1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 6-ம் நாள் உலக வரலாற்றில் ஒரு கருப்பு நாள். ஆயிரமாயிரம் அறிவியல் கண்டுபிடிப்புகள் உலக மக்களின் வாழ்க்கையை மாற்றியமைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதே விஞ்ஞானத்தைப் பயன்படுத்தி ஒரு நகரத்தையே கொலைக்களமாக்கிய கோரச் சம்பவம் இன்னும் கேட்போர் நெஞ்சங்களை உறைய வைத்துக் கொண்டிருக்கிறது.உலகத்தில் செல்வச் சிறப்புமிக்க நகரங்களில் ஒன்றாக ஜப்பான் நாட்டு ஹிரோஷிமா நகரமும் வளர்ந்து கொண்டிருந்த நேரம். இரண்டாவது உலகப் போரின் முஸ்தீபுகளும் தொடர்ந்து கொண்டிருந்தது. ஆகஸ்ட் 6-ம் தேதி காலைப்பொழுதில் ஹிரோஷிமா நகர வானில் மூன்று விமானங்கள் அணிவகுத்து வந்து கொண்டிருந்தன. அந்த விமானங்களைக் கண்காணித்து நடவடிக்கைகளில் இறங்கும் முன்பே அந்த அமெரிக்கப் போர் விமானம் பி-29 எனோல கோய் தன் வயிற்றில் சுமந்து வந்த "சின்னப் பையன்' என்ற அணுகுண்டை ஹிரோஷிமா நகரத்தில் காலை 8.15 மணிக்கு வீசியது. இந்தக் குண்டு தரைக்கு மேலே 600 மீட்டர் உயரத்தில் வெடித்தது. ஆயிரம் சூரியன் ஒன்றாய் உதித்தது போன்ற ஒரு பிரம்மாண்ட வெளிச்சம். சில நொடிகளில் ஒரு ராட்சசக் குடைக்காளான் போன்ற நெருப்புப் பந்து மேலே எழும்பியது. மேலெழுந்த தீப்பந்தின் மைய வெப்பம் 10 மில்லியன் டிகிரி செல்சியஸ். அந்தத் தீப்பந்து பூமியை அடைந்தபொழுது 4,000 டிகிரி செல்சியஸ். இவ்வளவு வெப்பத்தை யாரும் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. 100 டிகிரி வெப்பத்தில் தண்ணீர் ஆவியாகும். இந்த நீர் நம்மீது ஊற்றப்பட்டால் என்ன ஆகும் என்பது நமக்குத் தெரியும். 1,400 டிகிரி வெப்பத்தில் இரும்பே உருகிப் போகும். 3,200 டிகிரி வெப்பத்தில் டங்ஸ்டன் உருகிப் போகும். அப்படியானால் 4,000 டிகிரி வெப்பத்தில் என்ன நடக்கும்? நம்மால் நினைத்துப் பார்க்க முடியாது. ஆனால், இது ஹிரோஷிமா நகரில் நடந்தது. அருகில் இருந்த அனைத்தும் ஆவியாகிப் போனது. 2 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த கட்டடங்கள் தவிடுபொடியாகின. அங்கிருந்த அனைவரும் இறந்து போனார்கள். பலர் குற்றுயிரும் குலைஉயிருமாய் ரண வேதனைகளோடு உடல் சிதறிக் கிடந்தனர். ஹிரோஷிமா நகரக் குளங்களில், ஆறுகளில் பிணங்கள் மிதந்தன. ஆறுகளில் ஓடிய நீர் சுடுநீராக மாறியது. அணுகுண்டு வெடித்த பல கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பாலுள்ள மனிதர்களின் ஆடைகள் பிய்த்தெறியப்பட்டு நிர்வாணமாக்கப்பட்டனர்.ஆகஸ்ட் 9: ஹிரோஷிமா நகரின் பேரழிவைக் கண்ட ஜப்பானிய படைத்தலைவர்கள் நேச நாடுகளிடம் சரணடைவது பற்றி விவாதித்தனர். ஜப்பானிய இளவரசர் ஹிரோ ஹிட்டோவும் போரை நிறுத்த முடிவு செய்தார். ஆனால், போர்க்குழுவின் நடவடிக்கைகள் சற்று தாமதமாகவே ஆகஸ்ட் 9-ம் தேதி காலை 11 மணிக்கு நாகசாகி மீது மற்றோர் அணுகுண்டை அமெரிக்கா வீசியது. இந்த அணுகுண்டுக்கு "குண்டு பையன்' என்று பெயர். இந்தக் குண்டை வீசுவதற்கு முதலில் ஜப்பானிய "கோகுரா' என்ற நகரமே இலக்காக இருந்தது. காலநிலை மோசமாகி மேகமூட்டம் அதிகமாக இருந்ததால் கோகுராவின் இலக்கைச் சரியாகப் பார்க்க முடியவில்லை. அதனால் அந்த விமானம் தனது இலக்கை மாற்றி நாகசாகி நகரத்தில் அந்தக் குண்டை வீசியது. இந்தக் குண்டு பூமிக்கு மேலே 470 மீட்டர் உயரத்தில் வெடித்தது. இந்தக் குண்டு 21 டன் டிஎன்டி வெடிமருந்துக்குச் சமம். வெடித்தவுடன் 4,000 டிகிரி செல்சியஸ் வெப்பம் வெளியானது. இதைத் தொடர்ந்து மணிக்கு 1,005 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. இது மிகவும் மோசமான ஐந்தாம் ரக புயலுக்கும் மேல் என்று ஒப்பிடப்படுகிறது. 40,000 முதல் - 75,000 வரையில் மக்கள் உடனடியாக இறந்தனர். 1945-ம் ஆண்டு இறுதியில் 80,000 மக்கள் இறந்திருந்தனர். ஹிரோஷிமா நகரத்தைக் காட்டிலும் நாகசாகியில் மக்கள்தொகை குறைவானதால் இறப்புக் குறைவாகவே இருந்தது. 1945-ம் ஆண்டு நியூ மெக்சிகோ நகரில் "அல்மோலிர்டர்' என்ற இடத்தில் ஓர் உருக்குக் கோபுரம் உருவாக்கப்பட்டது. இந்தக் கோபுரத்தின் உச்சிக்கு மேலே அமெரிக்காவால் வடிவமைத்து உருவாக்கப்பட்ட அணுகுண்டை ஜூலை 16-ம் தேதி வெடித்துச் சோதனை செய்து வெற்றி கண்டது. அதன்பிறகுதான் 20 நாள்களில் ஆகஸ்ட் 6-ம் தேதி ஹிரோஷிமா நகரைக் குறிவைத்து சின்னப் பையன் என்ற அணுகுண்டை வெடித்தது. இந்தக் குண்டு 120 அங்குல உயரமும் 28 அங்குல விட்டமும் கொண்ட 9,000 பவுண்டு எடையுள்ளதாக இருந்தது. நாகசாகியில் ஆகஸ்ட் 9-ம் தேதி வெடித்த அணுகுண்டு 128 அங்குல நீளமும் 60 அங்குல விட்டமும் 10,000 பவுண்டு எடையுள்ள புளுட்டோனியத்திலானதாகவும் இருந்தது. இந்த வெடிப்பின்போது 15-லிருந்து 22 கிலோ டன் எடையுள்ள வெடிமருந்துகளிலிருந்து கிடைக்கும் சக்தி வெளிப்பட்டது. அமெரிக்கா இந்த அணுகுண்டை வெடிக்கும்போது யுத்தம் ஒரு முடிவுக்கு வந்திருந்தது. இதில் வெற்றி யாருக்கு என தீர்மானிக்கப்பட இருந்தது. நிலைமைகள் இவ்வாறிருந்தும் அமெரிக்கா வெறித்தனமாக அணுகுண்டைப் போட்டது. இதற்குக் காரணம் அமெரிக்க ராணுவத்தின் இழப்பைக் குறைப்பதற்கும், ஜப்பான் ராணுவத்தைச் சரணடையச் செய்வதற்கும் சோவியத் யூனியனுக்கு எதிரான தனது வல்லமையை உணர்த்துவதற்கும்தான் என்று மேஜர் ஜெனரல் லெஸ்ஸி ஆர். குரோவ் "இப்பொழுது சொல்ல முடியும்' என்ற புத்தகத்தில் எழுதியிருக்கிறார். இந்த அணுகுண்டை வெடிப்பதன் மூலம் அதில் வெளிப்படும் சக்தியை அளப்பதற்கும், அதன் நாசகாரத்தன்மையைத் தெரிந்து கொள்வதும்கூட அமெரிக்காவின் நோக்கமாக இருந்தது. ஹிரோஷிமாவின் மையப் பகுதியை அணுகுண்டு தாக்கியவுடன் மையத்திலிருந்து 0.8 கி.மீ. வரையிலான 55,000 கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாயின. 24 கி.மீ. தொலைவு வரையிலான அனைத்துக் கட்டடங்களும் மிகுந்த பாதிப்புக்குள்ளாயின. 132 கி.மீ. பரப்பளவுள்ள பகுதிகள் எரிந்து தீக்கிரையாகின. அந்த நகரத்திலிருந்த 76,000 கட்டடங்களில் 6,000 மட்டுமே தப்பின. ஒட்டுமொத்தமாக நகரின் 302 கி.மீ. பரப்பளவு நாசத்துக்கு ஆளாகின. இக்குண்டு வெடிப்பால் 78,500 மக்கள் உடனடியாக மாண்டனர். 70,000 மக்கள் பலத்த காயங்களுக்கு ஆளாகினர். இதில் பலர் உடல் உறுப்புகளை இழந்து தவித்தனர். ஹிரோஷிமா நகர் முழுவதும் அணுக்கதிர் வீச்சு பரவியது. இந்தக் கதிர் வீச்சுக்கு ஆளான மக்களின் மரபணுக்கள் பாதிப்புக்குள்ளாகின. இப்படி மரபணு பாதிப்புக்கு உள்ளானவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் பல்வேறு அங்ககீன சிதைவுகளுடன் பிறந்தன. இன்றுவரை இந்தப் பாதிப்புகள் தொடர்ந்து வருகின்றன.ஹிபாகுஷாக்கள்: இந்தப் பெயர் ஜப்பான் முழுவதும் தெரிந்த ஒரு பெயர். ஜப்பானிய மொழியில் இதற்கு "குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டோர்' என்று பெயர். 2005-ம் ஆண்டு மார்ச் வரைக்கும் 2,66,598 பேருக்கு ஹிபாகுஷாக்கள் சான்றிதழை ஜப்பானிய அரசு வழங்கியிருக்கிறது. இவர்களில் பெரும்பாலோர் அணுக்கதிர் வீச்சுக்கு ஆளானவர்கள். இன்றும் ஆயிரக்கணக்கானோர் கொரியாவின் பல பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்த ஹிபாகுஷாக்களுக்கு ஜப்பானிய அரசின் உதவித்தொகை மாதாமாதம் அளிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வோராண்டும் அணுக்கதிர் வீச்சால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு இந்த ஹிபாகுஷாக்கள் தொடர்வார்கள் என்பது தெரியவில்லை. இன்றைக்கும் பேரழிவு ஆயுதங்கள் 5 அணு வல்லரசுகளான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷியா, சீனா ஆகிய நாடுகளில் இருக்கின்றன. இவைகள் ஏதாவது ஓர் அரசியல் காரணத்துக்காக ஒரு நாடு உபயோகப்படுத்தினாலும் அது அந்த நாட்டோடு நின்றுவிடாது. அது உலகப் பேரழிவுக்குக் கொண்டு செல்லும். அணு ஆயுதப் பரவல் தடை மாநாடு 2005-ல் கூடியது. இதில் அணு ஆயுதங்கள் உற்பத்தி முறை மற்றும் விஞ்ஞானத் தொழில் நுட்பம் இதர நாடுகளுக்குப் பரவக் கூடாது என்பதும், அணு வல்லரசுகளான ஐந்து நாடுகளும் படிப்படியாக அணுகுண்டுகளை அழித்துவிட வேண்டும் என்பதும் அடிப்படைக் கோட்பாடுகள். இப்பொழுது இந்தியா, பாகிஸ்தான், வடகொரியா, ஈரான் போன்ற நாடுகளிடமும் அணுகுண்டு செய்யத் தேவையான தொழில்நுட்பம் இருப்பதாகத் தெரிய வருகிறது. இம்மாதிரியான அணு ஆயுதப் போட்டிகள் உலகை விட்டு அகல வேண்டும். இல்லையேல் மனித சமுதாயத்தை அழிக்கும் அபாயம் நம் தலையில் அமர்ந்துகொண்டுதான் இருக்கும்.கட்டுரையாளர்: (தமிழ்நாடு அறிவியல் இயக்க முன்னாள் பொதுச் செயலர்).
கருத்துக்கள்
உலகில் பலநாடுகளில் வல்லரசு நாடுகள் குண்டு மழை பொழிந்துள்ளன; பொழிந்துவருகின்றன. ஈழத்தில் அழிவுக் குண்டுகளை வீசியே தமிழினப் படு கொலை நடந்தது. இதற்கு அணுக்குண்டால் பெரிதும் பாதிப்புற்ற சப்பானும் உடந்தைதான். வல்லரசுகளின் வல்லாண்மை வீழ்த்தப்பட்டால்தான் குண்டு மழை பொழியாத அன்பு மணம் வீசும் உலகத்தை நாம் காண இயலும். உலகக் குடிமக்கள் ஒன்றிணைந்து உயிரினங்களைக் காப்பாற்ற முன் வரவேண்டும்.வல்லாண்மை வெறிபிடித்த்தவர்களை ஆளும்பொறுப்பில் இருந்து தூக்கி எறியவும் மீண்டும் அவர்களைத் தலையெடுக்காமல் செய்யும் மக்களை ஆயத்தப்படுத்த வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/6/2010 4:06:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * 8/6/2010 4:06:00 AM