இன்றைய மெட்ரிக் பள்ளிகள் தமிழும் தெரியாத ஆங்கிலமும் தெரியாத ஒரு தலைமுறையை உருவாக்கி வருகின்றன' - உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக் கருத்தரங்கில் பேராசிரியை ஒருவர் இவ்வாறு வருத்தம் தெரிவித்தார். இது முற்றிலும் உண்மை. தங்கள் பிள்ளைகள் ஆங்கிலத்தில் நாலு வார்த்தை பேச வேண்டும் என்ற தீராத ஆசையுடன் பெற்றோர்கள் குழந்தைகளை ஆங்கில வழிப் பள்ளிகளில் சேர்க்கிறார்கள். பணக்கார வர்க்கம், நடுத்தர வர்க்கம், ஏழை வர்க்கம் என எந்தத் தரப்புப் பெற்றோருமே இதற்கு விதிவிலக்கு அல்ல. இந்த ஆங்கில மோகத்தைப் பயன்படுத்தித்தான் மூலைக்கு மூலை மெட்ரிக் பள்ளிகள் முளைத்துக் கல்வியை அமோகமாக வியாபாரம் செய்து வருகின்றன. ஆனால், இதன் உண்மையான விளைவு என்ன தெரியுமா? பனிரெண்டாம் வகுப்பு வரை ஆங்கிலத்திலேயே பயின்றாலும் ஆங்கிலத்தில் முழுமையாகப் பேசவோ, எழுதவோ தெரியாத நிலையில்தான் பெரும்பாலான மாணவர்கள் உள்ளனர். ஆங்கில வழியில் படித்ததன் இலவச இணைப்பாக, அவர்களால் தமிழிலும் பிழையின்றி பேசவோ எழுதவோ முடிவதில்லை. பேசும்போது இடையிடையே "வெயிட்டிங், கோயிங், ஈட்டிங், ஸôரி, பை-பை, மிஸ்டேக்' என ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசுவதால், ஆங்கிலத்தில் பேசுவதாக அர்த்தம் ஆகிவிடுமா? இன்றைய மெட்ரிக் பள்ளி பாடத்திட்டமும், பயிற்றுவிக்கும் முறையும் இந்த அளவில்தான் உள்ளன. ஒரு பக்க ஆங்கில கட்டுரையை வரிவிடாமல் ஒப்பித்தாலும், அதற்கு பிள்ளைகளுக்கு அர்த்தம் தெரிவதில்லை. பாடப் புத்தகத்தில் மாதிரி வடிவம் இல்லாத விடுப்பு விண்ணப்பத்தைச் சுயமாக யோசித்து எழுதத் தெரியவில்லை. பெரும்பாலான மெட்ரிக் பள்ளிகளில் ஆசிரியர்களாக இருப்பவர்கள் முறையான கல்வித் தகுதியைப் பெற்றவர்கள் அல்லர். ஒரு பட்டப்படிப்பு படித்திருந்தால் போதுமா, ஆசிரியருக்கான தகுதியைப் பெற்றுவிடுவார்களா? ஆனால், குறைந்த ஊதியத்திற்கு ஆள்களைத் தேடும் கல்வி நிறுவனங்கள், இவர்கள் போன்றோரைத்தான் ஆசிரியர்களாக நியமிக்கின்றன. விளைவு... தமிழுமின்றி ஆங்கிலமும் இன்றி புது மொழியே உருவாகிவிட்டது. சில ஊடகங்களும் இந்த த(தி)மிங்கிலத்தை தீனிபோட்டு வளர்க்கின்றன. ஒவ்வொரு மொழிக்கும் தனிப்பெருமை உள்ளது; ஆங்கிலத்தைத் தடையின்றி பேசுவது எளிதல்ல; அது பெருமைப்படக் கூடிய செயல்தான். அதேநேரம் தமிழில் பேசும்போது ஆங்கிலத்தைக் கூடியவரை பயன்படுத்தாமல் தமிழைத் தமிழாகப் பேச வேண்டும். தமிழுடன் இரண்டற கலந்துவிட்ட(!) பிறமொழிச் சொற்களை அப்படியே பயன்படுத்துவதில் தவறில்லை என்கிற வாதம் முன்வைக்கப்படுகிறது. அந்த பிறமொழிச் சொற்களுக்கு இணையான, பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட தமிழ்ச் சொற்கள் இருக்கும்போது, ஏன் பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்த வேண்டும்? ஒரு சிறிய சொற்றொடரை கவனிப்போம். "ஹலோ, தியேட்டர்ல ஈவ்னிங் ஷோவுக்கு டிக்கெட் புக் பண்ணியிருக்கிறேன். நான் வரும் வரை வெயிட் பண்ணு. படம் சூப்பரா இருக்குதாம், மிஸ் பண்ணிடக் கூடாது'- மொத்தம் 17 வார்த்தைகளில் 9 வார்த்தைகள் ஆங்கிலம். இதுதான் இன்றைய தமிழகம். அன்றாட வாழ்வில் பயன்படுத்தக்கூடிய டி.வி., பஸ், பஸ்-ஸ்டாண்ட், ஸ்டாப், ஸ்பீட், ஸ்லோ, டீ, சினிமா போன்ற சொற்களுக்கு இணையாக தொலைக்காட்சி, பேருந்து, பேருந்து நிலையம், நிறுத்தம், வேகம், மெதுவாக, தேநீர், திரைப்படம் போன்ற இனிமையான தமிழ்ச் சொற்கள் உள்ளன. இவற்றைப் பெரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர். அப்படியிருக்கையில், பஸ் வந்துவிடுமா? சினிமாவுக்கு போகிறேன், லஞ்ச் சாப்பிட வருகிறீர்களா? டி.வி. புரோகிராம் என ஏன் ஆங்கிலத்தை இழுத்துப் பிடிக்க வேண்டும்? "ஐயம் கோயிங் டூ திரைப்படம்' என எந்த ஆங்கிலேயரும் சொல்லமாட்டார்கள். பொறியியல் கல்வியே தமிழில் வந்துவிட்டது. கணினி தொடர்பான ஆங்கில சொற்களுக்கு மிகப் பொருத்தமான தமிழ் கலைச் சொற்கள் கண்டறியப்பட்டுவிட்டன. மென்பொருள் உலகை ஆளும் தகுதியை தமிழ் பெற்றுவிட்டது. எத்தனையோ மொழிகளில் தமிழ்ச் சொற்கள் கலந்திருக்கின்றன. அது தமிழுக்குப் பெருமை. ஆனால், பிறமொழிச் சொற்கள் தமிழில் கலப்பது நமக்குச் சிறுமை. பேச்சுத் தமிழுடன் ஒப்பிடுகையில் உரைநடைத் தமிழ் சற்று பரவாயில்லை. உரைநடைத் தமிழ் மென்மேலும் மேம்பட்டு, தமிழர்கள் எல்லோரும் தனித்தமிழில் பேசினால் நன்று; அது சாத்தியப்படாவிட்டால் முடிந்தவரை பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்தாமல் பேசலாமே?
கருத்துக்கள்
By Ilakkuvanar Thiruvalluvan
7/9/2010 7:13:00 AM
7/9/2010 7:13:00 AM
By sumban
7/8/2010 5:46:00 PM
7/8/2010 5:46:00 PM
By Kee Yea Raa
7/8/2010 2:01:00 PM
7/8/2010 2:01:00 PM
By S. RAVIKUMAR, 2/18 C.V. STREET, SANRORKUPPAM - 635814
7/8/2010 6:32:00 AM
7/8/2010 6:32:00 AM
By NAGARAJAN
7/8/2010 2:57:00 AM
7/8/2010 2:57:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்