இவ்வாண்டு(தி.ஆ.2056/பொ.ஆ.2025) தமிழர் திருநாளாம் பொங்கற் புதுநாள் சனவரி 14 செவ்வாயன்று வருகிறது. தொடர்ந்து புதனன்று திருவள்ளுவர்  திருநாள்/மாட்டுப் பொங்கல்(சன.15), வியாழனன்று உழவர் திருநாள் (சன.16) என முந்நாளும் அரசு விடுமுறையாகும்.

எனவே வெள்ளியன்று விடுமுறை விட்டால் தொடர்ந்து வரும் சனி, ஞாயிற்றிலும் குடும்பத்தினருடன் இருக்கும் வகையில் நல் வாய்ப்பாக இருக்கும் என ஆசிரியர்களும் அரசூழியர்களும் கருதினர். இதற்கிணங்க எழுந்த முறையீட்டு அடிப்படையில் அரசு வெள்ளியன்றும் அஃதாவது 17.01.25 அன்றும் விடுமுறை அளித்துள்ளது வரவேற்கத் தக்கது.

இதற்கு மாற்றாக இதனை ஈடுசெய்யும் வகையில், அரசு விடுமுறை நாளை வேலைநாளாக அறிவித்த நாள் 25.01.25 சனிக்கிழமை. இந்த நாள் தமிழர்களின் ஊனோடும் உயிரோடும் கலந்த மொழிப்போர் ஈகியர் நாள். மொழிப்போராளிகள் ஈகத்தால் ஆட்சியில் அமர்ந்தனவே திராவிடக் கட்சிகள். எந்த நாளை மறந்தாலும் இந்த நாளை வீர வணக்க நாளாகக் கொண்டாடத் திராவிடக் கட்சிகள் மறப்பதில்லை. இதனை ஆண்டுதோறும் கடைப்பிடித்து இந்நாளை உயிரோட்டமுள்ள நாளாக இக்கட்சிகள் வைத்துள்ளன. மொழிப்போராளிகள் குறித்துப் பாடத்திட்டத்தில் இன்னும் அரசு சேர்க்க வில்லை. எனினும் இயல்பாகவே விடுமுறை விடப்பட வேண்டிய நாளான சனவரி 25 அன்று விடுமுறை நாளாக அமைந்தும் அதனை வேலைநாளாக அறிவிக்கும் பெருந்தவற்றை அரசு செய்யலாமா? எனவே, அரசு உடனடியாக மறு ஆணை பிறப்பித்து ஈடுசெய் வேலைநாளாக வேறுநாளை/ பிப்,முதல் நாளை அறிவிக்க வேண்டும்.

அரசு விடுமுறை நாளாக வெள்ளிக்கிழமை அறிவித்ததற்கு மாற்றாகப் போகி நாளை விடுமுறை நாளாக அறிவித்திருக்க வேண்டும். “ஆண்டின் கடைசிநாளான மார்கழித் திங்கள் இறுதிநாள் போக்கியாகும். இதுவே போகி என இப்போது அழைக்கப்படுகிறது. மறுநாள் புத்தாண்டின் தொடக்கமாகத் தைப்பொங்கல் வருகிறது.  போகி என்பதும் தமிழர்க்குரிய சிறப்பான பண்டிகை நாளாகும். சுற்றுப்புறத் தூய்மைக்கும் மனைத் தூய்மைக்கும் நல வாழ்விற்கும் அடிப்படையான பண்டிகையாகும்ங போகிநாளை நிலைப்பொங்கல் என்றும் கூறுவர். வீடடின் தலை வாயிலில் உள்ள நிலைக்கு மஞ்சள் பூசி, அதில் குங்குமப் பொட்டிட்டு, இல்லுறை தெய்வத்தை வணங்குவர். நிலையில் கரும்பைச் சாத்தி நிற்கச் செய்து, வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு வைத்துத் தேங்காய் உடைத்துக் கற்பூரம் காட்டி தெய்வ வணத்தை மேற்கொள்வர். வீட்டின் பிற நிலைகளிலும் மஞ்கள் பூசிக் குங்குமப் பொட்டிடும் வழக்கமும் பின்னர் ஏற்பட்டது.

போகி நாள்  இலக்கியங்களிலும் குறிப்பிடப்படுகிறது.  “ஐயவி அப்பிய நெய் அணி நெடு நிலை” என நெடுநல்வாடை(அடி 86) கூறுகிறது. வெண்சிறுகடுகு அப்பிவைத்த நெய்யணிந்த நெடிய நிலை எனப் பொருள். நெடுநிலையில் தெய்வம் தங்கியிருப்பதாக நம்புவதால் செய்யப்படும் வழிபாடு. இதையேதான் மதுரைக்காஞ்சியும் (அடி 353) ‘அணங்குடை நெடுநிலை’ என்றும்  ‘அணங்குடை நல்லில்’ (மதுரைக்காஞ்சி, 578) என்றும் கூறுகிறது.” (போகிக்கு விடுமுறை விடுக!, அகரமுதல நாள் 10.01.23)

தமிழர்க்குச் சிறப்பு மிக்க நாளான போகிநாளுக்கு அரசு விடுமுறை இருந்தது. ஆனால் மக்கள்திலகம் ம.கோ.இராமச்சந்திரன் முதல்வராக இருந்த பொழுது சிலர் பொங்கலை முன்னிட்டு 4 நாள் விடுமுறை தேவையில்லை எனக் கூறித் தவறாக வழிகாட்டி, போகிக்குரிய விடுமுறை நாளை இல்லாமல் ஆக்கினர்.  இதனால் மற்றுமொரு தீங்கும் நேர்கிறது. போகியன்று விடுமுறை யில்லை என்பதால் அன்றுதான் மக்கள் ஊருக்குப் புறப்பட்டுச் செல்ல நேரிடுகிறது. இதனால், பொங்கல் அன்றுதான் வீட்டுக்குச் செல்ல நேருகிறது. கதிரவன் தோன்றும் நேரம் பொங்கல் வைத்துப் படைப்பவர்களுக்கு  அநத நேரத்திற்குள் வீடுகளுக்குச் செல்ல முடிவதில்லை.  சிலர் நண்பகலுக்குத்தான் செல்ல முடிகிறது.

.  பொங்கலன்று சிறப்பாக அந்நாளைக் கொண்டாடுவதற்காகவும் முதல்நாள் வீட்டைத் தூய்மைப்படுத்து வதற்காகவும்  போகிப் பண்டிகையையும் கொண்டாடு வதற்காகவும் போகியன்று விடுமுறை தேவை.

 போக்கி நாளுக்கு விடுமுறை அளிக்குமாறு கடந்த ஆட்சியில் முறையிட்டோம். ஆனால், தங்கள் தலைவரால் அறிவிக்கப்பட்ட  விடுமுறை நீக்கத்தை நீக்குவதற்கு மனம் வரவில்லை.  தமிழர் நலனில் கருத்து செலுத்தும் இவ்வாட்சி அமைந்ததும் மீண்டும் முறையிட்டோம். ஆனால் அரசு பாரா முகத்துடனும் கேளாச்செவியுடனும் நடந்து கொண்டதால் பயனில்லை.

ஆனால் இந்த நேரம் நல்வாய்ப்பாக அமைந்துள்ளது. ஊழியர்களின் முறையீட்டை ஏற்று விடுமுறைகளுக்கு இடையில் அமைந்த வேலைநாளை விடுமுறை நாளாக அறிவித்துள்ள அரசு போகிக்கும் விடுமுறை விடவேண்டும். வரையறை விடுமுறையைப் (ஆர்,எச்சு,) பலர் பயன்படுத்துவதால் அரசு அலுவலகங்கள் வெறுமையாகத்தான் காட்சியளிக்கும். இதற்கு விடுமுறையே விடலாம். பணிச்சுமையால் வரையறை விடுமுறையைப் பயன்படுத்த முடியாதவர்களுக்கும் வ.வி. இல்லாதவர்களுக்கும் இது பயனுள்ளதாக அமையும்.

 ஆந்திராவிலும்  தெலுங்கானாவிலும் பொங்கலுடன் போக்கிக்கும் அரசு விடுமுறை நடைமுறையில் உள்ளது. கருநாடகாவில் மகர சங்கராந்தி என்ற பெயரில் பொங்கலன்று விடுமுறை இருந்தாலும் போகிக்கு விடுமுறை இல்லை. நம் முதல்வருக்கு நெருக்கமான கேரளாவில் பொங்கலுக்கே விடுமுறை இல்லை. முதல்வர் தலையிட்டு இருநாளும் கேரளாவில் விடுமுறை அளிக்கவும் போகியன்று கருநாடகாவில் விடுமுறை அளிக்கவும் ஆவன செய்ய வேண்டும். முன்னெடுத்துக்காட்டாகத் தமிழ்நாட்டில் போகிக்கு விடுமுறை அளிக்க வேண்டும். விடுமுறை அளித்து விட்டு ஈடுசெய் விடுமுறை நாளை அறிவிக்கக் கூடாது. அரசு விடுமுறைப் பட்டியலில் சேர்க்க வேண்டும்.

தமிழர் நலனில் கருத்து செலுத்தும் முதல்வர் மு.க.தாலின் இதை ஏற்பார் என எதிர்பார்க்கிறோம். இதன் மூலம், தமிழ்நாட்டிலுள்ள தனியார் நிறுவனங்களும் தனியார் அமைப்புகளும் வங்கி முதலிய பிற நிறுவனங்களும் போகிக்கு விடுமுறைவிட ஆவன செய்ய வேண்டும். தமிழர் திருநாளைத் திராவிடர் திருநாள் எனப் பரப்பி வருவதால் திராவிட மாநிலங்களில் பொங்கலுக்கும் போகிக்கும் விடுமுறை விடச் செய்வதில் தவறு இல்லை அல்லவா?

இதே நேரம் பொங்கல் விடுமுறைகள் குறித்து மற்றொரு கருத்தையும் தெரிவிக்க விரும்புகிறோம். 2017இல் ஒன்றிய அரசு பொங்கல் விடுமுறையை நீக்கியது. இதற்கு அனைத்துக் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது “பொங்கல் விடுமுறைக்குப் பொங்கியோர் போகி விடுமுறைக்கும் பொங்கட்டும்!” (அகரமுதல, 08.01.2017) எனக் குறிப்பிட்டிருந்தோம். அதில் பின்வருமாறு பொங்கல் விடுமுறை குறித்துக் குறிப்பிட்டிருந்தோம்.

தை ஒன்றம் நாள்தான் திருவள்ளுவர் ஆண்டுத் தொடக்கம் எனக் கணக்கிட்டாலும் பொங்கலின் சிறப்பு குறையக்கூடாது எனத் தை இரண்டாம் நாளைத் திருவள்ளுவர் ஆண்டுத் தொடக்கமாகக் கொண்டாடுகிறோம்.  இதனை மாற்றம் செய்து, பின்வருமாறு பொங்கல் விழாவிற்கென 6 நாள் விடுமுறைகள் அளிக்க  வேண்டும்.

மார்கழி 29 (இறுதி நாள்) – போகி

தை 1 – பொங்கல்

தை 2 – மாட்டுப் பொங்கல்

தை 3 – காணும் பொங்கல்

தை 4 – திருவள்ளுவர் நாள்

தை 6 – தமிழ்நாடு மீள்பெயர் சூட்டல் நாள் / தமிழ் எழுச்சி நாள்

 தேவையற்ற மூடநம்பிக்கையிலான விடுமுறையை நீக்கியேனும் பொங்கல் கொண்டாட்டங்களுக்காக அரசு 6 நாள் விடுமுறை  அளிக்கட்டும்! நீதிமன்றங்களும் கிறித்துப் பிறப்பு விடுமுறையாக நெடுநாள் அளிப்பதை நிறுத்திப் பொங்கல் விடுமுறைகளை அளிக்க அரசு அறிவுறுத்தட்டும்!”

இதனையும் அரசு கருதிப்பார்க்க அன்புடன் வேண்டுகிறோம்.

விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது

சொல்லுதல் வல்லார்ப் பெறின்.   (திருவள்ளுவர், திருக்குறள், ௬௱௪௰௮ – 648)

இதழுரை அகரமுதல

21.12.2055/05.01.2025