தமிழக அரசு இரு மொழிக் கொள்கையைப் பின்பற்ற வில்லை. எங்கும் ஆங்கிலமே என்னும் ஒரு மொழிக் கொள்கையைத்தான் பின்பற்றுகிறது. செம்மொழி மாநாட்டு விவரங்கள்கூட ஆங்கிலத்தில்தான் கேட்கப்பட்டன. அடையாள அட்டைக்கான விவரங்களை ஆங்கிலத்தில் பெற்ற பின்னர் அவற்றைத் தமிழ்ப்படுத்தும் முயற்சி மேற்கொண்டமையால் பல குளறுபடிகள் ஏற்பட்டன. ஆயிரக்கணக்கானவருக்கு அடையாள அட்டைகள் கிடைக்காமல் பெருங்குழப்பங்கள் ஏற்படவும் இவை வழி வகுத்தன. தமிழின் பெருமையைப் பிற மொழியினரிடம் கொண்டு சேர்க்கவில்லை. மத்திய அரசின் தொடர்ச்சியான இந்தித்திணிப்பை எதிர்ப்பதுமில்லை. டால்மியாபுரம் பெயர்மாற்றத்திற்காகத் தன்னுயிரையே கொடுக்க முன்வந்த தலைவர் வாழும் நாட்டில்தான் ஊர்களின் பெயர்களும் மத்திய அரசின் திட்டங்கள் பெயர்களும் முழக்கங்கள் பெயர்களும் இந்தியில் அமைகின்றன. தமிழ்வழிக்கல்விக்கு வாழ்வு கொடுக்க திமுக அரசு முயன்ற பொழுது காங்கிரசுதான் போலி மாணவர்களைச் சேர்த்துக்கொண்டு அதைத் தடுத்தது. தமிழ் என்பது தி.மு.க.விற்கு மட்டும் உரியது என்ற எண்ணாமல் அனைவரும் ஒன்றுபட்டுத் தமிழரின் தேசிய மொழியாம் தமிழ் எல்லா இடங்களிலும் வீற்றிருக்க நடவடிக்கை எடுத்தால்தான் தமிழ் வளரும்; வாழும். ஒரு கட்சியை மட்டும் குற்றம் கூறாமல் அனைவரும் ஒன்று சேர்ந்து தமிழை வாழ வைப்பதன் மூலம் நம்மை வாழவைப்போம். அன்புடன்
இலக்குவனார் திருவள்ளுவன்
இலக்குவனார் திருவள்ளுவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக