலைஞருக்குப் பாராட்டுகள். ஆனால், பல இடங்களில் திராவிடம் என்பது தமிழை மட்டுமே குறிக்கிறது. இவ்வாறான உரைகளில் தமிழ்க்குடும்பத்தைக் குறிக்கிறது. ஆனால், தமிழ்க் குடும்ப மொழியினர் இவ்வாறு தங்களைச் சொல்லிக் கொள்வதில்லை. எனவே, திராவிடத்தைத் தூக்கி எறிவதே நன்று. இனிமேல் தமிழியத்தைத் தாங்கிப் பிடிப்போம். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/1/2010 2:22:00 AM
ஜெயலலிதா நிறைவேற்றிய வீராணம் திட்டத்தை பற்றி கருணாநிதி ஒரு வார்த்தை பேசவில்லையே ,ஏன் ?இதுதான் கருனாகநிதியின் காய்தல் ,உவத்தல் இல்லாத செயல்பாடா ?
By Er.L.C.NATHAN
8/1/2010 1:52:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக