செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010

காங்கிரஸில் கருத்து மோதல்

சமீபகாலமாக காங்கிரஸ் தலைவர்கள் விடுக்கும் அறிக்கைகளைப் பார்த்தால், அக்கட்சியில் யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் பேசலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது. கொள்கை முடிவு தொடர்பான விஷயங்களில் மூத்த அமைச்சர்கள் சிலர் தங்களது சகாக்களுடன் ஒத்துப்போக மறுப்பது வெளிப்படையாகத் தெரிகிறது.  மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் விவகாரத்தை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சரிவர கையாளவில்லை என்றும், அவர் சிந்தித்து எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும் அண்மையில் சரமாரியாகக் குற்றஞ்சாட்டியிருந்தார் திக்விஜய் சிங். அவர் சொன்ன கருத்து, காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இந்த விஷயம் ஓய்ந்திருந்த நிலையில், நான் பத்திரிகை வாயிலாக சொன்ன கருத்துகளில் எந்த மாற்றமும் இல்லை, அனைத்தும் உண்மைதான், காங்கிரஸôரின் எண்ணத்தையே நான் பிரதிபலித்துள்ளேன் என்றார் திக்விஜய் சிங். அதாவது, நக்ஸலைட்டுகளை ஒடுக்கும் விஷயத்தில் காங்கிரஸ் கட்சியின் கொள்கையும், சிதம்பரம் செல்லும் பாதையும் மாறுபாடானவை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.  சில முக்கியமான விஷயங்கள் குறித்து கட்சித் தலைவர்கள் தங்கள் மனம் போன போக்கில் அறிக்கை வெளியிடக்கூடாது என்று காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டிருந்த போதிலும், தான் சொன்னது சரிதான் என்பதுபோல் பேசிக்கொண்டிருந்தார் திக்விஜய் சிங். முன்னதாக பிரதமர் மன்மோகன் சிங் அறிவுரையின் பேரில், அமைச்சரவைச் செயலர் ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தார். அமைச்சர்கள் எந்த ஒரு முக்கிய விஷயத்தைப் பற்றி பேசினாலும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொள்வதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.  கடந்த வாரம் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும், வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் மோசமான விஷயம் என்னவெனில்,  மற்றொரு நாடான பாகிஸ்தான் சம்பந்தப்பட்டிருப்பதுதான். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், மத்திய உள்துறைச் செயலர் ஜே.கே.பிள்ளை பத்திரிகைக்குப் பேட்டியளித்திருந்தார்.அதில், மும்பையில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதல் சம்பவத்துக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் தூண்டுதலே காரணம் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஜே.கே.பிள்ளை கூறிய கருத்துக்கு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.  உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துக்குத் தெரியாமல் இதுபோன்ற கருத்துகளை உள்துறைச் செயலர் ஜே.கே.பிள்ளை வெளியிட்டிருக்க மாட்டார் என்றே தோன்றுகிறது. ஏனெனில்,  இந்தப் பேட்டி, இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்புக்குப் பிறகு வெளிவந்திருக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பின்னர் விளக்கம் அளித்துள்ளார். மும்பைத் தாக்குதல் சம்பவத்தில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கும், ஜமாத் உத்தவா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சய்யீத்துக்கும் தொடர்பு இருப்பதாக இந்திய உள்துறை அமைச்சகச் செயலர் ஜே.கே.பிள்ளை கூறியிருந்தார். அமெரிக்காவில் உள்ள லஷ்கர் தீவிரவாதி டேவிட் ஹெட்லி கூறியிருந்த கருத்தை மேற்கோள் காட்டித்தான் ஜே.கே.பிள்ளை இந்தக் கருத்தைத் தெரிவித்திருந்தார். ஆனால், அவரை லஷ்கர்-இ-தொய்பா, ஜமாத் உத்தவா தீவிரவாதிகளுடன் ஒப்பிட்டு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷி கருத்து வெளியிட்டார். எனினும், இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா உடனடியாக எந்தப் பதில் கருத்தும் வெளியிடவில்லை. இல்லையெனில் இந்த விவகாரம் மேலும் விசுவரூபம் எடுத்திருக்கும்.   பின்னர், இந்தியா திரும்பிய எஸ்.எம்.கிருஷ்ணா, உள்துறைச் செயலர் ஜே.கே.பிள்ளை நேரம் தெரியாமல் இக்கருத்துகளை வெளியிட்டது துரதிருஷ்டவசமானது என்று கூறினார். பிரதமர் மன்மோகன் ஒப்புதல் இல்லாமல் கிருஷ்ணா தன்னிச்சையாக இந்தக் கருத்தை வெளியிட்டிருக்க மாட்டார் என்றே தெரிகிறது. ஆப்கானிஸ்தானில் கிருஷ்ணாவைச் சந்தித்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், இந்தியா-பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தையில் எந்தத் தடையும் ஏற்படக்கூடாது. இரு நாடுகளும் அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடர வேண்டும். இதையே அமெரிக்கா விரும்புகிறது என்று கூறினார். இது ஒருபுறம் இருக்க, மத்திய அமைச்சர் கமல்நாத்துக்கும், திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியாவுக்கும் இடையே வாக்குவாதம் நீடித்ததாகச் சொல்லப்படுகிறது. மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷுக்கும் இதர அமைச்சர்கள் சிலருக்கும் இடையே ஏற்கெனவே மோதல் இருந்துவருவது குறிப்பிடத்தக்கது. கடந்த  5-ம் தேதி எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு, விலைவாசி உயர்வைக் கண்டித்து "பாரத் பந்த்'தை வெற்றிகரமாக நடத்தின. இருந்தபோதிலும், வலுவான எதிர்க்கட்சி இல்லாத நிலையில், காங்கிரஸ் கட்சித் தலைவர்களும், அமைச்சர்களும் தங்கள் இஷ்டம்போல் பேசவும் கருத்துகளை வெளியிடவும் தொடங்கிவிட்டனர். நக்ஸல்கள் விவகாரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஒன்று சொல்கிறார். பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி இதுபற்றி வேறு ஒரு கருத்தைச் சொல்கிறார். வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவோ, பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து தனக்குத் தோன்றிய கருத்துகளைச் சொல்கிறார்.இவையெல்லாவற்றுக்கும் மேலாக பிரதமர் மன்மோகன் ஒரு கருத்தைச் சொல்கிறார். இவர்கள் எல்லோரும் பேசியதை சமாளிக்கும் விதத்தில் பிரணாப் முகர்ஜி ஏதோ பேசுகிறார். இப்படி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் எந்த ஒரு விஷயமானாலும், அதுபற்றி விவாதிக்காமல் தங்களுக்குத் தோன்றியதை வெளிப்படையாக விமர்சிக்கின்றனர். அதாவது ஒரே விஷயத்தைப் பற்றி பலரும் பலவிதமான கருத்துகளைக் கூறுகின்றனர்.  ப.சிதம்பரமும், திக்விஜய் சிங்கும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள். அவர்கள் இருவரும் அரசியலில் முதிர்ச்சி பெற்றவர்கள். ஆனாலும், அவர்கள் சில குறிப்பிட்ட விஷயங்களில் எதிர் எதிரான கருத்துகளைக் கொண்டிருக்கின்றனர். மாவோயிஸ்டுகளுக்கு வளைந்துகொடுக்கக் கூடாது, பாகிஸ்தான் விஷயத்தில் நாம் நமது நிலையை ஒருபோதும் விட்டுத் தரக்கூடாது என்பது ப.சிதம்பரத்தின் நிலைப்பாடாகும்.   காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் ப.சிதம்பரத்தை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கலாமா என்ற பேச்சு அடிக்கடி எழுகிறது. ஆனால், ஹிந்தி பேசும் மாநிலங்களில் அவர் பரிச்சயமாகாதது அவருக்கு மைனஸ் பாயிண்டாகவே உள்ளது. மற்றபடி நகர்ப்புறங்களிலும் கிராமப்புறங்களிலும் இந்து மக்களின் ஆதரவு அவருக்கு உள்ளது எனலாம்.  திக்விஜய் சிங், தன்னை தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்ற தலைவராக  நிலைநிறுத்திக் கொள்வதில் கவனம் செலுத்தி வருகிறார். இந்துக்கள் மட்டுமல்லாமல், முஸ்லிம்களின் ஆதரவைப் பெறவும் அவர் முயன்று வருகிறார். நக்ஸல்கள் பிரச்னையை சட்டம்-ஒழுங்கு பிரச்னையாக மட்டும் கருதி அணுக முடியாது என்பது அவரது கருத்து. உயர்ஜாதி வகுப்பினர், சிறுபான்மையினர், எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர் என அனைத்துத்  தரப்பு மக்களின் ஆதரவையும் பெறுவதில் முனைப்புக் காட்டி வருகிறார். தேர்தல் தோல்வியால் அரசியலிலிருந்து சிறிது காலம் சன்னியாசம் பெற்றிருந்த திக்விஜய் சிங், இப்போது மீண்டும் புதிய எழுச்சியுடன் களம் புகுந்துள்ளார். மத்தியப் பிரதேச மாநிலத்தில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் தாம் போட்டியிடப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் மேலிடம் கேட்டுக் கொண்டால் மக்களவைத் தேர்தலிலும் போட்டியிடத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.  தற்போதைய அரசியல் சூழ்நிலையில் காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் செல்வாக்கை நிலைநிறுத்திக் கொள்வது அவசியமாகும். ஏனெனில், பிரதமர் மன்மோகன் சிங் தனது உடல்நலத்தைக் காரணம் காட்டி 2012-ல் பதவி விலகலாம் அல்லது அடுத்த குடியரசுத் தலைவராவதற்கு அவர் முயற்சிக்கலாம்.ராகுல் காந்தியின் எண்ணமெல்லாம் உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலைப் பற்றியே உள்ளது. வரும் தேர்தலில் அங்கு அதிக இடங்களில் வென்று காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் அமர்த்திவிட வேண்டும் என்பதில் அவர் முனைப்பாக இருக்கிறார். வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்க வேண்டும் என்பதே அவரது விருப்பமாகும். இந்நிலையில் பிரதமர் பொறுப்பை இப்போதைக்கு ஏற்க அவர் விரும்பவில்லை. எனவே,  மன்மோகனுக்குப் பிறகு அந்த இடத்துக்கு ஒருவரைத் தயார்படுத்த வேண்டும் என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் விருப்பமாகும்.  வெறும் வார்த்தை ஜாலங்களால் எதையும் சாதித்துவிட முடியாது. ஆக்கபூர்வமாகச் செயல்பட வேண்டும் என்பதை ப.சிதம்பரமும், திக்விஜய் சிங்கும் நன்கு உணர்ந்துள்ளனர். ஆனால், அதேசமயத்தில் வேறுவிதமாகச் சிந்திக்கும் அரசியல்வாதிகளும் உள்ளனர்.இன்னும் சொல்லப்போனால், இந்திய அரசியல் சூழ்நிலையில் எப்போது வேண்டுமானாலும், எது வேண்டுமானாலும் நடக்கலாம். திட்டமிட்டுச் செயல்படும் காரியமாக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, அது எதிர்க்கட்சிகளுக்கு சிம்மசொப்பனமாகவும் காங்கிரஸ் கட்சியின் பெருமையை மீட்டு, பலப்படுத்தும் வகையிலும் இருக்க வேண்டும்.
கருத்துக்கள்

பழைய கட்டுரையாக இருக்க வேண்டும். இல்லையேல் பொதுநல (காமன்வெல்த்) நாடுகளின் விளையாட்டுப் போடடி பற்றிய மணிசங்கர் மோதலையும் குறிப்பிட்டு இருப்பார். எத்தனை மோதல்கள் இருப்பினும் பதவிச் சுவை என்னும் இழையால் இணைக்கப்பட்டு அதிகாரச்சுவையைத்துய்க்கும் கட்சிதான் காங்கிரசு. எதிர்க்கட்சிகளும் இதே பாதையில் செல்வதால் நாடு சரியான பாதையில் செல்லவில்லை என்பதே வருந்தத்தக்க உண்மை. வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/3/2010 5:17:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக