திங்கள், 2 ஆகஸ்ட், 2010

தொண்டர்களின் உணர்வை வெளிப்படுத்திய கக்கன் விழா


மதுரை, ஆக. 1:  தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் மதுரை மருத்துவக் கல்லூரி மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கக்கன்ஜி நூற்றாண்டு நிறைவு விழாவானது கட்சித் தொண்டர்களது உணர்வை நாடிப் பிடித்துப் பார்க்கும் வகையில் அமைந்ததாகப் பலரும் கருதுகின்றனர்.   கக்கன் நூற்றாண்டு நிறைவு விழா மதுரையில் கொண்டாடப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ. தங்கபாலு அறிவித்த உடனேயே மதுரையைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் சுறுசுறுப்பாகி விட்டனர்.   ஒருபுறம் தங்கள் மாவட்டத்தைச் சேர்ந்த, பொது வாழ்க்கையில் தூய்மை, நேர்மையைப் பின்பற்றிய தலைவருக்கு விழா என்ற மகிழ்ச்சியும், மறுபுறம் பிளக்ஸ் பேனர் வைப்பதில் தி.மு.க.வின் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் ஆதரவாளர்களுக்கு நாங்கள் ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல என்று காட்டுவதற்கும் தயாராகி விட்டனர்.    சமீப காலத்தில் காங்கிரஸ் சார்பிலான விழாவில் பிளக்ஸ் பேனர்கள் அதிக அளவில் இடம்பெற்றது மதுரையில்தான் என்று சொன்னால் மிகையாகாது. ஓவ்வொரு கோஷ்டியினரும் தங்கள் தலைவரை முன்னிலைப்படுத்தி பெரிய பெரிய பேனர்களை வைத்திருந்தனர். அதில் கக்கன் படத்தைச் சிறியதாகவும், தங்கள் தலைவரின் படத்தைப் பெரிதாகவும் போட்டு, மாவட்ட நிர்வாகிகள் தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தினர். ஆனால், கக்கனுக்கு வழிகாட்டியாக இருந்த காமராஜர் படம் ஒரு பேனரிலும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.    நூற்றாண்டு விழா நடைபெற்ற மருத்துவக் கல்லூரி மைதானத்தில் பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டிருந்தது. அழைப்பிதழ் அடிக்காமல், போஸ்டர்கள் இல்லாமல் பிளக்ஸ் போர்டுகள் மட்டுமே இருந்த நிலையில் விழாவுக்கு தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டது காங்கிரஸ் தலைவர்களுக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.  ÷விழா மேடைக்கு மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கிருஷ்ணசாமி, குமரி அனந்தன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வந்து அமர்ந்த நிலையில், சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் முதலில் பேசினார். கக்கன் வரலாற்றைப் பாடமாக வைக்க வேண்டும் என்று பேசி அசத்தினார்.÷ஒற்றுமையாகச் செயல்படுவோம், சோனியா, ராகுல் கரத்தை வலுப்படுத்துவோம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள் கூறிவந்த போதிலும், மேடையில் பேசிய சிலர், தங்கள் முன்னணித் தலைவர்களை மட்டும் வரவேற்றுப் பேசியது, கோஷ்டிப் பூசல் இன்னும் இருக்கத்தான் செய்கிறது என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.    விழாவில் தைரியமாகத் தனது கருத்தை எடுத்துச் சொல்லி தொண்டர்களிடம் வரவேற்பைப் பெற்றவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்தான். அவர் பேசுவார் என்று தங்கபாலு அறிவித்ததுமே தொண்டர்கள் கைதட்டி வரவேற்றனர்.    தேனி மக்களவை உறுப்பினர் ஜே.எம். ஆரூண், தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்று பேசினார். இதையடுத்து, கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. தி.மு.க. கூட்டணி பற்றி பேச வேண்டாம் என்று தொண்டர்கள் பலத்த கோஷம் எழுப்பினர். இதைச் சுட்டிக்காட்டி பேசிய இளங்கோவன், தொண்டர்களின் உணர்வுகளை தமிழக காங்கிரஸ் தலைவர்கள் புரிந்து கொண்டு மேலிடத்திடம் தெரிவிக்க வேண்டும் என்று கூறினார்.÷இளங்கோவன் பேச்சில் முழுக்க முழுக்க தி.மு.க. எதிர்ப்பு இருந்தாலும், அதை கூட்டத்தினர் கரவொலி எழுப்பி வரவேற்றதைக் காண முடிந்தது. இளங்கோவன் பேசி முடித்த நிலையில், அடுத்து வந்த குமரி அனந்தன் போன்றோர் கூட்டணி பற்றி பேசா விட்டாலும், காங்கிரஸ் தலைவர்கள் ஒன்றுபடுவது அவசியம் என்பதை வலியுறுத்தத் தவறவில்லை.     ஜி.கே.வாசன் பேச்சில் தி.மு.க. எதிர்ப்பு நேரடியாக இல்லாவிட்டாலும், காங்கிரஸ் தமிழகத்தில் முதன்மைக் கட்சியாக வர வேண்டும் என்று பேசியதிலிருந்தும், தி.மு.க.போல் ஆடம்பரமாக இல்லாமல், காங்கிரஸ் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டியதையும் தி.மு.க. எதிர்ப்புணர்வே என அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.     மத்திய அமைச்சர் ப. சிதம்பரமும் நேரடியாக தி.மு.க. எதிர்ப்பைக் காட்டவில்லை. ஆனால், சிறுபான்மையினர், தலித்துகள் காங்கிரசில் இணைந்தாலே சாதிக்க முடியும் என கூறியதை தி.மு.க.வுக்கு எதிராக அவர் வீசிய அஸ்திரமாகவே காங்கிரஸôர் சுட்டிக்காட்டுகின்றனர்.÷கூட்டத்தில் பங்கேற்ற தொண்டர்களில் பெரும்பாலானோர் திமுக கூட்டணி வேண்டாம், காங்கிரஸ் தனித்துப் போட்டியிட வேண்டும் என்ற கருத்தை வெளிப்படுத்தினர்.   மொத்ததில் கக்கன் நூற்றாண்டு விழா, எதிர்காலத்தில் காங்கிரஸ் யாருடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய தொண்டர்களின் நாடிப் பிடித்துப் பார்க்கும் விழாவாகவே அமைந்தது என்பதே அரசியல் நோக்கர்களது கருத்தாகும்.
கருத்துக்கள்

அப்படியாவது தி.மு.க.வைப்பிடித்த சனியன்தொலையட்டும்! தமிழ் மக்களுக்கு விடிவு கிடைக்கட்டும்! குமுதத்தில் கக்கனின் மகன் ஒருவர் சென்னை மனநலமருத்துவமனையில் இருப்பதையும் நூற்றாண்டுவிழாக் கொண்டாடும் போலிக் காங்.யாரும் இந்த நேரத்தில்கூட அவரைப் பார்க்கவில்லை என்றும் செயதிக் கட்டுரை வந்துள்ளதைப்படித்தாலே காங்.கின் வேடம் புரியும். இந்திரா காங்.கில் இல்லாத காமராசர் கக்கன் புகழ்பாடித்தான் மக்களை ஈர்க்க வேண்டியுள்ளது என்பதையும் மக்கள் புரிந்து கொள்ளட்டும்! 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/2/2010 3:02:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக