சிறிலங்காவில் கபொத சாதாரணதர மற்றும் உயர்தர மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் சீனமொழியும் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளது.
கொழும்பில் கன்பூசியஸ் நிலையத்தில்
இடம்பெற்ற சீனமொழி பயிற்சி நிறைவு நிகழ்வில் பேசிய போது, சிறிலங்காவின்
கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
சிறிலங்கா – சீன நட்புறவை மேலும் வலுப்படுத்திக் கொள்ளவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கென சீனமொழி ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்குத் தேவையான மனிதவளம் மற்றும் பெளதிக வளங்களை வழங்க சீனா முன்வந்துள்ளதாகவும் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர், செப். 1: பல்கலை மற்றும் கல்லூரிகளில் நிகழ் கல்வியாண்டின் 2-ம் பருவம் முதலே செம்மொழிப் பாடத் திட்டத்தை அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது என்றார் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் ம. ராசேந்திரன்.கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கடந்த ஜூலை 27-ம் தேதி தொடங்கப்பட்ட கலைஞர் உலகச் செம்மொழிகள் உயராய்வு மையத்தின் நோக்கம், அதன் செயல்பாடுகள் குறித்து துணைவேந்தர் ராசேந்திரன் மேலும் கூறியது:மத்திய அரசின் நிதியுதவியுடன் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கலைஞர் உலகச் செம்மொழிகள் உயராய்வு மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் உலகச் செம்மொழிகள், இலக்கியங்களின் வடிவம், உள்ளடக்கம் தொடர்பாக ஒப்பீட்டு ஒற்றுமை, வேற்றுமை கண்டறிதல், உலகச் செம்மொழி இலக்கிய வரலாற்றை உருவாக்குதல், உலகச் செம்மொழிகளின் இலக்கியக் கொள்கைகளைக் கண்டறிதல், இலக்கிய வகைப்பாடுகளை அறிதல், மிகச் சிறந்த இலக்கியங்களை மொழிபெயர்த்தல், சமூகப் பண்பாட்டு விழுமியங்களுக்கான கலைக் களஞ்சியம் உருவாக்குதல், உலகச் செம்மொழிகளின் மிகச் சிறந்த இலக்கியப் படைப்பாளிகள் பற்றிய நூல்களை உருவாக்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.இந்த நோக்கங்களின் அடிப்படையில், பல்கலைக்கழக விதிகளுக்குள்பட்டு முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள், எந்த நாட்டைச் சேர்ந்த யார் வேண்டுமானாலும் இந்த மையத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளலாம். ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டத்துக்கான ஆய்வுகளும் இங்கு மேற்கொள்ளலாம். ஆய்வில் ஈடுபடுவோருக்கு பல்கலைக்கழக விதிகளின்படி உதவித் தொகை பெறவும் வாய்ப்புள்ளது.இந்த மையத்தின் செயல்பாட்டுக்காக பல்கலைக்கழக மானியக் குழு ரூ. 1.95 கோடி வழங்கியுள்ளது. இந்த ஒதுக்கீடு ஓராண்டுக்கு மட்டுமே. ஆண்டுதோறும் பல்கலைக்கழகம் மாநில அரசு மூலம் மத்திய அரசிடம் நிதியைப் பெற்று, மையத்தை வழிநடத்தும். நிகழாண்டு வழங்கப்படவுள்ள ரூ. 1.95 கோடியில் முதல் தவணையாக ரூ. 1 கோடி அளிக்க உள்ளது.உலகளவில் இப்படியொரு மையம் இல்லை என்பதால், நிதி தொடர்ந்து பெறுவதில் சிக்கல் இருக்காது. மையக் கட்டடத்துக்கு நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், மத்திய நிதித் துறை இணையமைச்சர் எஸ்.எஸ். பழநிமாணிக்கம் ரூ. 2 கோடி அளித்துள்ளார்.தமிழ், சம்ஸ்கிருதம், கிரேக்கம், லத்தீன், ஹீபுரு, சீனம், அரபி ஆகிய 7 செம்மொழிகளும் இவற்றுடன் ஆங்கிலத்துக்குமாக 8 மொழிகளுக்கு ஒவ்வொரு மொழிக்கும் பேராசிரியர் ஒருவர், இணைப் பேராசிரியர் ஒருவர், உதவிப் பேராசிரியர் ஒருவர் என 24 கல்வியாளர்களும், மைய இயக்குநர் ஒருவரும் வேலைவாய்ப்பைப் பெறவுள்ளனர். பேராசிரியர்கள், இயக்குநர் தேர்வுகள் முறைப்படி இணையதளத்தில் அறிவிப்பு செய்தும், அந்தந்த மொழிப் பல்கலைக்கழகம் வாயிலாக கல்வியாளர்கள் கண்டறியப்பட்டு நியமிக்கப்படவுள்ளனர்.தமிழ், வடமொழி, பாலி, ஆங்கிலம் ஆகிய மொழிகள் மட்டுமன்றி இலக்கியம், இலக்கணம், தத்துவம், யாப்பு, மொழியியல் ஆகிய மொழிகளில் பல்துறை புலமை பெற்ற பேராசிரியர் சோ.ந. கந்தசாமி இந்த மையத்தின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மற்ற நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.செம்மொழிப் பாடத் திட்டத்தை கல்லுரி, பல்கலைக்கழகங்களில் செயல்படுத்துவதற்கேற்ப பாடத் திட்டம், செயல் திட்டத்தை உருவாக்கும் பணி தமிழ்ப் பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால், தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் தவிர, பிற பல்கலைக்கழக தமிழ்த் துறைத் தலைவர்கள், கல்லூரிக் கல்வி இணை இயக்குநர்கள் ஆகியோர் கொண்ட கூட்டத்தை நடத்தி தமிழ்ச் செம்மொழி வரலாறு, தமிழின் செம்மொழிப் பண்புகள், ஒப்பீட்டு நோக்கில் உலகத் தமிழ்ச் செம்மொழிகள் ஆகிய தலைப்புகளில் செம்மொழிப் பாடத் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.இந்தப் பாடத் திட்டம் நிகழ் கல்வியாண்டில் (2010-2011) பருவமுறை உள்ள கல்லூரிகளில் 2-வது பருவத்திலும், பருவமுறை இல்லாத கல்லூரிகளில் வரும் கல்வியாண்டின் 2-வது ஆண்டிலும் பாடத் திட்டமாகச் சேர்க்கப்படும் என்றார் துணை வேந்தர் ராசேந்திரன்.
ஆங்கிலத்தை உலகச் செம்மொழிகள் உயராய்வு மையத்தில் சேர்ப்பதால் ஆங்கிலமும் செம்மொழி என்றாகி விடும். எனவே, அதனை இம்மையத்திலிருந்து எடுத்து விட்டு வேறு மையம் மூலம் அப்பணிகளை மேற்கொள்ளும். அதே நேரம் பிற மொழிகளில் பெயர்ப்புப் பணி பார்த்தல் என்னும் வகையி்ல் ஆங்கிலம் இருக்கலாம். நிகழ்வாண்டிலேயே செம்மொழிப் பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவது பாராட்டிற்குரியது. இப்பாடங்களைப் பிற மொழிகள் மட்டும் பயிலும் மாணவர்களும் அறிவதற்காகப் பிறமொழிப் பாடங்களிலும் மொழி பெயர்த்துச் சேர்க்க வேண்டும். தமிழ் நாட்டில் படிப்போர் தமிழைப் படிக்கும் வாய்ப்பு ஏற்படாத இழிநிலையில் தமிழை அறியும் சூழலாவது ஏற்படுவது நன்றல்லவா? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
சென்னை, ஜூலை 3: தமிழகத்தின் பள்ளி, கல்லூரி பல்கலைக்கழகப் பாடத் திட்டங்களில், "தமிழ்ச் செம்மொழி' என்ற தலைப்பு இடம்பெறச் செய்யும் பணியை விரைந்து மேற்கொள்ள பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கேட்டுக் கொள்ளப்பட்டார்.உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் மீது மேற்கொள்ள வேண்டிய தொடர் நடவடிக்கைகள் குறித்து முதல்வர் கருணாநிதி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தின் விவரம்: சிறந்த மென்பொருளுக்கு ஒரு லட்சம் பரிசு:தமிழ் மென்பொருள்களுக்குள் சிறந்த மென்பொருள் ஒன்றை தேர்வு செய்து, அதை உருவாக்கியவருக்கு "கணியன் பூங்குன்றனார்' பெயரில் ஒரு லட்சம் ரூபாய் பரிசு தொகையுடன் விருதும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்படுவது ஆண்டுதோறும் தொடரும் என்ற முடிவினையொட்டி, இந்த ஆண்டும் அதற்கான கருத்துரு பெற்று அறிவிப்பதென்று தீர்மானிக்கப்பட்டது.பள்ளி, கல்லூரிகளில் தமிழ்ச் செம்மொழி பாடம்:தமிழகத்தின் பள்ளி, கல்லூரி பல்கலைக்கழகப் பாடத் திட்டங்களில், "தமிழ்ச் செம்மொழி' என்ற தலைப்பு அடுத்த கல்வியாண்டு முதல் இடம்பெறுவதற்கு ஆவன செய்யப்படும் என்ற அறிவிப்பு தொடர்பாக பேசப்பட்டது. அதுபற்றி விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று முடிவெடுக்கப்பட்டது. தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் ஆலோசனைகளையும், இதுகுறித்து கேட்டுப் பெறுவதென்றும் தீர்மானிக்கப்பட்டது.தொல்காப்பியர் உலகத் தமிழ்ச் செம்மொழி சங்கம்:மதுரையில் தொடங்கப்படவுள்ள "தொல்காப்பியர் உலகத் தமிழ்ச் செம்மொழிச் சங்கம்' நிறைவேற்றவுள்ள பொறுப்புகள் குறித்த தீர்மானம் குறித்து விவாதிக்கப்பட்டது. அடுத்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை எப்படி நடத்துவது, எங்கு நடத்துவது என்ற திட்டங்களையும், திராவிடர் மொழி, கலை, பண்பாடு, வாழ்வியல் ஆகியவற்றைத் தொகுத்து நிரந்தரக் கண்காட்சி ஒன்றை அமைத்தல், ஆவணக் காப்பகம் ஒன்றை உருவாக்கி பராமரித்தல், தனித்தனி தீவுகளைப் போல சிதறுண்டு கிடக்கும் தமிழராய்ச்சி உலகத்தை ஒருங்கிணைத்தல் ஆகிய பணிகளை செயல்படுத்த உரிய திட்டத்தினை தயாரித்து, அதற்கான செலவினம் குறித்தும் அறிக்கை அளித்திட தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தரை கேட்டு கொள்ளலாம் என்று தீர்மானிக்கப்பட்டது.கோவையில் ரூ.100 கோடியில் மேம்பாலப் பணி:கோவை காந்திபுரத்தில் அமையவுள்ள செம்மொழிப் பூங்கா பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் களைய சுமார் ரூ.100 கோடி மதிப்பீட்டில் ஒரு மேம்பாலம் அமைக்கப்படும் என்ற முடிவு குறித்து பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது.தமிழ் மொழியின் சிறந்த படைப்புகளை பிற இந்திய மொழிகளிலும், ஐரோப்பிய, ஆசிய மொழிகளிலும் மொழி பெயர்த்து வெளியிடவும், பிற மொழி இலக்கியங்களை தமிழில் மொழி பெயர்த்திடவும், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணினியியல், மருத்துவம் போன்ற அறிவியல் திறனை வளர்ப்பதற்கு தேவையான நூல்களை பிற மொழிகளில் இருந்து தமிழாக்கம் செய்திடவும் தேவையான பணிகள் மேற்கொள்ளப்படும் என்ற தீர்மானம் குறித்து விவாதிக்கப்பட்டது.இதற்கென ஒரு வல்லுநர் குழுவை அமைப்பதென்றும், மொழி பெயர்ப்பு பயிற்சி அளித்திட தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் திட்டம் ஒன்றை வகுத்து செயல்படுத்துவதென்றும் முடிவெடுக்கப்பட்டது.தமிழ் வளர்ச்சிக்கு ரூ.100 கோடியில் சிறப்பு நிதியம்:தமிழ் வளர்ச்சிக்கென்றே தனியாக தமிழக அரசின் சார்பில் ரூ.100 கோடியில் சிறப்பு நிதியம் உருவாக்கப்பட்டு உரிய முறைகளை வகுத்து கொண்டு செயல்படுத்தப்படும் என்ற முடிவு குறித்து விவாதிக்கப்பட்டு, விரைவில் இந்த நிதியத்தை உருவாக்கி அறிவிப்பதென்று தீர்மானிக்கப்பட்டது.அயல்நாட்டு தமிழர்களுக்கென தனித்துறை:இறுதியாக அயல்நாடுகளில் வாழும் இந்தியத் தமிழர்கள் நலன் காக்கவும், அயல்நாடுகளில் தேவைப்படும் தமிழ் வளர்ச்சிப் பணிகளுக்கு உதவிடவும் தனித்துறை ஒன்றை உருவாக்கிட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
தொடர் நடவடிக்கைகளுக்குப் பாராட்டுகள்.அயல்வாழ் தமிழர் துறை வேண்டுமென்பது நீண்ட நாள் வேண்டுகோள். உடனடியாக அத்துறையை உருவாக்க வேண்டும். தமிழ்நலம் நாடும் தமிழர்களுக்குப் பொறுப்புகள் வழங்க வேண்டும். தமிழர்கள் வாழும் நாடுகளுக்குத் தமிழர்களையே தூதரக அதிகாரிகளாக நியமிக்க வேண்டும். தமிழ்ச் செம்மொழி குறித்த பாடங்கள் ஆங்கிலம் முதலான பிற மொழிப் பாடங்களிலும் இடம் பெற வேண்டும. தொல்காப்பியர் உலகத் தமிழ்ச் செம்மொழிச் சங்கத்திற்குத் தமிழாய்ந்த தமிழர்களையே அனைத்துப் பொறுப்புகளிலும் அமர்த்தல் வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்