திருநெல்வேலி, ஜூலை 6: பொறியியல் பட்டப் படிப்புகளுக்கு நடைபெற்று வரும் கலந்தாய்வில் திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகத்துக்கும், தமிழ் வழி கல்விக்கும் மாணவர்கள் சேர்க்கப்படாததால் 300 மாணவர்களுக்கான வாய்ப்பு பறிபோகியுள்ளது. தமிழ்நாட்டில் தமிழ் வழிக் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் நிகழ் கல்வியாண்டு முதல் தமிழில் பொறியியல் பாடப் பிரிவுகள் தொடங்கப்படும் என உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்திருந்தார். அதன்படி, சென்னை, கோவை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய நான்கு இடங்களிலும் உள்ள அண்ணா பல்கலைக்கழகங்களிலும், பல்கலைக்கழக கல்லூரிகளிலும் இந்த கல்வியாண்டு முதல் தமிழ் வழி பொறியியல் பட்டப் படிப்புகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. முதலாவது, சிவில் மற்றும் மெக்கானிக்கல் பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்டு அவற்றில் மொத்தம் 1,800 மாணவ, மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், பொறியியல் பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த முதல் கட்ட கலந்தாய்வில், சென்னை, திருச்சி அண்ணா பல்கலைக்கழகங்களுக்கும், அவற்றின் கல்லூரிகளுக்கும் தமிழ் வழி பாடத்திற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி, கோவை அண்ணா பல்கலைக்கழகங்களுக்கு அவற்றின் கல்லூரிகளுக்கு மட்டுமே தமிழ் வழி பாடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருவதாகவும், பல்கலைக்கழக துறைகளுக்கு மாணவர்கள் சேர்க்கப்படவில்லை என்றும் அண்ணா பல்கலைக்கழக வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன. ஒவ்வொரு பாடப் பிரிவிலும் தலா 60 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்ததால் இப்போது தமிழ் வழிக் கல்வியை விரும்பும் 240 மாணவர்களுக்கான வாய்ப்பு பறிபோகியுள்ளது. கோவை, திருச்சி, திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகங்கள் 2007-ம் ஆண்டு புதிதாக தொடங்கப்பட்டன. இவற்றில் கோவை மற்றும் திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகங்களுடன் அந்தந்த இடங்களில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகள் இதுவரையில் இணைக்கப்படவில்லை. இணைப்புக்கு அரசு பொறியியல் கல்லூரிகளின் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களில் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் அந்த திட்டம் காலதாமதமாகி வருகிறது. எனினும், திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியை இங்குள்ள அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைப்பதற்கான அரசாணை விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. கோவை அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ் வழி பாடப் பிரிவுகளை நடத்துவதற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை எனக் கூறி அங்கு மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல, திருநெல்வேலியிலும் உள்கட்டமைப்பு வசதி இல்லை எனக் கூறி மாணவர் சேர்க்கைக்கு தடை விதித்திருக்கலாம் என கருதப்படுகிறது. ஆனால், இங்கு வாடகை கட்டடத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பல்கலைக்கழக துறைகள் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றன. எனினும், மாணவர் சேர்க்கைக்கு தடை விதித்திருப்பது மாணவர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.மாணவர் சேர்க்கை இல்லை: இதுமட்டுமன்றி, திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள 3 இளநிலை பொறியியல் பட்டப் படிப்புகளுக்கும் கலந்தாய்வு மூலம் மாணவர்கள் சேர்க்கப்படவில்லை. இந்த பல்கலைக்கழக துறைகளுக்கு கடந்த 2 ஆண்டுகளாக நேரடியாக மாணவர்கள் சேர்க்கப்பட்டு வந்தனர். அதில் உள்ள சிரமங்களைத் தவிர்க்கும் வகையில், இந்த ஆண்டு முதல் அந்த 3 பாடப் பிரிவுகளுக்கும் பொது கலந்தாய்வு மூலம் 180 மாணவர்களை சேர்க்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்தது. அதன்படி, பல்கலைக்கழக துறைகளையும் பொது கலந்தாய்வு பட்டியலில் சேர்த்துக் கொள்ளும்படி திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் தொழில்நுட்ப கல்வித் துறைக்கு கடிதம் எழுதப்பட்டது. ஆனால், இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் கலந்தாய்வில் இப்பல்கலைக்கழக துறைகளுக்கு மாணவர்கள் சேர்க்கப்படவில்லை என்று அண்ணா பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும், திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகத்தின் தூத்துக்குடி, நாகர்கோவில் பொறியியல் கல்லூரிகள் கலந்தாய்வு பட்டியலில் இடம் பெற்றுள்ளன. எனவே, இனிமேல் நேரடியாக மாணவர்கள் சேர்க்கைக்கு பல்கலைக்கழகம் முயற்சி மேற்கொண்டால் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்கள் கிடைப்பது அரிது. ஆதலால், பல்கலைக்கழக கல்வித் தரம் குறைய நேரிடும் என பல்கலைக்கழக ஆசிரியர்கள் அச்சம் தெரிவித்தனர். ஆக மொத்தத்தில் திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகம் மூலம் பயன்பெற வேண்டிய 300 மாணவர்களின் வாய்ப்பு பறிபோயுள்ளது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
கருத்துக்கள்
By Ilakkuvanar Thiruvalluvan
7/7/2010 3:57:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
7/7/2010 3:57:00 AM