சென்னை, ஜூலை 9: தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதலை கண்டிக்கும் வகையில் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திமுக வாபஸ் பெற வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.இது குறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:இலங்கைத் தமிழர்கள் பிரச்னையில் கடிதங்களை எழுதியதுபோல, மீனவர்கள் பிரச்னையிலும் கடிதம் எழுதியும், கண்டனம் தெரிவித்தும் காலத்தை கடத்திக் கொண்டு இருக்கிறார் முதல்வர் கருணாநிதி.நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த வெள்ளப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் கோடியக்கரைக்கும், தோப்புத் துறைக்கும் இடையே தங்களது படகுகளில் புதன்கிழமை (ஜூலை 7) அன்று மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் படகுகளை சுற்றிவளைத்து கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் செல்லப்பன் என்பவர் உயிரிழந்துள்ளார். தமிழக மீனவர்களின் படகுகளில் இருந்த மீன்கள், உணவுப் பொருட்கள் மற்றும் வலைகளை இலங்கை கடற்படையினர் கடலில் தூக்கி வீசியுள்ளனர். அறிவழகன் என்பவரின் படகில் இருந்தவர்களை கொடூரமாகத் தாக்கி, நிர்வாணப்படுத்தி விரட்டி அடித்துள்ளனர். நாகை மாவட்டம், புஷ்பவனம் கிராமத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களையும் கொடுமைபடுத்தியுள்ளனர். இலங்கை கடற்படையினரின் இந்த கொடூரச் செயல் கடும் கண்டனத்துக்குரியது. இது போன்ற காட்டுமிராண்டித்தனமான செயல்களில் இலங்கை அரசு அடிக்கடி ஈடுபட்டு வருகிறது. இதனால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கருணாநிதி வழக்கம்போல பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.இலங்கை தூதரகம் முன்பு தி.மு.க. மீனவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை. உண்மையிலேயே கருணாநிதிக்கு மீனவ மக்களின் மீது அக்கறை இருக்குமானால், மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும். மத்தியில் உள்ள தி.மு.க. அமைச்சர்களை ராஜிநாமா செய்யுமாறு அறிவுறுத்த வேண்டும். ஆனால், இதை அவர் செய்ய மாட்டார் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
கருத்துக்கள்
அப்பொழுதுதான் அ.தி.மு.க. காங்.உடன் ஒட்டிக் கொள்ள முடியும். ஆட்சிக் கவிழ்ப்பைப் பயன்படுத்தாமலேயே தி.மு.க இங்கே பதவியை இழக்கும். இங்கும் மத்தியிலும் அ.தி.மு.க. கூட்டணி ஆட்சி அமையும். என்ன பேராசையடா! வேடிக்கையைச் சுவைக்கும் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/10/2010 4:06:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
7/10/2010 4:06:00 AM