(தோழர் தியாகு எழுதுகிறார் : கைச்சரக்கா மார்க்குசியம்? – தொடர்ச்சி)
கைச்சரக்கா மார்க்குசியம்? – தொடர்ச்சி
குமுக மாற்றங்கள் தவிர்க்க இயலாதவை, குமுக வளர்ச்சி நெறிகளின் படி முதலியம் அழிவதும் குமுகியம் (SOCIALISM) மலர்வதும் தவிர்க்கவியாலாதவை என்ற மார்க்குசியத்தின் உறுதியான நிலைப்பாடு அதனை ஓர் ஊழ்வினைக் கோட்பாடு போல் காட்டும் தீவாய்ப்பு உள்ளது. ஆனால் இஃது உண்மையில்லை. மாந்தர் விரும்பிய படியெல்லாம் குமுக மாற்றமோ அதற்கான புரட்சியோ நடந்து விட மாட்டா. அதே போது மாந்தர் விரும்பாமலும், மாந்த முயற்சி இல்லாமலும் எம்மாற்றமும் வராது, எப்புரட்சியும் நடவாது. மாற்றமும் புரட்சியும் தவிர்க்கவியலாதவை என்ற கருத்தின் பொருள் மாந்த முயற்சி இல்லாமலே அவை நடக்கும் என்பதன்று. புறஞ்சார்ந்த குமுக நெறிகளைத் தலைவிதியாக மார்க்குசியம் கருதவில்லை. குமுக நெறிகளைப் புரிந்து உள்வாங்கிக் கொண்டு குமுக அமைப்பையும் அதன் வளர்ச்சி நிலையையும் முரண்பாடுகளையும் கணித்துப் புரட்சிக்குரிய கோட்பாடும் நடைமுறையும் வழிமுறையும் அமைப்பு முறையும் இல்லாமல் குமுகியப் புரட்சி நடைபெறாது. விடுதலையும் கிட்டாது. “தானாய் எதுவும் மாறும் என்பது பழைய பொய்யடா!”
மார்க்குசியம் உயர்ந்த கனவுகளின் தோரணம் அன்று. நாம் வாழும் குமுகம் எத்தகையது என்பதை உள்ளது உள்ளபடி பகுத்தாய்ந்து அதிலிருந்து சுரண்டலற்ற புதிய பொதுமைக் குமுகத்துக்கும் அதன் முதற்கட்டமாகிய குமுகியத்துக்கும் முன்னேறும் வழிகளை வெளிபடுத்துவதே மார்க்சியத்தின் கடமை ஆயிற்று. குமுகியத்துக்கு வழிநடத்தும் குமுக ஆற்றல் எது? இழப்பதற்கு ஏதுமற்ற பாட்டாளிகளே என்பதை மார்க்சும் எங்கெல்சும் இனங்காட்டினார்கள். மார்க்குசிய ஆய்வுமுறையின் மையமாக இருப்பது பாட்டாளி வகுப்பின் வரலாற்று நலனும் கடனும் ஆகும்.
இலெனின் சொன்னார்:
“மார்க்குசும் எங்கெல்சும் தொழிலாளர் வகுப்புக்கு ஆற்றிய சேவை என்ன? சுருங்கச் சொல்லின் தொழிலாளர் வகுப்பு தன்னை அறியவும் தன்னை உணரவும் கற்றுத் தந்தார்கள். கனவுகளின் இடத்தில் அறிவியலை அமர்த்தினார்கள்.”
முதலிய (முதலாளித்துவ) அமைப்பின் கமுக்கத்தை விண்டுரைக்க மார்க்குசு பயன்படுத்திய வழிமுறை மார்க்குசிய ஆய்வுமுறைக்குச் சிறந்த எடுத்துக் காட்டாகும். பொதுமைக் கட்சியின் கொள்கையறிக்கை (COMMUNIST MANIFESTO) இப்படித் தொடங்குகிறது: “ஏடறிந்த வரலாறு அனைத்தும் வகுப்புப் போராட்டங்களின் வரலாறே ஆகும்”.
குமுக வகுப்புகளிடையிலான முரண்பாடுதான் வரலாறு நெடுகிலும் வளர்ச்சியின் உந்தல், இந்த முரண்பாடுகள் முற்றித்தான் புரட்சிகள் வெடிக்கின்றன, குமுக மாற்றங்கள் நடக்கின்றன, இந்தக் குமுக மாற்றங்களின் வேர்க் காரணங்கள் பொருளாக்கத்திலும் பங்கீட்டிலுமான மாற்றங்களே என்பது மார்க்குசியக் கோட்பாட்டுக்கும் நடைமுறைக்கும் ஆய்வுமுறைக்கும் அடிப்படை ஆகும்.
வகுப்புப் போராட்டம் என்பதைக் குறுக்கி தேசியப் போராட்டங்களுக்கு உரிய அழுத்தம் தராதாரும் உளர். ஆனால் தொழிலாளர் வகுப்பு தன்னைத் தேசமாக ஒழுங்கமைத்துக் கொள்ள வேண்டும் என்று பொதுமை அறிக்கை கூறுவதன் ஆழ்பொருளை இவர்கள் விளங்கிக் கொள்வதில்லை. அதனால்தான் அறிக்கையின் முத்தாய்ப்பையே திரித்து “உலகத் தொழிலாளர்களே, ஒன்று சேருங்கள்” என்று முடிக்கின்றார்கள். “அனைத்து நாடுகளின் தொழிலாளர்களே, ஒன்றுசேருங்கள்!” என்பதுதான் உண்மையான இறுதி முழக்கம். இரண்டுக்குமான வேறுபாடு எளிதில் விளங்கிக் கொள்ளத்தக்கதே.
பொதுமை அறிக்கை என்ற அந்தச் சின்னஞ்சிறிய நூல் முழுவதுமே மார்க்குசிய ஆய்வுமுறைக்குச் சுடர்மிகு செயல்விளக்கமாகத் திகழ்கிறது.
மார்க்குசிய ஆய்வுமுறை நேரான வகுப்புப் போராட்டங்களுக்கு மட்டுமல்லாமல், அனைத்து வகையான ஒடுக்குமுறைக்கு எதிரான அனைத்துப் போராட்டங்களுக்கும் உரிய அறிந்தேற்பு வழங்குகிறது. தென் ஆப்பிரிக்காவில் வெள்ளை நிறவெறி ஆதிக்கத்தை வந்தேறிகளின் குடியேற்ற ஆதிக்கம் என்றும், இனஒதுக்கலுக்கு எதிரான போராட்டத்தைத் தேசிய விடுதலைப் போராட்டம் என்றும் வரையறுக்க மார்க்குசிய ஆய்வுமுறை உதவியது. இன்றைய இசுரேலின் சீயோனிய அரசு வந்தேறிகளின் குடியேற்ற ஆதிக்கத்தைக் குறிக்கும் இன ஒதுக்கல் ஆட்சி என்றும், பாலத்தீன மக்களின் போராட்டத்தைத் தேசியத் தன்தீர்வுக்கும் தேசிய விடுதலைக்குமான போராட்டம் என்றும் வரையறுக்க மார்க்குசிய ஆய்வுமுறை உதவுகிறது. இசுரேல்-பாலத்தீனப் பூசலுக்கு மதங்களிடையிலான பூசல் ஒரு வரலாற்றுக் காரணமாகத் தோன்றினாலும், மெய்யான வேர்க் காரணம் வல்லரசியங்களின் விரிவாளுகை நலனே என்பதைப் புரிந்து கொள்ளவும், இந்தப் பூசலுக்கு நிலையான அரசியல் தீர்வு காணவும் மார்க்சிய ஆய்வுமுறை வழிகாட்டுகிறது.
இந்துத்துவத்தை இந்து மதம் என்று நம்பப்படும் மத நம்பிக்கைகளிலிருந்து வேறுபடுத்திக் காணவும், இந்துத்துவ அரசியலின் பார்ப்பனிய உள்ளடக்கத்தைக் கண்டுணரவும், வகுப்பு வகையிலும் சாதி வகையிலும் அதன் பார்ப்பன-பனியா-பெருமுதலிய ஆளும் வகுப்புச் சார்பைத் தோலுரித்துக் காட்டவும் மார்க்சிய ஆய்வுமுறை துணைசெய்கிறது.
முதலிய வளர்ச்சிக்கும் இயற்கைச் சூழல் அழிவுக்குமான நெருங்கிய தொடர்பை மார்க்சிய ஆய்வுமுறை துலக்கமாக வெளிப்படுத்துகிறது. முதலியம் நிலத்தைக் கொள்ளையிடுவதாகவே மார்க்சு சொல்கிறார்:
“…முதலிய வேளாண்மையில் முன்னேற்றம் என்பதெல்லாம் தொழிலாளரை மட்டுமல்லாமல் மண்ணையும் கொள்ளையிடும் கலையிலான முன்னேற்றம்தான். குறிப்பிட்ட காலத்திற்கு மண்வளத்தைப் பெருக்குவதிலான முன்னேற்றம் என்பதெல்லாம் அந்த வளத்தின் நீடித்து நிலைக்கும் தோற்றுவாய்களைச் சிதைப்பது நோக்கிய முன்னேற்றம்தான்… முதலியப் பொருளாக்கம் செல்வமனைத்தின் மூலத் தோற்றுவாய்களான மண்ணையும் தொழிலாளரையும் உறிஞ்சித்தான் தொழில்நுட்பம் வளர்க்கிறது.”
மாந்தருக்கும் சுற்றுச் சூழலுக்குமான இயங்கியல் உறவை மார்க்சிய ஆய்வுமுறை வெளிப்படுத்துகிறது. மாந்தர் சுற்றுச்சூழல் மீது செயல் புரிவது போலவே சுற்றுச் சூழலும் மாந்தர் மீது செயல் புரிகிறது. எப்படி நீருக்கு வெளியே மீனால் உயிர்வாழ முடியாதோ, அதே போல் சுற்றுச் சூழலுக்கு வெளியே மாந்தரால் உயிர்வாழ முடியாது. மாந்தர்தம் உடனடி நன்மைக்காக சுற்றுச்சூழலைச் சிதைக்கலாம் என்பது எவ்வளவு விபரீதம்! இந்த விபரீதத்தை அறிவியல் வழியில் வெளிப்படுத்துவது மார்க்சிய ஆய்வுமுறையே!
கொடும் போர்களாலும், காலநிலை மாற்றத்தாலும், முதலிய ஈட்ட வெறியின் வரம்பற்ற பெருக்கத்தாலும் உலகம் பேரழிவு நோக்கிச் சென்று கொண்டிருப்பதை உணரவும், இந்தப் பேரழிவைத் தடுத்து நிறுத்தவும் இன்றைய உலகப் பொருளியலையும் அரசியலையும் பகுத்தாய மார்க்சிய ஆய்வுமுறையே நமக்குத் துணை!
பின்குறிப்பு:
இந்தக் கட்டுரையில் இடம்பெறும் புதிய கலைச்சொற்கள்:
[சொல்லடிப்போம் வாங்க!]
புதிய தமிழ் (பழைய தமிழ்) – ENGLISH)
1) மார்க்குசிய ஆய்வுமுறை – THE MARXIST METHOD;
2) குமுக மாற்றம் (சமூக மற்றம்) – SOCIAL CHANGE;
3) பொருண்மியம் (பொருள்முதல் வாதம்) – MATERISLAISM;
4) கருத்தியம் (கருத்துமுதல்வாதம்) – IDEALISM;
5) இயங்கியல் பொருண்மியம் (இயக்கவியல் பொருள்முதல்வாதம்) – DIALECTICAL MATERIALISM;
6) வரலாற்றுப் பொருண்மியம் (வரலாற்றுப் பொருள்முதல்வாதம்) – HISTORICAL MATERIALISM;
7) முதலியம் (முதலாளித்துவம்) – CAPITALISM;
8) குமுக வகுப்புகள் (சமூக வருக்கங்கள்) – SOCIAL CLASSES;
9) வகுப்புப் போராட்டம் (வருக்கப் போராட்டம்) – CLASS STRUGGLE;
10) படிமலர்ச்சி (பரிணாம வளர்ச்சி) – EVOLUTION;
11) வாழ்நிலை – BEING;
12) உணர்வுநிலை – CONSCIOUSNESS;
13) ஆக்கம் (உற்பத்தி) – PRODUCTION;
14) உழைப்பின் இலக்குப் பொருள் – OBJECT OF LABOUR;
15) உழைப்புக் கருவி – INSTRUMENT OF LABOUR;
16) ஆக்கப் பொறிகள (உற்பத்திச் சாதனங்கள்) – MEANS OF PRODUCTION;
17) ஆக்க ஆற்றல்கள் (உற்பத்திச் சக்திகள்) – FORCES OF PRODUCTION;
18) ஆக்க உறவுகள் (உற்பத்தி உறவுகள்) – RELATIONS OF PRODUCTION;
19) பொதுமைக் கட்சி அறிக்கை (பொதுமை அறிக்கை) – MANIFESTO OF THE COMMUNIST PARTY (COMMUNIST MANIFESTO);
20) குமுக அமைப்பு (சமூக அமைப்பு) – SOCIAL SYSTEM;
21) குமுகப் புரட்சி (சமூகப் புரட்சி) – SOCIAL REVOLUTION;
22) தொல் பொதுமைக் குமுகம் (ஆதிப் பொதுவுடைமைச் சமூகம்) – PRIMITIVE COMMUNIST SOCIETY;
23) அடிமையுடைமைக் குமுகம் (அடிமையுடைமைச் சமூகம்) – SLAVE-OWNING SOCIETY;
24) கிழாரியக் குமுகம் (பிரபுத்துவ / நிலப்பிரபுத்துவ) சமூகம்) – FEUDAL SOCIETY;
25) அடித்தளம் – BASE;
26) மேற்கட்டுமானம் – SUPERSTRUCTURE;
27) புறஞ்சார்ந்த குமுக நெறிகள் (புறவய சமூக விதிகள்) – OBJECTIVE SOCIAL LAWS;
28) சுற்றுச் சூழல் – ENVIRONMENT;
29) காலநிலை மாற்றம் – CLIMATE CHANGE;
30) முதலிய ஈட்டம் (முதலாளித்துவ இலாபம்) – CAPITALIST PROFIT;
31) முதலிய வேளாண்மை (முதலாளித்துவ விவசாயம்) – CAPITALIST PROFIT.
32) ஊழ்வினைக் கொள்கை (தலைவிதித் தத்துவம்) – FATALISM;
33) தன்-தீர்வு (சுய நிர்ணயம்) – SELF-DETERMINATION.
தோழர் தியாகு
தாழி மடல் 413
(தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக