சென்னை, ஜூலை 8: ஆளுநர் மாளிகை வளாகத்தில் 4 ஏக்கரில் 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை கட்ட தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் திட்டமிட்டு இருப்பதாக அப்பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் மயில்வாகனன் நடராஜன் தெரிவித்தார்.இது குறித்து வியாழக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் பேசியது:சொந்தமாக மருத்துவக் கல்லூரி கட்ட வேண்டும் என்பது தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் நீண்டநாள் திட்டமாகும். அதனை செயல்படுத்தும் வகையில் முதல் கட்டமாக கிண்டி ஆளுநர் மாளிகை வளாகத்தில் 4 ஏக்கரில் 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை கட்ட திட்டமிட்டு வருகிறோம். இடம் வழங்குவதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் இனி ஆண்டுக்கு இரண்டு பட்டமளிப்பு விழாக்களை நடத்த முடிவு செய்துள்ளோம். படிப்பை முடித்தவுடன் உடனடியாக பட்டம் கிடைப்பதற்கு வசதியாக இந்த ஏற்பாடு செய்துள்ளோம். பிப்ரவரி, ஜூலை மாதங்களில் பட்டமளிப்பு விழாக்கள் நடைபெறும். இதன் மூலம் படிப்பை முடித்தவுடன் உடனடியாக வெளிநாடு செல்ல முடியும். மருத்துவப் படிப்புக்கான பாடங்களை தமிழில் மொழி பெயர்ப்பது, புதிதாக புத்தகம் எழுதுவது போன்ற பணிகளுக்கு தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் ஊக்கமளிக்கும். மருத்துவ அறிவியல் தொடர்பாக யாராவது புத்தகம் எழுதினால் அதை வெளியிட நாங்கள் தயாராக இருக்கிறோம். மருத்துவம் சார்ந்த 3 துறைகளில் 3 ஆண்டு பட்டப் படிப்பு மற்றும் டிப்ளமோ படிப்புகளை நடத்தி வருகிறோம். இதன் மூலம் ஏராளமானவர்களுக்கு மருத்துவம் சார்ந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. இந்த ஆண்டு உடல் காய சிகிச்சை மற்றும் சுகாதார நலன் ஆகியவற்றில் முதுநிலை பட்டப்படிப்புகளை தொடங்க வேலைகள் நடைபெற்று வருகின்றன என்றார் மயில்வாகனன் நடராஜன்.
கருத்துக்கள்
அரசு இடம் அரசு தருவதால், ஏழை எளியோர் பயனுறும் வகையில் கட்டணங்கள் இருக்க வேண்டும். அத்துடன், ஆனந்தபவனிலும் இவ்வாறு மருத்துவமனைகள் எட்டி எளியோருக்கு உதவலாம். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/9/2010 6:56:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்7/9/2010 6:56:00 AM