வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010


முற்பகல் செய்யின் பிற்பகல் விளையு் ம் என்பதை நன்றாகவே உணர்த்தியுள்ளார். பேச்சு அருமையாக உள்ளது. இருப்பினும் மறு பக்கத்தையும் பார்க்க வேண்டும். கடந்த வாரத்தில் உறவினர் ஒருவர்  சுவாமி மலை செல்லும் பேருந்தில் தன் வளையல்களைப் பறி கொடுத்தார்.  வழக்கினைப் பதிவு செய்யாமல் ஒவ்வொரு காவல்நிலையமாக அலைக்கழிக்க வேறு வழியின்றி வழக்கினைப் பதிவு செய்யாமேலேயே ஊர் திரும்பினார் அவர். அப்படியானால், குற்றம எங்கு நடந்திருந்தாலும் பதிவு செய்ய அறிவுறுத்தும் காவல் துறை ஆணைக்கு மதிப்பு எதுவும்  உண்டா? இது போன்ற பாதிப்புகளைத் திரைஉலகம் வெளிப்படுத்தும் பொழுது  காவல்துறையினரிடமாவது விழிப்புணர்வு ஏற்படும்  அல்லவா? காவல்துறை தூய்மையான துறை அல்ல! அதே நேரம் காவல்துறை மட்டும்தான்  ஊழல் துறை என்று பொருளல்ல!  காவல்துறை, நீதித்துறை, ஆட்சித்துறை, சிறைத்துறை, வரித்துறை முதலியன நேர்மையாக நடைபெற்றால் நாடே நேர் வழிக்கு மாறும். எனவே,. திரைத்துறை இதற்கு வழி வகுத்தால் பாராட்ட வேண்டும். திரு சிவனாண்டி  கூறுவதுபோல் ஒவ்வொரு காவலரும் மக்கள் காவலராக மாற வேண்டும். இதற்கான திட்டங்களைப் பிற மாவ்டத்தினரும்  பின்பற்ற வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
+++++++++++++++
சினிமாக்காரர்களால் போலீஸ் பற்றி தவறான "இமேஜ்' : ஐ.ஜி., சிவனாண்டி ஆதங்கம்







எழுத்தின் அளவு:   A+  A-
print e-mail   Buzz  Share  
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 05,2010,23:18 IST

பொள்ளாச்சி : ""சினிமாக்காரர்களால் மக்களிடையே போலீஸ் பற்றி தவறான "இமேஜ்' ஏற்பட்டுள்ளது'' என, கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி., சிவனாண்டி ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

பொள்ளாச்சி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இலக்கிய மன்ற துவக்க விழா, பணி நிறைவு பெற்ற தலைமையாசிரியருக்கு பாராட்டு விழா நடந்தது. நகராட்சி தலைவர் ராஜேஸ்வரி தலைமை வகித்தார். இலக்கிய மன்றத்தை துவக்கி வைத்து கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி., சிவனாண்டி பேசியதாவது: வாழ்க்கை என்பது எதிரொலி போன்றது. வாழும் காலத்தில் எதை பேசுகிறோமோ, செய்கிறோமோ அவை தான் நமக்கு திரும்ப வந்து சேரும். நல்லது செய்திருந்தால், நமக்கும் நல்லதே நடக்கும். மற்றவர்களுக்கு தீங்கு செய்து, தவறுகள் செய்திருந்தால் அதற்கான பலனை நிச்சயம் அனுபவிக்க நேரிடும். அதனால் வாழும் காலத்தில் நல்லது செய்தல், உண்மை பேசுதல் போன்றவற்றை மாணவர்கள் கடைபிடிக்க வேண்டும்.

போலீஸ் அதிகாரிகள் பள்ளி, கல்லூரி விழாக்களில் அதிகம் கலந்து கொள்ளாமல் இருந்தனர். சினிமாக்காரர்கள் போலீஸ் பற்றி தவறான காட்சிகளை காண்பித்து மக்களிடையே போலீஸ் பற்றி பயத்தையும், தவறான இமேஜையும் ஏற்படுத்தியுள்ளனர். மக்களிடமும், மாணவர்களிடமும், குறிப்பாக மாணவிகளிடம் ஏற்பட்டுள்ள போலீஸ் பற்றிய தவறான இமேஜை உடைக்க பள்ளி, கல்லூரி விழாக்களில் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டு பேசுகிறோம். போலீஸ் ஸ்டேஷன் போனால் அடிப்பார்கள், மிரட்டுவார்கள் என்ற நிலை மாற வேண்டும் என்பதற்காக வீடு தேடி "எப்.ஐ.ஆர்.,' வழங்கும் திட்டத்தை துவங்கியுள்ளோம். அடிதடி, தகராறு, குடும்ப பிரச்னைகள் பற்றி போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் மூலம் தகவல் கொடுத்தால், சப்-இன்ஸ்பெக்டர்கள் "எப்.ஐ.ஆர்.,' நகலை வீடு தேடி வந்து கொடுக்கும் திட்டம் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

பெற்றோர்களை சொத்துக்காகவும், சாதாரண விஷயத்திற்காகவும் வீட்டை விட்டு விரட்டி விடும் பிள்ளைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நாகரீக வளர்ச்சி காரணமாக கூட்டுக்குடும்ப வாழ்க்கையை மறந்து, குழந்தைகள் திருமணமானதும் தனிக்குடும்பம் சென்று விடுகின்றனர். அப்போது, பெற்றோர்களை சுமையாக நினைத்து விரட்டி விடுகின்றனர். இந்த நிகழ்வுகளை தவிர்க்க "சீனியர் சிட்டிசன் ஹெல்ப் லைன்' திட்டத்தை போலீஸ் துறை துவங்கியுள்ளது.

மாணவிகளுக்கு எதிரான பிரச்னைகள், தொந்தரவு இருந்தாலும் தைரியமாக "ஹெல்ப் லைன்' திட்டத்தில் புகார் தெரிவிக்கலாம். சொந்த விருப்பு, வெறுப்பு, சொத்து பிரச்னைக்காக போலீசுக்கு தவறான தகவல் கொடுத்தாலும் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, ஐ.ஜி., சிவனாண்டி பேசினார். பணி நிறைவு பெற்ற தலைமை ஆசிரியர் சங்கரவடிவேல் ஏற்புரையாற்றினார். பார்க் கல்வி நிறுவனங்களின் தலைவர் ரவி, முன்னாள் எம்.எல்.ஏ., ராஜூ, லயன்ஸ் மாவட்ட துணை நிலை ஆளுனர் பரமசிவம், பி.ஏ., கல்வி நிறுவனங்களின் தலைவர் அப்புக்குட்டி, உடுமலை ஆர்.கே.ஆர்., கல்வி நிறுவனங்களின் தலைவர் ராமசாமி, சரஸ்வதி தியாகராஜா கல்லூரி தலைவர் விஜயமோகன், ராமு கலை அறிவியல் கல்லூரி இயக்குனர் நித்தியானந்தன், தலைமை ஆசிரியர் ருக்மணி உட்பட பலர் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக