வியாழன், 5 ஆகஸ்ட், 2010

வாடகைதாரர்களிடம் அதிக மின் கட்டணம் வசூலித்தால்... வீட்டு உரிமையாளர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம்


சென்னை, ஆக.4: வாடகைதாரர்களிடம் இருந்து அதிக மின் கட்டணம் வசூலிக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கு ரூ.1 லட்சம் வரை அபராதமும், மூன்று மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் எச்சரித்துள்ளது.இதுகுறித்து, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் புதன்கிழமை வெளியிட்ட செய்தி: வீட்டின் உரிமையாளர்கள் வாடகைதாரர்களிடம் இருந்து அதிக மின் கட்டணம் வசூலிக்கப்படுவதாக வரும் புகார் மீது தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது. வீட்டின் உரிமையாளர்கள் அதே வளாகத்தில் மின் இணைப்பு பெற முடிவு செய்கையில், மேம்பாட்டுக் கட்டணம் மற்றும் மின் இணைப்புக் கட்டணம் ஆகியவற்றில் இருந்து, ஆணையத்தின் 24.6.2003 நாளிட்ட மின் கட்டண ஆணை எண் 1-3ன் படி விலக்கு அளிக்கப்பட்டுள்ளனர். வாடகைதாரர்களின் நலன் கருதியும், வீட்டு உரிமையாளர்களின் சுமையைக் குறைப்பதற்காகவும் இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டது. இந்த ஆணையைப் பொருட்படுத்தாது சில வீட்டின் உரிமையாளர்கள், வாடகைதாரர்களிடம் இருந்து அதிக கட்டணம் வசூலிப்பதாகப் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. அதிக கட்டணம் வசூலிப்பது சட்ட விரோதம்: இரண்டு மாதங்களுக்கான மின் நுகர்வு 600 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தினால், வீட்டு மின் நுகர்வோருக்கான அதிகபட்ச மின் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ரூ.4.05 மட்டுமே ஆகும். எனவே, வீட்டின் உரிமையாளர்கள் யூனிட் ஒன்றுக்கு ரூ.4.05-க்கு மேல் கட்டணம் வசூலிப்பது சட்ட விரோதமான செயலாகும். ஒரு வீட்டின் மொத்த மின் நுகர்வு 600 யூனிட்டுக்குக் குறைவாக இருக்குமானால், மின் நுகர்வைப் பொறுத்து யூனிட் ஒன்றுக்கு ரூ.2.20, ரூ.1.50, 80 பைசா, 75 பைசா மட்டுமே சட்டப்படி வசூலிக்க முடியும்.ரூ.1 லட்சம் அபராதம், 3 மாத சிறை:வாடகைதாரர்களிடம் அதிகக் கட்டணம் வசூலித்தல், 2003-ம் ஆண்டு மின்சார சட்டத்தின் 142 மற்றும் 146-ம் பிரிவுகளின்படி ரூ.1 லட்சம் வரை அபராதமும், மூன்று மாதங்கள் வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்படத்தக்க குற்றமாகும். இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரியம், மின்சார சட்டத்தின்படி 142-ம் பிரிவின்படி ஆணையத்தின் முன்பு அல்லது மின்சார சட்டத்தின் 146-ம் பிரிவின்படி உரிய குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு புகார் செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.எங்கே புகார் செய்யலாம்? அதிக கட்டணம் வசூலிக்கும் வீட்டு உரிமையாளர்கள் குறித்து அந்தந்த மின் வாரிய அலுவலகங்களில் பணிபுரியும் முதுநிலை பொறியாளர், இளநிலை பொறியாளர், உதவி பொறியாளர்களிடம் புகார் தெரிவிக்கலாம்.மேலும் தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் அலுவலகத்தில் புகார் தெரிவிக்கலாம். 044-28521300, 28521915, 28520416, 28520928.
கருத்துக்கள்

கூடுதலாக மின் கட்டணம் செலுத்துவதற்கு ஒப்புக் கொண்டு குடி புகுந்தவர்கள் எங்ஙனம் முறையீடு அளிக்க முடியும்? தனித்தனி மின் அலகு கருவிகளைப் பொருத்த நடவடிக்கை எடுத்தால் இச்சிக்கல் தீரும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/5/2010 2:55:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக