திங்கள், 5 ஜூலை, 2010

பெயர்ப்பலகைகளில் தமிழ், குழந்தைகட்குத் தமிழ்ப் பெயரிடுதல் முதலான செயற்பாடுகளின் மூலம் தமிழ் வளர்ச்சி நலனில் கருத்து செலுத்தும் மாநகராட்சித் தலைவர் உடனே ஆங்கிலவழிக் கல்வித் திட்டத்திற்கு மூடுவிழா நடத்த வேண்டும். அதற்கு மாற்றாகத தமிழ் வழிக் கல்வியைத் தரமான நிலையில் வழங்கவும் மாநகராட்சிப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளைப்  பெருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். செமமொழி மாநாட்டை நடத்திவிட்டு தாய்த்தமிழைத்  துரத்துவது முறைதானா? சரிதானா?அறம்தானா? அன்புடன் இலக்குவனார திருவள்ளுவன்

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 


Font Size
மாநகராட்சி பள்ளிகளில் ஆங்கில வழி பாடம் - 03-07-2010

சென்னை: “சென்னை மாநகராட்சியில் மேலும் 15 பள்ளிகளில் ஆங்கில வழிப்பாடம் தொடங்கப்படும்,” என்று மேயர் சுப்ரமணியன் தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கு அவசர தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் நிதி கொடுக்கப்படுமென்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று நுங்கம்பக்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மேயர் சுப்ரமணியன் மாநகராட்சி பள்ளிகளுக்கு தேவையான நிதிகளை வழங்கினார்.

அவர் கூறியதாவது:
தனியார் பள்ளிகளில் அவசர தேவைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது போல், சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கும் அவசர தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் நிதி ஒதுக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி 120 தொடக்கப்பள்ளிகளுக்கு 3,000 ரூபாயும், 97 நடுநிலைப் பள்ளிகளுக்கு 5,000 ரூபாயும், 37 உயர்நிலைப் பள்ளிக்குக்கு 10 ஆயிரம் ரூபாயும், 30 மேல்நிலைப் பள்ளிக்கு 15 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது.

மாநகராட்சியின் 284 பள்ளிகளுக்கு அவசர தேவைக்கு உபயோகப்படுத்திக் கொள்ளும் வகையில், 16 லட்சத்து 65 ஆயிரம் ரூபாயை அந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் பள்ளிகளில் கடந்த ஆண்டு 15 தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில வழி பாடம் தொடங்கப்பட்டது. துவங்கிய போது 756 மாணவ, மாணவியர் சேர்ந்தனர். இந்த ஆண்டு ஆயிரம் பேருக்கு மேல் ஆங்கில வழிப்பாடத்தில் சேர்ந்துள்ளனர்.

ஆங்கில வழி பாடத்திட்டத்திற்கு பெற்றோர் மத்தியில் ஆதரவு இருப்பதால், இந்த ஆண்டு மேலும் தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில வழி பாடம் தொடங்கப்படும். இவ்வாறு மேயர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக