(தோழர் தியாகு எழுதுகிறார் : புதுவைக் குயில் தமிழ்ஒளி (1) – தொடர்ச்சி)
புதுவைக் குயில் தமிழ்ஒளி (2)
பன்னாட்டியத்தில் (சருவதேசியம்) ஊன்றிப் பாடும் போது தமிழ்ஒளியிடம் மற்றொரு பாவேந்தர் பாரதிதாசனைப் பார்க்கிறோம்: .
“இமை திறந்து பார்! விழியை அகலமாக்கு!
என் கவிதைப் பிரகடனம் உலகமெங்கும்
திமுதிமென எழுகின்ற புரட்சி காட்டும்!
சிந்தனைக்கு விருந்தாகும் உண்ண வா நீ!”
1948 இறுதியில் ‘பொதுவுடைமைக் கட்சி’ இந்திய அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட போது, கட்சியின் பரப்புரைப் பொறிகள் அனைத்தும் முடக்கப்பட்டன. அந்தச் சூழலில் ‘முன்னணி’ ஏடு மலர்ந்தது; கவிஞர் குயிலனும், தமிழ் ஒளியும் இணைந்து செயல்பட்டனர்.
அந்த ஏடு தமிழ் ஒளிக்கு நல் வாய்ப்பாய் அமைந்தது. உணர்ச்சிமயமான கவிதைகள், கதைகள், ஓரங்க நாடகங்கள் என இதழ்கள் தோறும் அவருடைய எண்ணங்கள் பதிவாகி வந்தன.
குறிப்பாகச், சீனாவில் நடை பெற்று வந்த மக்கள் யுத்தம், மாசேதுங்கு தலைமையில் வெற்றி வாகை சூடியதை வரவேற்று அவர் படைத்த கவிதைகள் நான்கு. அத்துடன், உலகத் தொழிலாளி வருக்கம் எட்டு மணி நேர வேலைத் திட்டத்தை வென்றெடுத்த வீர வரலாற்றை – மே நாட் செய்தியை – வீர காவியமாகப் படைத்துள்ளார் தமிழ் ஒளி.
இவை வரலாற்றுக் கருவூலங்கள்.
குடந்தையில் (1948) நகர் சுத்தித் தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு நடத்திய போராட்டத்தில், காவலர்கள் கடுமையாக நடந்து கொண்டதைக் கண்டித்து கவிஞர் படைத்த கவிதை, அதே ஆண்டில், ஈரோடு நகர சுத்தித் தொழிலாளர் நடத்திய போராட்டத்தின் போதும் அச்சிட்டுப் பரப்பப்பட்டது.
இந்தக் காலகட்டத்தில், தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்ட ஒரு தோழரைப் பற்றிக் கவிஞர் தமிழ்ஒளி படைத்த கவிதை ‘தாய் செய்த குற்றம்’ என்ற தலைப்பில் ‘அமுதசுரபி’ ஏட்டில் வெளி வந்தது. (1949).
தலைமறைவாக இருந்துவந்த தோழர் ஒரு நாள் தாயைக் காண வீட்டிற்கு வருகிறார். இரு தினங்கள் இருந்து விட்டுச் செல்கிறார்.
இந்தச் செய்தி காவலர்களுக்கு எட்டி விடுகிறது. விரைந்து வந்த அவர்கள் வீட்டைச் சோதனையிட்டனர். தோழர் இல்லாததால் தாயிடம் வாக்குவாதத்தில் இறங்கினர்.
இதோ கவிஞர் தமிழ்ஒளியின் எழுத்தில்:
காவலர்: இங்குன் மகனும் ஒளிந்திருந்தான், எமை ஏமாற்றி நீயிங்கொளித்து வைத்தாய்; அந்தப் பயலுக்குச் சோறுமிட்டாய், மிக ஆபத்தான குற்றம் செய்துவிட்டாய்!
தாய் சீறுகிறாள்: மூச்சும் பேச்சும் அவன் எய்து முனம், ஒரு முந்நூறு நாளாக நான் அவனைப் பத்திரமாக ஒளித்து வைத்தேன், மண்ணைப் பார்க்க அவன் ஒருநாள் பிறந்தான்!
“பாம்புக்குப் பாலிடும் மாந்தரையும் இங்குப்
பாதகர் என்பவர் யாரு மில்லை!
பாம்பல்ல, என்னுடை அன்பு மகன்; அவன்
பாயும் விலங்கல்ல, ஆசை மகன்!”
“பெற்று வளர்த்திட்ட என்மகனை, இங்குப்
பேணி வளர்ப்பது குற்றமென்றால்
தாய்க்குலம் மாண்டு மடிவதுவோ? அன்றி
தருமம் தலைசாய்ந்து வீழ்வதுவோ?
என்னுடைப் பிள்ளைக்குச் சோறிடவும், அவன்
இளைப்பாறி நிற்க இடம் தரவும்
அன்னை யெனக்கிங் குரிமை யுண்டாம், இதை
ஆண்டவன் வந்தாலும் விட்டுக் கொடேன்!”
- தாயின் கோபம் அடங்கவில்லை, ‘தாய் தன் மகனை அரவணைப்பது நீண்ட நெடுங்காலமாக இருந்துவரும் உறவு முறை. இதைக் குற்றமெனக் கூறுவது மனிதத் தன்மையற்ற செயல். இதுதான் சட்டம் என்றால் அதனை எதிர்ப்போம்’ என்றும் கூறுகிறாள். காவலர்கள் மறு மொழி கூறாமல் சென்று விடுகின்றனர்.
பாட்டாளி மக்களின் வாழ்க்கை அவலங்களைக் கவிஞர் தமிழ்ஒளி உயிர்ச் சித்திரமாக வரைந்து காட்டினார்.
‘உழவனின்’ பொங்கல் கனவு, ‘நெசவாளி’ விரும்பாத தீபாவளி, துயரச் சுமை தூக்கும் ‘துறைமுகத் தொழிலாளி’ கடலைப்பார்த்து கண்ணீர் சிந்தும் ‘மீனவர்’, மீளாத் துயரில் ஆழ்ந்திருக்கும் ‘சலவைத் தொழிலாளி’, எப்போதும் ஏக்கப் பெருமூச்சுவிடும் ‘அரிசன மக்கள்’, வீதியில் நின்று கையேந்தும் ‘கழைக்கூத்தாடி’, விதியை நொந்து விடிவு காணாத விதவையர் பற்றிய கவிதைகள் அனைத்துமே தமிழ்ஒளியின் புரட்சிப் பாடல்கள்தாம். ஆனாலும் உவமைகள் ஒளி வீச, அணி நலன்கள் அலை புரள, கலை ஓவியமாகத் திகழும் கவிதை வடிவங்கள்.
தமிழ் ஒளி இயற்கை நிகழ்வுகளை வண்ணிக்கும் போதும் மக்கள் புரட்சிக்குத்தான் உவமையாக்குகின்றார் ‘இயற்கை அன்னையின் கோபம்’ என்ற தலைப்பில் அவர் பாடக் கேளுங்கள். பேய்க்காற்றும் பெருமழையும் இணைந்து இடியோசை எழுப்பி இப் புவியினை அதிர வைக்கிறது. இதனைக் காணும் நம் கவிஞருக்கு எண்ணம் எங்கே செல்கிறது தெரியுமா? கொடுங்கோலாட்சியை எதிர்த்து மக்கள் தொடுத்த யுத்தம் வெற்றி கொள்ளுவதையே நினைவூட்டுகிறது.
“கொட்டி கொட்டி எழுந்தாள் – அன்னை
கோபத்திலே மின்னல் தீயை யுமிழ்ந்தாள்!
கட்டிக் கிடந்திடும் மேகம் – எனும்
கார்மலை யாம்குடம் எற்றிப் புரட்டிக்
கொட்டினாள் கால வெள்ளத்தை – அவள்
கொக்கரித்தாள் திசை எட்டும் நடுங்க
தட்டி எழுப்பினள் காற்றை – அது
தாவி யுருட்டுது மாமரக் காட்டை!”
முடிவில்,
“மக்கள் தொடுத்திடும் யுத்தம் – என
வானமும் மண்ணும் இருண்டு நடுங்க
செக்கென ஆட்டுது காற்று – பெருஞ்
செல்வர், மணிமுடி, சட்டம், சிறைகள்
பொக்கென வீழ்வது போலே – யாவும்
போயின பொட்டென்று விட்டது காற்று!
செக்கச் சிவந்தது வானம்-அன்னை
சேல்விழி காட்டினள் வந்தது காலை!”
புயல் போன்றது மக்கள் புரட்சி! புரட்சியின் முடிவில் விடியல்! போதுமா?
தனிக் கவிதைகள் தவிர ‘தமிழ்ஒளி’ படைத்த காவியங்கள் ஒன்பது. அவற்றுள் ‘மாதவி காவியம்’ தவிர்த்த ஏனைய எட்டும் குறுங்காப்பியங்கள். இவற்றில் ‘புத்தர் பிறந்தார்’ துறவுக் காப்பியம்.
கவிஞர், புத்தர் வரலாற்றை முழுக்காவியமாகப் படைக்கவே விரும்பினார். எதிர்பாராத இடர்ப்பாடுகள் அடிக்கடி எழுந்து முயற்சியைத் தடைப்படுத்தி வந்தன. இதன் விளைவாக, புத்தர் சனனம் என்ற அளவில் காவிய முயற்சி நின்று போனது.
‘புத்தர் பிறந்தார்’ என்ற காவியப் பகுதியை “தமிழ்ஒளியின் கவிதைகள்” தொகுப்பில் கண்ட மு. வரதராசனார் “புத்தர் பிறந்தார்” என்ற அருமையான காவியம் முடிக்கப்படாமலே குறையாக நின்று விட்டது, தமிழிலக்கியத்தின் குறையாகவே ஆகி விட்டது’ என்றார்.
‘நிலைபெற்ற சிலை’, ‘வீராயி’, ‘மே தின (உ)ரோசா’ ஆகிய மூன்றும் புரட்சியமான தலித் இலக்கியங்கள் எனலாம்.
இவற்றுள் ‘வீராயி’ காவியத்திற்கும், பாரதியார் பாடிய ‘கரும்புத் தோட்டத்திலே’ என்ற பாடலே அடித்தளம். விவசாயக் கூலித் தொழிலாளர்கள் வாழும் பகுதிகளில் ‘செங்கொடி’ ஏற்ற வேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்தி எழுந்த நூல் ‘மே தின (உ)ரோசா’. பொதுவுடைமைக் கட்சியில் காலூன்றாத காலத்தில் எழுதப்பட்ட ‘நிலை பெற்ற சிலை’ பொதுவுடைமைப் பூங்காவாகிய சோவியத்து ஒன்றியத்தின் பெருமை பேசப்படுகிறது.
பேராசிரியர் இராகுல சாங்கிருத்தியாயன் படைத்துள்ள புகழ் பெற்ற நூல் ‘வால்காவிலிருந்து கங்கை வரை’. அதில் இடம் பெற்றுள்ள ‘பிரபா’ என்ற கதையினை அடிப்படையாக வைத்து புனைந்த புரட்சிகரமான குறுங்காப்பியம் ‘கோசலக்குமரி’.
தமிழ்ஒளி மக்களிடையே புகழ் பெறாத போதும் அறிஞர்களிடையே மதிக்கப்பெற்றார். மு. வரதராசனார், எழுத்தாளர்கள் பூவண்ணன், விந்தன், செயகாந்தன் போன்றோர் தமிழ் ஒளியைப் பாராட்டினார்கள். மா.சு. சம்பந்தம் தமிழ்ஒளியின் கவிதைகளை வெளியிட்டார். செ. து. சஞ்சீவி தமிழ்ஒளியின் கவிதைகளையும், காவியங்களையும் திரட்டித் தொகுத்து வெளியிட்டார்.
நெய்வேலியில் பழுப்பு நிலக்கரிச் சுரங்கம் தொடங்கி மின் உற்பத்தி நிலையம் அமைத்த போதும், சோவியத்து ஒன்றியம் (இசு)புட்னிக் என்னும் விண் கலத்தை ஏவிய போதும வரவேற்றுக் கவிதைகள் படைத்தார் தமிழ்ஒளி. அணுகுண்டு அச்சுறுத்தலை எதிர்த்தும் பாடினார்.
மக்கள் வாழ்வு உயர இலக்கியங்கள் பயன்படவேண்டும் என்பதுதான் அவர் கொள்கை. ‘ஒரு கவிஞன் வாழ்ந்ததற்கு அடையாளமே அவனுடைய படைப்புகள்தாம்’ என்று எழுதினார்.
தமிழ்ஒளியின் கவிதைகள் தமிழ்நாட்டு மக்களிடையே போதிய புகழ் பெறவில்லை என்ற குறை நமக்குண்டு.
ஆனால் அவர் விதைத்து கீரையன்று உடனே முளைத்து உடனே பயன் தருவதற்கு. பனை நட்டுள்ளார், வளரக் காலமெடுக்கும், வளர்ந்த பின் நின்று பயன் தரும். மக்கள் வாழ்வு உயர இலக்கியங்கள் பயன்பட வேண்டும் என்பதுதான் தமிழ்ஒளியின் இலக்கியக் கொள்கையாம்! வாழ்வு உயருதல் என்பதைப் பொதுமை நோக்கில் புரிந்து கொண்டால் அது சட்டென்று தோன்றி சட்டென்று மறையும் உயர்வன்று என்பது தமிழ் ஒளிக்குத் தெரியாதா, என்ன?
“கவிஞன் வாழ்ந்ததற்கு அடையாளமே அவனுடைய படைப்புகள்தாம்!” சொன்னவர் தமிழ்ஒளி! அவர்தம் படைப்புகள் புதிய தமிழகத்தைப் படைக்கும் பணிக்குக் கருவியாகும் காலம் விரைவில் வரும். அப்போது தமிழ்ஒளியின் படைப்புகள் தமிழின வைப்பகத்திலிருந்து வெளிவந்து ஒளிவீசும்!
(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 319
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக