ஞாயிறு, 4 ஜூலை, 2010

பள்ளி, கல்லூரிகளில் தமிழ்ச் செம்மொழிப் பாடம்

First Published : 04 Jul 2010 01:19:09 AM IST


சென்னை, ஜூலை 3: தமிழகத்தின் பள்ளி, கல்லூரி பல்கலைக்கழகப் பாடத் திட்டங்களில், "தமிழ்ச் செம்மொழி' என்ற தலைப்பு இடம்பெறச் செய்யும் பணியை விரைந்து மேற்கொள்ள பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கேட்டுக் கொள்ளப்பட்டார்.உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் மீது மேற்கொள்ள வேண்டிய தொடர் நடவடிக்கைகள் குறித்து முதல்வர் கருணாநிதி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தின் விவரம்: சிறந்த மென்பொருளுக்கு ஒரு லட்சம் பரிசு:தமிழ் மென்பொருள்களுக்குள் சிறந்த மென்பொருள் ஒன்றை தேர்வு செய்து, அதை உருவாக்கியவருக்கு "கணியன் பூங்குன்றனார்' பெயரில் ஒரு லட்சம் ரூபாய் பரிசு தொகையுடன் விருதும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்படுவது ஆண்டுதோறும் தொடரும் என்ற முடிவினையொட்டி, இந்த ஆண்டும் அதற்கான கருத்துரு பெற்று அறிவிப்பதென்று தீர்மானிக்கப்பட்டது.பள்ளி, கல்லூரிகளில் தமிழ்ச் செம்மொழி பாடம்:தமிழகத்தின் பள்ளி, கல்லூரி பல்கலைக்கழகப் பாடத் திட்டங்களில், "தமிழ்ச் செம்மொழி' என்ற தலைப்பு அடுத்த கல்வியாண்டு முதல் இடம்பெறுவதற்கு ஆவன செய்யப்படும் என்ற அறிவிப்பு தொடர்பாக பேசப்பட்டது. அதுபற்றி விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று முடிவெடுக்கப்பட்டது. தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் ஆலோசனைகளையும், இதுகுறித்து கேட்டுப் பெறுவதென்றும் தீர்மானிக்கப்பட்டது.தொல்காப்பியர் உலகத் தமிழ்ச் செம்மொழி சங்கம்:மதுரையில் தொடங்கப்படவுள்ள "தொல்காப்பியர் உலகத் தமிழ்ச் செம்மொழிச் சங்கம்' நிறைவேற்றவுள்ள பொறுப்புகள் குறித்த தீர்மானம் குறித்து விவாதிக்கப்பட்டது. அடுத்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை எப்படி நடத்துவது, எங்கு நடத்துவது என்ற திட்டங்களையும், திராவிடர் மொழி, கலை, பண்பாடு, வாழ்வியல் ஆகியவற்றைத் தொகுத்து நிரந்தரக் கண்காட்சி ஒன்றை அமைத்தல், ஆவணக் காப்பகம் ஒன்றை உருவாக்கி பராமரித்தல், தனித்தனி தீவுகளைப் போல சிதறுண்டு கிடக்கும் தமிழராய்ச்சி உலகத்தை ஒருங்கிணைத்தல் ஆகிய பணிகளை செயல்படுத்த உரிய திட்டத்தினை தயாரித்து, அதற்கான செலவினம் குறித்தும் அறிக்கை அளித்திட தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தரை கேட்டு கொள்ளலாம் என்று தீர்மானிக்கப்பட்டது.கோவையில் ரூ.100 கோடியில் மேம்பாலப் பணி:கோவை காந்திபுரத்தில் அமையவுள்ள செம்மொழிப் பூங்கா பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் களைய சுமார் ரூ.100 கோடி மதிப்பீட்டில் ஒரு மேம்பாலம் அமைக்கப்படும் என்ற முடிவு குறித்து பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது.தமிழ் மொழியின் சிறந்த படைப்புகளை பிற இந்திய மொழிகளிலும், ஐரோப்பிய, ஆசிய மொழிகளிலும் மொழி பெயர்த்து வெளியிடவும், பிற மொழி இலக்கியங்களை தமிழில் மொழி பெயர்த்திடவும், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணினியியல், மருத்துவம் போன்ற அறிவியல் திறனை வளர்ப்பதற்கு தேவையான நூல்களை பிற மொழிகளில் இருந்து தமிழாக்கம் செய்திடவும் தேவையான பணிகள் மேற்கொள்ளப்படும் என்ற தீர்மானம் குறித்து விவாதிக்கப்பட்டது.இதற்கென ஒரு வல்லுநர் குழுவை அமைப்பதென்றும், மொழி பெயர்ப்பு பயிற்சி அளித்திட தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் திட்டம் ஒன்றை வகுத்து செயல்படுத்துவதென்றும் முடிவெடுக்கப்பட்டது.தமிழ் வளர்ச்சிக்கு ரூ.100 கோடியில் சிறப்பு நிதியம்:தமிழ் வளர்ச்சிக்கென்றே தனியாக தமிழக அரசின் சார்பில் ரூ.100 கோடியில் சிறப்பு நிதியம் உருவாக்கப்பட்டு உரிய முறைகளை வகுத்து கொண்டு செயல்படுத்தப்படும் என்ற முடிவு குறித்து விவாதிக்கப்பட்டு, விரைவில் இந்த நிதியத்தை உருவாக்கி அறிவிப்பதென்று தீர்மானிக்கப்பட்டது.அயல்நாட்டு தமிழர்களுக்கென தனித்துறை:இறுதியாக அயல்நாடுகளில் வாழும் இந்தியத் தமிழர்கள் நலன் காக்கவும், அயல்நாடுகளில் தேவைப்படும் தமிழ் வளர்ச்சிப் பணிகளுக்கு உதவிடவும் தனித்துறை ஒன்றை உருவாக்கிட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
தொடர் நடவடிக்கைகளுக்குப் பாராட்டுகள்.அயல்வாழ் தமிழர் துறை வேண்டுமென்பது நீண்ட நாள் வேண்டுகோள். உடனடியாக அத்துறையை உருவாக்க வேண்டும். தமிழ்நலம் நாடும் தமிழர்களுக்குப் பொறுப்புகள் வழங்க வேண்டும். தமிழர்கள் வாழும் நாடுகளுக்குத் தமிழர்களையே தூதரக அதிகாரிகளாக நியமிக்க வேண்டும். தமிழ்ச் செம்மொழி குறித்த பாடங்கள் ஆங்கிலம் முதலான பிற மொழிப் பாடங்களிலும் இடம் பெற வேண்டும. தொல்காப்பியர் உலகத் தமிழ்ச் செம்மொழிச் சங்கத்திற்குத் தமிழாய்ந்த தமிழர்களையே அனைத்துப் பொறுப்புகளிலும் அமர்த்தல் வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/4/2010 3:16:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக