புதன், 4 ஆகஸ்ட், 2010

தலையங்கம்: பொய் முகங்கள்!


திங்கள்கிழமை கோவையில், முதல்வர் கலந்துகொண்ட மாபெரும் திமுக பொதுக் கூட்டம் ஒன்று நடந்தது. விலைவாசி உயர்வுக்கு எதிராகச் சில நாள்கள் முன்பு அதே கோவையில், அதே வ.உ.சி. திடலில் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாவின் கண்டனக் கூட்டத்தின் வெற்றி, முதல்வரை எந்த அளவுக்குப் பாதித்திருக்கிறது என்பதை முதல்வரின் பேச்சு தெளிவுபடுத்தி இருக்கிறது.முதல்வரின் கோவை வ.உ.சி. திடல் உரையில் காணப்படும் ஆத்திரமும், ஆதங்கமும் தேவைதானா என்று கேட்கத் தோன்றுகிறது. தனக்கு முன்னால் பேசிய அமைச்சர்களை வழியொற்றி, எதிர்கட்சித் தலைவி ஜெயலலிதா தன்னைக் கருணாநிதி என்று குறிப்பிடுவதை இவரும் குறிப்பிட்டு மாய்ந்து போனது வியப்பைத் தருகிறது.""நான் அண்ணாவிடத்திலே பண்பாடு கற்றவன். பெரியாரிடத்திலே அரசியல் நாகரிகம் கற்றவன். அதனால் கருணாநிதி, கருணாநிதி என்று சொல்லட்டும். கருணாநிதி என்பது ஒன்றும் தவறான வார்த்தை அல்ல. கருணை மிகுந்த நிதி. அப்படி எடுத்துக் கொள்கிறேன். எப்படி வேண்டுமானாலும் சொல்லட்டும்'', என்றெல்லாம் இவர் மனக்குறையைக் கொட்டித் தீர்ப்பானேன். ஜெயலலிதா, கருணாநிதி என்று பெயர் சொல்லி அழைப்பது இவரைப் பாதிக்கவில்லை என்றால், அதை இவர் ஏன் பெரிதுபடுத்த வேண்டும்?""நீ, நான் என்று ஒருமையில் பேசிக் கொள்வதாகக் கருதிக் கொள்ளாதே. ஏன் என்றால் உன் வயது என்ன? என் வயது என்ன? சிறு வயதிலிருந்தே உன்னைத் தெரியும் என்ற காரணத்தால், அந்த மரியாதையுடன் நீ, நான் என்று பேசுவதாக எண்ணிக் கொள். உன் வயதுக்கு 87 வயதான ஒரு முதியவரைப் பார்த்து, நான் அதிகம் படிக்காதவனாக இருக்கலாம், உன்னைப்போல பெரிய அறிவாளியாக இல்லாமல் இருக்கலாம். அந்த வயதுக்காவது மரியாதை கொடுக்க வேண்டாமா? நான் மரியாதையைத் தேடி அலைகிறேன் என்று யாராவது தயவுசெய்து எண்ணிக் கொள்ளாதீர்கள்'' - இதுவும் கோவையில் முதல்வர் கருணாநிதி பேசியிருக்கும் பேச்சுதான்.ஜெயலலிதா, முதல்வரைக் கருணாநிதி என்று அழைப்பதில் என்ன தவறு இருக்க முடியும்?  கட்சிக்காரர்கள் அவரைக் "கலைஞர்' என்று அழைப்பது அவர்கள் இஷ்டம். ஆனால், மற்றவர்களும் அவரைக் "கலைஞர்' என்று அழைக்க வேண்டும் என்று  முதல்வர் ஏன் ஆசைப்படுகிறார் என்பது தெரியவில்லை. முதல்வரின் உறவினர்கள் நடத்தும் தொலைக்காட்சி சேனலிலும், பத்திரிகைகளிலும்கூடக் கருணாநிதி என்றுதானே குறிப்பிடுகிறார்கள். அப்படி இருக்க எதிர்க்கட்சித் தலைவி மட்டும் அவரைக் "கலைஞர்' என்று அழைக்க வேண்டிய அவசியம் என்ன?முதலில் தமிழக அரசியலில் உள்ள அடைமொழிக் கலாசாரமே வயிற்றைக் குமட்டுகிறது. வெளிமாநிலத்தவர் நம்மிடம் இதைப்பற்றி கிண்டலும் கேலியுமாகக் கேள்வி கேட்கும்போது, தமிழகத்துக்கு ஏற்படும் தலைக்குனிவு பற்றி இவர்களுக்கு என்ன தெரியும்? இந்த அடைமொழிகள் அர்த்தமில்லாதவை என்பதை யார் இவர்களுக்கு எடுத்துரைப்பது?ஜவாஹர்லால் நேருவுக்கும், இந்திரா காந்திக்கும், சர்வதேச அளவில் வழங்கப்பட்ட கௌரவ டாக்டர் பட்டங்கள் எண்ணிலடங்காது. அவர்கள் யாரும் தங்களது பெயருக்கு முன்னால் "டாக்டர்' பட்டம் போட்டுத் தம்பட்டம் அடித்துக் கொள்வதில்லை. கௌரவ டாக்டர் பட்டங்களைப் பெயருக்கு முன்னால் போட்டுக் கொள்வது நாகரிகமில்லை என்பதுகூட நமது தமிழக அரசியல்வாதிகளுக்குத் தெரிவதில்லை. இந்த விஷயத்தில் முதல்வர் கருணாநிதி மட்டுமல்ல, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்று யாருமே விதிவிலக்கல்ல.பொதுவாழ்க்கையில் வந்தபிறகு அவர்கள் வகிக்கும் பதவிக்கும், அவர்களது தொண்டிற்கும்தான் மக்கள் மன்றம் தலைவணங்குமே தவிர, அவரவர் வைத்துக் கொள்ளும் அல்லது கட்சிக்காரர்களால் தரப்படும் அடைமொழிகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை.உயிருடன் வாழும்வரை, காமராஜை பெருந்தலைவர் என்றோ, அண்ணாதுரையை "அறிஞர்' என்றோ யாரும் அழைக்கவில்லை. அவர்களும் அழைக்க வேண்டும் என்று விரும்பவுமில்லை. காமராஜ் என்று அழைத்தவர்களும், அண்ணாதுரை என்று அழைத்தவர்களும், அவர்கள் மறைந்த பின்னர் பெருந்தலைவர் என்றும் அறிஞர் என்றும் அழைக்க முற்பட்டனர் என்றால், அது அந்த மாமனிதர்களின் சமுதாயப் பங்களிப்புக்கு மக்கள் மன்றம் அளிக்கும் மரியாதை."கலைஞர்' என்று கருணாநிதியையும், "அம்மா' என்று ஜெயலலிதாவையும் அழைக்கும் அருவருப்பான அடைமொழிக் கலாசாரம், தமிழகத்திலுள்ள ஏனைய மாநிலக் கட்சிகளையும் தொற்றிக் கொண்டிருக்கிறது. அரசியல் கலாசாரத்தை, மாற்றிக் காட்டுகிறோம் என்று கூறி கட்சி தொடங்கியவர்கள் டாக்டர் ராமதாஸýம், விஜயகாந்தும்.""நானோ எனது உறவினர்களோ பதவி எதுவும் பெற மாட்டோம். அப்படி பதவி பெற்றால் என்னை நாற்சந்தியில் நிறுத்திச் சவுக்கால் அடியுங்கள்'' என்று சவால்விட்ட பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர், தனது மகனுக்கு மத்திய அமைச்சர் பதவியைக் கேட்டுப் பெற்றதெல்லாம் போகட்டும். தன்னை "மருத்துவர் அய்யா' என்றும் தனது மகனை "சின்ன அய்யா' என்றும் கட்சிக்காரர்கள் அழைப்பதைக் காதுகுளிரக் கேட்டு மகிழ்வதுதான் இவர் செய்து காட்டியிருக்கும் கலாசார மாற்றம்.விஜயகாந்தும் இதேபாணியில், கட்சி சின்னம் பொறித்த மோதிரத்தை அணிந்து கொள்வது, கரை வேட்டி கட்டிக் கொள்வது என்று இயங்குவதுடன் நின்றுவிட்டால்கூடப் பரவாயில்லை. தன்னை "கேப்டன்' என்று அழைக்கச் சொல்கிறாரே, அதுதான் வேடிக்கை.விஜயகாந்த் ராணுவத்தில் எந்தப் பிரிவில் கேப்டனாக இருந்தார்? இல்லை, இவர் மதுரையில் ஏதாவது கபடி, கிரிக்கெட் போன்ற விளையாட்டுக் குழுவின் கேப்டனாக இருந்தாரா? அவர் நடித்த நூற்றுக்கும் அதிகமான திரைப்படங்களில் ஒன்றான கேப்டன் பிரபாகரன் படத்தில்  நடித்தவர் என்பதால் "கேப்டன்' அடைமொழியா? என்ன கேலிக்கூத்து இது.கேட்டால் கட்சித் தொண்டர்கள் மரியாதைக்காக எங்களை இப்படி அழைக்கிறார்கள் என்று கருணாநிதியும், ஜெயலலிதாவும், ராமதாஸýம், விஜயகாந்தும் அதற்கு விளக்கம் கூறுவார்கள். அப்படி அழைக்கக் கூடாது என்று சொன்னால் தொண்டர்கள் அழைக்கப் போகிறார்களா? இவர்கள் விரும்புகிறார்கள் } அவர்கள் அழைக்கிறார்கள். அதுதானே நிஜம்?பொதுவாழ்க்கையில் ஈடுபட்டவர்கள் மக்கள் மனதில் இடம்பெற அவர்களது செயல்பாடுகள்தான் உதவுமே தவிர, பெயருக்கு முன்னால் போட்டுக்கொள்ளும் அடைமொழிகள் உதவாது. பொதுவாழ்வில் ஈடுபட்டவர்களும் பொறுப்பான பதவிகளில் இருப்பவர்களும் தங்களைப் பெயர் சொல்லி அழைப்பது மரியாதைக் குறைவு என்று கருதும் திராவிடக் கலாசார எதிர்பார்ப்பு எந்த பகுத்தறிவு வாதத்தைச் சேர்ந்தது என்பதைப் பெரியாரிடம்தான் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.பொதுவாழ்க்கைக்கு வந்த பிறகு வயதைக் காரணம் காட்டி மரியாதை தேடிக் கொள்வதோ, பெயரைக் குறிப்பிடுவது மரியாதைக் குறைவு என்று கருதுவதோ ஏற்புடையதல்ல. இது முதல்வர் கருணாநிதிக்கு மட்டுமல்ல, அடைமொழிகளால் புளகாங்கிதப்படும் எதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதாவுக்கும், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸýக்கும், தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கும் பொருந்தும்.ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு இதில் எத்தனை பெயர்களைச் சரித்திரம் நினைவில் நிறுத்தப் போகிறது என்பதே சந்தேகம். பிறகல்லவா இந்த அடைமொழிகள்!
கருத்துக்கள்

ஆசிரியர் அல்லாத ஒருவர் தலையங்கம் எழுதும் பொழுது அவர் பெயரைக் குறிப்பிடும் பழக்கத்தைத் தினமணி பின்பற்றலாம். நன்கு தெளிவாகவும் உறுதியாகவும் அஞ்சாமலும் எழுதியுள்ளார். இவ்வாறான அடைமொழி வழக்காற்றால் உரியவர்களின் இயற்பெயர்கள் வரலாற்றில் இருந்து மறையும் நிலைமையும் ஏற்படும்.கடவுளைக் கூட அடைமொழியின்றியும் ஒருமையிலும் அழைக்கும் தமிழ் மக்கள் அரசியல் கொத்தடிமையால் தலைவர்களின் பெயர்களை ஒலிக்க அச்சப்பட்டு அடைமொழிகளால் மட்டுமே குறிப்பிடுவது தவறு என்பதை உணர வேண்டும். அரசியல் உலகில் மட்டும் அல்லாமல் கலையுலகிலும் இந்த அவலம் உள்ளது. இருப்பினும் இந்த நிலை மாறும் காலம் அண்மையில் இருப்பதாகத் தெரியவில்லை. இருப்பினும் ஊதுகின்ற சங்கை ஊதிவைப்போம் என முயன்றுள்ளதற்குப் பாராட்டுகள். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/4/2010 3:04:00 AM
What ever you wrote on your editorial,i agree with you but you came to write this because to take care of amma.dont you know this.thanks
By ana
8/4/2010 3:00:00 AM
Well written exposing the leaders' weaknesses. Respect has be earned, cannot be demanded. I feel ashamed of Tamilnadu politics when i visit north India and face criticism there. No salvation for the state.
By SUNDARARAJAN.V
8/4/2010 2:47:00 AM
Madurai DMK call Azhagiri as Anjaa Nenjar. Which battle did Azhagiri took part?. Being a son of CM, it is very easy to control the police and the extra-official affairs of the state. There are lot adiyatkal for him. If he is not a son of the CM can he face any challenge alone.Has he ever gone to jail for any political reason.Does he know what is solitary cell in prison. A coward being branded as Anjaa Nenjar.Let ADMK-DMDK come to power. He will see end to his atrocities.
By anbu
8/4/2010 2:32:00 AM
I THINK ALL OF US(INCLUDING OPPOSITION LEADER)NAME IT OUR CM "MUTHALVAR" BY ANBUDAN PAZHANISAMY.
By PALANISAMY
8/4/2010 2:25:00 AM
தேசிய அளவில் இந்தியாவையும் மாநில அளவில் தமிழ்நாட்டையும் சமூக அளவில் காக்கும் உரிமை நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது,அந்த வரிசையில் போலி தேசப்பற்று,போலி மக்கள் நலன்,ஊழல்,லஞ்சம்,அதிகாரிகளின் சேவையின்மை,விலைவாசி உயர்வு,இலவச மோகமூட்டுவது,கருப்பு பணம்,முறைகேடானவர்கள் தேர்தலில் போட்டியிடுவது,நல்லவர்களை போட்டியிட ச்செய்வது,ஆகியன சில நல்ல காரியங்களை நாம்தான் வலிய ச்செய்யவேண்டும்,
By அன்புமணி
8/4/2010 2:14:00 AM
இந்த அடைமொழிகள் தமிழ்கலாச்சாரத்தின் கேவலமான பக்கங்களில் ஒன்று. அஞ்சாநெஞ்சர்களும் அட்டாக் பாண்டிகளும், தளபதிகளும் அடைமொழி தேடும்போது, "ஷோ பிசினஸ்"ல் இருந்து வந்த, விளம்பரப்பிரியர்களான நமது தலைவர்களுக்கும் இந்த அடைமொழி போதை தேவைப்படுகிறது. இதெல்லாம் ஒன்றுக்கும் பயனற்றவை என்று தைரியமாய் தலையங்கம் எழுதிய தினமணிக்கு நன்றி. மதுரைக்காரன்.
By மதுரைக்காரன்.
8/4/2010 1:21:00 AM
ராஜீயத் துறையில் நான் செய்திருக்கும் சோதனைகள், இந்தியாவுக்கு மாத்திரமல்ல, ஓரளவுக்கு 'நாகரிக' உலகத்திற்கும் இப்பொழுது தெரிந்தே இருக்கின்றன. என்னளவில் அவற்றை நான் முக்கியமாகக் கருதவில்லை. அவை எனக்குத் தேடித் தந்திருக்கும் 'மகாத்மா' பட்டத்தையும் நான் மதிக்கவில்லை. அப்பட்டம் எனக்கு எப்பொழுதும் மன வேதனையையே தந்திருக்கிறது. அப்பட்டத்தினால் நான் எந்தச் சமயத்திலும் ஒரு கண நேரமாவது பரவசம் அடைந்ததாக எனக்கு நினைவு இல்லை. - மகாத்மா காந்தியடிகள் தன் சுய சரிதை - சத்திய சோதனையின் முன்னுரையில்...
By அன்புடன், செந்தில் குமார், தேவன்
8/4/2010 1:16:00 AM
The editorial is a timely one.Thiruvlargal M.karunanidhi,J.Jayalalitha.Ramadoss and Vijayakanth should see this and should realise.Further Peraasiriyar(Professor)K.Anbazhagan,and others should also realise.my humble request to the Editor o Dinamani is to send a copy of this editorial direct to persons concerned. venkatachalamr
By VENKATACHALAM.R.
8/4/2010 1:12:00 AM
The editorial is a timely one.Thiruvlargal M.karunanidhi,J.Jayalalitha.Ramadoss and Vijayakanth should see this and should realise.Further Peraasiriyar(Professor)K.Anbazhagan,and others should also realise.my humble request to the Editor o Dinamani is to send a copy of this editorial direct to persons concerned. venkatachalamr
By VENKATACHALAM.R.
8/4/2010 1:12:00 AM
Excellent Article....Hope the concerned parties read this and try to change for the good.........to focus on people than themselves......
By Pranatharthiharan Sundaresan
8/4/2010 1:06:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக