திங்கள், 5 ஜூலை, 2010

சித்திரங்களின் சிந்தனைக் களஞ்சியம்

சித்திரங்களின் சிந்தனைக் களஞ்சியம்



சிரிக்க வைப்பது சிந்தனையைத் தூண்ட வேண்டும். அழுதவன் சிரிக்க ஆரம்பித்தால், சிரித்தபடி அவனை அழ வைத்த ஆணவக்காரர்கள் அழும் காலம் விரைவில் வந்துவிடும்.
திரு. மதி அவர்கள் தினமணி இதழில் வரைந்த கார்ட்டூன்களின் தொகுப்பு வெளிவந்துள்ளது. தற்போதைய பத்திரிகை உலகில் மதி அவர்களின் கார்ட்டூன்கள் தனிப்பட்ட சிறப்புடன் பலராலும் நாள்தோறும் எதிர்பார்க்கக் கூடியனவாக இருக்கின்றன.கார்ட்டூன் என்றால் அரசியல் கேலிச் சித்திரம் என்று ஆங்கிலம்- தமிழ் அகராதியில் பொருள் தரப்படுகிறது. நாட்டு மக்களின் அடிப்படை மனித உரிமைகளை, ஜனநாயக உணர்வைப் பாதுகாப்பதில் பத்திரிகை உலகம் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. மக்களை அல்லற்படுத்தும் குற்றங்களை, குறைபாடுகளை மக்களுக்குத் தெரியப்படுத்தவும், அவற்றை நீக்குவதற்கான வழிமுறைகளை வலியுறுத்தவும் பத்திரிகைகள் பெரிதும் உதவுகின்றன. கொடுமைகளை நீக்கக் கடுமையான கட்டுரைகளும், ஆத்திரமிக்க அறிவுரைகளும் தரும் பலன்களை விட, கனிவாக, மென்மையாக, மக்களுக்கே புரியாத வகையில் நடைபெறும் அவலங்களைப் புலப்படுத்த, சிரிக்கும் வகையில் எளிதில் வெளிப்படுத்த கேலிச் சித்திரங்கள் மிகவும் பயன்படுகின்றன. இங்கிலாந்து நாட்டில் பிரபல கேலிச் சித்திரக்காரராக விளங்கியவர் "லோ' என்பவர். அவரின் முழுப்பெயர் டேவிட் அலெக்சாண்டர் செசில் லோ (1891-1963). நியுசிலாந்து நாட்டில் பிறந்தவர், சிறுவயதிலேயே சித்திரங்கள் வரைவதில் பழகி, பிறகு இங்கிலாந்து வந்து கார்ட்டூன்கள் வரைவதில் முதலிடம் பெற்றார். 1930 முதல் ஜெர்மனியில் ஹிட்லரும் இத்தாலியில் முசோலினியும் நடத்திய பாசிச ஆட்சி உலக ஜனநாயக நாடுகளை அதிர வைத்தபோது, லோ வரைந்த கார்ட்டூன்கள் அந்த எதேச்சாதிகாரிகளைக் கேலி செய்து அகற்றப்பட வேண்டிய கேலிக்குரிய கோமாளிகளாக ஆக்கின. ஜனநாயகத்தைக் காப்பாற்ற சர்ச்சில் ஆற்றிய உணர்ச்சிமிக்க முழக்கங்களைவிட, நேசப் படைகள் எழுச்சியுடன் போர்க்களங்களில் நடத்திய வீரதீரச் செயல்களை விட லோ வரைந்த சித்திரங்கள் நாள்தோறும், கனிவாக, வெற்றியின் நம்பிக்கை நட்சத்திரங்களாக, எதேச்சாதிகாரத்தை வீழ்த்துவதில் பொதுமக்களை உற்சாகப்படுத்தின. தான் வெற்றி பெற்று இங்கிலாந்து நாட்டை அடிமைப்படுத்தியதும், தனக்கு எதிராக இருந்தவர்களைத் தீர்த்துக் கட்ட ஹிட்லர் தயாரித்து வைத்திருந்த கருப்புப் பட்டியலில் லோ பெயர் முக்கியமான இடத்தைப் பெற்றிருந்ததாம். கேலிச் சித்திரம் வெற்றியடைவதற்கு மூன்று முக்கிய பண்புகள் தேவைப்படுகின்றன. தாம் படும் அவதிகளுக்கான காரணங்கள் மக்களுக்கு எளிதில் புரிவதில்லை. முதலில் கேலிச் சித்திரக்காரருக்குத் தாம் வரையும் சித்திரம் வெளியிடும் விவரத்துக்கு அடிப்படையான உண்மை இருக்கிறது என்ற தெளிவு இருக்க வேண்டும். இல்லாத ஒன்றை வைத்து கேலி செய்வதில் பலன் இல்லை. இரண்டாவதாக, அந்தச் சித்திரம் மக்களுக்கு ஒரு நம்பிக்கையைத் தரும் என்பதில் பத்திரிகை ஆசிரியருக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். மூன்றாவதாக, கேலிச்சித்திரத்தை மக்கள் பார்த்துச் சிரிக்கிறார்கள் என்றால், கேலி செய்யும் அளவுக்கு அந்த அநீதியும், ஆபத்தும் தாழ்த்தப்பட்டு, அதைத் திரண்ட மக்கள் சக்தியால் நீக்க முடியும் என்ற ஜனநாயக உணர்வு மக்களிடையே வலுவடைய வேண்டும்.இந்த மூன்று பண்புகளும் சித்திரக்காரர் மதியிடமும், தினமணி ஆசிரியரிடமும், நாள்தோறும் சித்திரங்களைப் பார்க்கும் வாசகர்களிடமும் இருக்கின்றன என்று நான் நம்புகிறேன். சிரிக்க வைப்பது சிந்தனையைத் தூண்ட வேண்டும். அழுதவன் சிரிக்க ஆரம்பித்தால், சிரித்தபடி அவனை அழ வைத்த ஆணவக்காரர்கள் அழும் காலம் விரைவில் வந்துவிடும். மதியின் கேலிச் சித்திரங்களைத் தொகுத்துள்ள நூல் சிரிப்பின் மூலம் சிந்தனைகளை வளர்க்கும் கலைக் களஞ்சியம். அதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.
கருத்துக்கள்


ஒரு பெரிய புத்தகம் உணர்த்த முடியாத கருத்தை ஒரு கேலிப்படம் அல்லது கருத்துப்படம் கருத்தோவியம் நன்கு எளிதில் உணரத்தி அந்நூல் செய்ய முடியாதவற்றைச் செய்துவிடுகிறது. எனவே செழியனார் சொல்வது சரிதான். ஆனால், தினமணியில் மதியின் படங்கள் இணையப் பக்கங்களில் உடனுக்குடன் பாரக்க முடியவில்லை.சான்றாக இன்றைய கருத்தோவியத்தைச் சொடுக்கினால், நேற்றைய கருத்தோவியம்தான் வருகிறது. இன்றைக்கு சூலை 5 ஆம் நாள் என்றாலும் 3 கருத்தோவியங்கள்மட்டுமே காண முடிகிறது. ஒவ்வொரு திங்களிலும் நடைபெறும் அவலமதான் இது. சூன் திங்களில் 19, ஏப்பிரலில் 8, மேத்திங்களில் 19 எனக் குறைவாகத்தான் கருத்தோவியங்களைக கண்டு களிக்க முடிகிறது. மதியின் கருத்தோவிய வெளியீட்டு விழாவில் பங்கேற்றுப் பாராட்டும் ஆசிரியர் அன்றாடம் வைகறையிலேயே கருத்தோவியங்களைக் காண வசதி செய்து தர வேண்டும். கருத்தோவியங்களின் 3 பண்புகளைச் சரியாகச் சுட்டிக் காட்டிய செழியனாருக்குப் பாராட்டுகள். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/5/2010 3:38:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக