cartoons லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
cartoons லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 8 மே, 2013

2300 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் கருத்தோவியங்கள்

கார்ட்டூன் ஓவியங்கள்!

கார்ட்டூன் போன்ற குகை ஓவியத்தை, 2,300 ஆண்டுகளுக்கு முன், தமிழர்கள் வரைந்ததை கண்டுபிடித்த, நாராயணமூர்த்தி: நான், தொல்லியல் ஆய்வாளராக இருக்கிறேன். தர்மபுரியின் அமராவதி அணைக்கு அருகில், குழுமம் என, அகநானூற்றில் குறிப்பிடப்பட்ட பழமையான ஊர், தற்போது கொழுமம் என, அழைக்கப்படுகிறது. அங்கு ஆடு மேய்க்கும் ஒரு பாட்டி, "இந்த மேற்கு தொடர்ச்சி மலையில் மிக பழமையான, "அளை' இருக்குது' என, அங்கு செல்லும் வழியை காட்டினார். குகையை, அளை, பொடங்கு என, வட்டார மொழியில் அழைப்பர். செல்லும் வழியில் மலைப்பாம்பு, யானை என, காட்டு விலங்குகளால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரித்தார். எனினும், நண்பர்களுடன் துணிந்து சென்றேன். பாழடைந்த அக்குகையை கண்டுபிடித்து நுழைய, மிக சிரமப்பட்டோம். குகையின் உள்தாழ்வாரத்தில், மலைத் தேனீக்கள் கூடுகட்டி இருந்தன. மிக பழமையான ஓவியங்களை பார்த்த சந்தோஷத்தில், ஆராய்ச்சியை துவக்கினோம். குகையின் தாழ்வாரத்தில், 10க்கும் மேற்பட்ட ஓவியங்கள், தனித் தனி தொகுப்புகளாக சுண்ணாம்பு, மூலிகை, மரப்பிசினால் வரையப்பட்டிருந்தன. இது, சங்ககால தமிழர்கள் வீரத்தையும், காதலையும், இரு கண்களாக நினைத்து வாழ்ந்த அற்புதத்தை பிரதிபலித்தன. இந்த ஓவியத்தை ஆராய்ந்ததில், 2,300 ஆண்டுகளுக்கு முன்பே வரையப்பட்டிருக்க வேண்டும் என, கண்டுபிடித்தோம். குகை ஓவியங்கள் கரும்பச்சை, காவி மற்றும் வெள்ளை நிறங்களில் காணப்படும். இதை வைத்தே, காலக்கட்டத்தை தீர்மானிக்கலாம். இக்குகையின் வெள்ளை ஓவியங்கள், தூரிகையால் தீட்டப்பட்டிருந்தன. ஓவியத்தில், அகழி வெட்டி, ஒரு யானையை பிடித்து, பழக்கப்படுத்திய பின், அரசனுக்கு பரிசளித்து, அதில் அவர் மகிழ்ச்சியாக ஊர்வலம் வருவது போன்ற காட்சிகள், கார்ட்டூன் போல, தொடர்ச்சியாக வரையப்பட்டிருந்தன. ஒரு தொல்லியல் ஆய்வாளன் என்ற முறையில், தொன்மையை நேசிக்கும் எனக்கு, 2,300 ஆண்டுகளுக்கு முந்திய நம் முன்னோரின் ஓவியங்கள் பெருமிதத்தை தந்தன.

திங்கள், 5 ஜூலை, 2010

சித்திரங்களின் சிந்தனைக் களஞ்சியம்

சித்திரங்களின் சிந்தனைக் களஞ்சியம்



சிரிக்க வைப்பது சிந்தனையைத் தூண்ட வேண்டும். அழுதவன் சிரிக்க ஆரம்பித்தால், சிரித்தபடி அவனை அழ வைத்த ஆணவக்காரர்கள் அழும் காலம் விரைவில் வந்துவிடும்.
திரு. மதி அவர்கள் தினமணி இதழில் வரைந்த கார்ட்டூன்களின் தொகுப்பு வெளிவந்துள்ளது. தற்போதைய பத்திரிகை உலகில் மதி அவர்களின் கார்ட்டூன்கள் தனிப்பட்ட சிறப்புடன் பலராலும் நாள்தோறும் எதிர்பார்க்கக் கூடியனவாக இருக்கின்றன.கார்ட்டூன் என்றால் அரசியல் கேலிச் சித்திரம் என்று ஆங்கிலம்- தமிழ் அகராதியில் பொருள் தரப்படுகிறது. நாட்டு மக்களின் அடிப்படை மனித உரிமைகளை, ஜனநாயக உணர்வைப் பாதுகாப்பதில் பத்திரிகை உலகம் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. மக்களை அல்லற்படுத்தும் குற்றங்களை, குறைபாடுகளை மக்களுக்குத் தெரியப்படுத்தவும், அவற்றை நீக்குவதற்கான வழிமுறைகளை வலியுறுத்தவும் பத்திரிகைகள் பெரிதும் உதவுகின்றன. கொடுமைகளை நீக்கக் கடுமையான கட்டுரைகளும், ஆத்திரமிக்க அறிவுரைகளும் தரும் பலன்களை விட, கனிவாக, மென்மையாக, மக்களுக்கே புரியாத வகையில் நடைபெறும் அவலங்களைப் புலப்படுத்த, சிரிக்கும் வகையில் எளிதில் வெளிப்படுத்த கேலிச் சித்திரங்கள் மிகவும் பயன்படுகின்றன. இங்கிலாந்து நாட்டில் பிரபல கேலிச் சித்திரக்காரராக விளங்கியவர் "லோ' என்பவர். அவரின் முழுப்பெயர் டேவிட் அலெக்சாண்டர் செசில் லோ (1891-1963). நியுசிலாந்து நாட்டில் பிறந்தவர், சிறுவயதிலேயே சித்திரங்கள் வரைவதில் பழகி, பிறகு இங்கிலாந்து வந்து கார்ட்டூன்கள் வரைவதில் முதலிடம் பெற்றார். 1930 முதல் ஜெர்மனியில் ஹிட்லரும் இத்தாலியில் முசோலினியும் நடத்திய பாசிச ஆட்சி உலக ஜனநாயக நாடுகளை அதிர வைத்தபோது, லோ வரைந்த கார்ட்டூன்கள் அந்த எதேச்சாதிகாரிகளைக் கேலி செய்து அகற்றப்பட வேண்டிய கேலிக்குரிய கோமாளிகளாக ஆக்கின. ஜனநாயகத்தைக் காப்பாற்ற சர்ச்சில் ஆற்றிய உணர்ச்சிமிக்க முழக்கங்களைவிட, நேசப் படைகள் எழுச்சியுடன் போர்க்களங்களில் நடத்திய வீரதீரச் செயல்களை விட லோ வரைந்த சித்திரங்கள் நாள்தோறும், கனிவாக, வெற்றியின் நம்பிக்கை நட்சத்திரங்களாக, எதேச்சாதிகாரத்தை வீழ்த்துவதில் பொதுமக்களை உற்சாகப்படுத்தின. தான் வெற்றி பெற்று இங்கிலாந்து நாட்டை அடிமைப்படுத்தியதும், தனக்கு எதிராக இருந்தவர்களைத் தீர்த்துக் கட்ட ஹிட்லர் தயாரித்து வைத்திருந்த கருப்புப் பட்டியலில் லோ பெயர் முக்கியமான இடத்தைப் பெற்றிருந்ததாம். கேலிச் சித்திரம் வெற்றியடைவதற்கு மூன்று முக்கிய பண்புகள் தேவைப்படுகின்றன. தாம் படும் அவதிகளுக்கான காரணங்கள் மக்களுக்கு எளிதில் புரிவதில்லை. முதலில் கேலிச் சித்திரக்காரருக்குத் தாம் வரையும் சித்திரம் வெளியிடும் விவரத்துக்கு அடிப்படையான உண்மை இருக்கிறது என்ற தெளிவு இருக்க வேண்டும். இல்லாத ஒன்றை வைத்து கேலி செய்வதில் பலன் இல்லை. இரண்டாவதாக, அந்தச் சித்திரம் மக்களுக்கு ஒரு நம்பிக்கையைத் தரும் என்பதில் பத்திரிகை ஆசிரியருக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். மூன்றாவதாக, கேலிச்சித்திரத்தை மக்கள் பார்த்துச் சிரிக்கிறார்கள் என்றால், கேலி செய்யும் அளவுக்கு அந்த அநீதியும், ஆபத்தும் தாழ்த்தப்பட்டு, அதைத் திரண்ட மக்கள் சக்தியால் நீக்க முடியும் என்ற ஜனநாயக உணர்வு மக்களிடையே வலுவடைய வேண்டும்.இந்த மூன்று பண்புகளும் சித்திரக்காரர் மதியிடமும், தினமணி ஆசிரியரிடமும், நாள்தோறும் சித்திரங்களைப் பார்க்கும் வாசகர்களிடமும் இருக்கின்றன என்று நான் நம்புகிறேன். சிரிக்க வைப்பது சிந்தனையைத் தூண்ட வேண்டும். அழுதவன் சிரிக்க ஆரம்பித்தால், சிரித்தபடி அவனை அழ வைத்த ஆணவக்காரர்கள் அழும் காலம் விரைவில் வந்துவிடும். மதியின் கேலிச் சித்திரங்களைத் தொகுத்துள்ள நூல் சிரிப்பின் மூலம் சிந்தனைகளை வளர்க்கும் கலைக் களஞ்சியம். அதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.
கருத்துக்கள்


ஒரு பெரிய புத்தகம் உணர்த்த முடியாத கருத்தை ஒரு கேலிப்படம் அல்லது கருத்துப்படம் கருத்தோவியம் நன்கு எளிதில் உணரத்தி அந்நூல் செய்ய முடியாதவற்றைச் செய்துவிடுகிறது. எனவே செழியனார் சொல்வது சரிதான். ஆனால், தினமணியில் மதியின் படங்கள் இணையப் பக்கங்களில் உடனுக்குடன் பாரக்க முடியவில்லை.சான்றாக இன்றைய கருத்தோவியத்தைச் சொடுக்கினால், நேற்றைய கருத்தோவியம்தான் வருகிறது. இன்றைக்கு சூலை 5 ஆம் நாள் என்றாலும் 3 கருத்தோவியங்கள்மட்டுமே காண முடிகிறது. ஒவ்வொரு திங்களிலும் நடைபெறும் அவலமதான் இது. சூன் திங்களில் 19, ஏப்பிரலில் 8, மேத்திங்களில் 19 எனக் குறைவாகத்தான் கருத்தோவியங்களைக கண்டு களிக்க முடிகிறது. மதியின் கருத்தோவிய வெளியீட்டு விழாவில் பங்கேற்றுப் பாராட்டும் ஆசிரியர் அன்றாடம் வைகறையிலேயே கருத்தோவியங்களைக் காண வசதி செய்து தர வேண்டும். கருத்தோவியங்களின் 3 பண்புகளைச் சரியாகச் சுட்டிக் காட்டிய செழியனாருக்குப் பாராட்டுகள். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/5/2010 3:38:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

சனி, 31 அக்டோபர், 2009

சிரிக்க வைத்து சிந்திக்க வைப்பதே கார்ட்டூன்கள்:
கார்ட்டூனிஸ்ட் மதி



திண்டுக்கல், அக். 30: சில கோடுகளைக் கொண்டு அதிக வெளிப்பாடுகளை விளக்குவதும், சிரிக்க வைத்து சிந்திக்க வைப்பதுமே கார்ட்டூன்கள் என "தினமணி' நாளிதழின் கார்ட்டூனிஸ்ட் எஸ்.மதி தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி நாடார்கள் சுந்தர விசாலாட்சி வித்யாசாலை பள்ளிகளின் மேலாண்மைக் குழு சார்பில் நா.சு.வி.வி. தொடக்கப் பள்ளியின் நூற்றாண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ் விழாவையொட்டி பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த கார்ட்டூன் கண்காட்சியைத் திறந்துவைத்து எஸ்.மதி பேசியதாவது: உலகில் உள்ள உயிரினங்களில் சிரிக்கும் வாய்ப்பை மனிதனுக்கு மட்டுமே இறைவன் வழங்கியுள்ளார். நகைச்சுவை என்பது மிக முக்கியமான விஷயமாகும். இதில் ஒவ்வொருவரிடமும் உள்ள அளவில் வேண்டுமானால் வித்தியாசம் இருக்கலாம். பிரச்னையே வாழ்க்கையாக அமைந்துவிட்ட இன்றைய காலகட்டத்தில் முடிந்த அளவு நகைச்சுவையை வளர்க்க வேண்டும். ஒவ்வொருவரிடமும் உள்ள நகைச்சுவை உணர்வைத் தட்டி எழுப்ப வேண்டும். நகைச்சுவை உணர்வுக்கு அற்புதமான விஷயம் கார்ட்டூன். குறைவான கோடுகளைக் கொண்டு வரையப்படும் கார்ட்டூன் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கக் கூடியது. அதுமட்டுமின்றி, சிரிக்க வைத்துச் சிந்திக்க வைக்கக் கூடியது. கார்ட்டூன் வரைவதற்கு நிறைய விஷயங்களைப் படிக்க வேண்டியுள்ளது. எனவே, மாணவர்கள் நிறையப் புத்தகங்களைப் படிக்க வேண்டும். காமிக்ஸ் உள்ளிட்ட எந்த புத்தகத்தையும் படிக்கலாம். புத்தகம் படிக்கும் பழக்கம் ஏற்பட்டால், வாழ்க்கையில் புத்தகங்களே உற்ற நண்பர்கள் என்பதை உணர முடியும். புத்தகம் படிப்பதால் உங்களுக்கு நன்மை. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் அது நாட்டுக்கே நன்மை. கற்கும் காலத்தில் மாணவர்களுக்கு உள்ள ஒரே பிரச்னை படிப்பு மட்டும்தான். எனவே, உங்களது செயலில் நீங்கள் உண்மையாக இருக்க வேண்டும். தடைகளைப் பற்றிக் கவலை கொள்ளத் தேவையில்லை. தடைகளும் பிரச்னைகளும் உள்ள இடத்தில்தான் வளர்ச்சிக்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. தமிழ், ஆங்கிலம் இரண்டும் இரு கண்களைப் போன்றவை. எனவே, ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதும் திறனையும் மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். படிப்பில் வெற்றி பெறுவதைவிட, வாழ்க்கையில் வெற்றி பெறுவதே மிக முக்கியம். டிவி தொடர்களுக்கு முக்கியத்துவம் கூடாது: மாணவர்களின் மீது உள்ள நம்பிக்கைகூட பெரியவர்கள் மீதும் பெற்றோர்கள் மீது இல்லாமல் போய்விட்டது. காரணம் பெரியோரும், பெற்றோர்களும் டி.வி.க்கு அடிமையாகி விட்டனர். டி.வி. தொடர்களில் பெண்களைச் சதிகாரர்களாகவும், கொலைகாரர்களாகவும் சித்திரித்துக் காட்டுகின்றனர். பெண்களை இழிவுபடுத்திக் காண்பிக்கும் தொடர் நாடகங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பார்ப்பதை பெண்கள் நிறுத்த வேண்டும். குழந்தைகள் டி.வி. பார்ப்பதை நிறுத்த வேண்டும் என்றால், பெற்றோர்கள் முதலில் நிறுத்த வேண்டும். குழந்தைகளின் திறமைகளை அடையாளம் கண்டு, அவர்களின் முன்னேற்றத்துக்கு உதவ வேண்டும். தங்களுடைய எண்ணங்களை பிள்ளைகளின் மேல் திணிக்கக் கூடாது. மருத்துவம், பொறியியல் மட்டுமே சாதிக்கும் துறைகள் அல்ல. சாதிப்பதற்கு எத்தனையோ துறைகள் உள்ளன. மிருகங்களுக்குத் தான் ஈன்ற குட்டிகளில் ஆண், பெண் பேதம் தெரிவதில்லை. இதனால் தன் பெண் குட்டிகளை கொல்வதில்லை. ஆறறிவு, பகுத்தறிவு எனப் பேசும் மனிதர்கள் பெண் கருக் கொலை செய்வது இங்கேதான் உள்ளது. பெண் தெய்வங்கள் என்பது இந்து மதத்தில்தான் அதிகம் உள்ளன. பெண் சிசுக் கொலை தடுக்கப்பட வேண்டும். பெண்கள் சாதிக்காத துறைகளே இல்லை என்றார்.
கருத்துக்கள்

பல பக்கங்களில் விளக்க முடியாவதவற்றைஒரு சில கோடுகள் தீட்டி உணரத்துவன கருத்துப் படங்களே! இதில் தலைசிறந்து விளங்கும் மதியின் கருத்துகள் சரியானவை. மக்களைப் பண்படுத்தும் கருத்தாளர் மதியும் கருத்துப்பட ஓவியர்களும் வாழ்க!அவர்களின் தொண்டு தொடர்க!

வாழ்த்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/31/2009 2:45:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *