26 May 2023 அகரமுதல
(தோழர் தியாகு எழுதுகிறார் 111: கரிகாலனின் அரும்பணி- தொடர்ச்சி)
சனவரி 26
இன்று 74ஆம் இந்தியக் குடியரசு நாள். முடியரசு ஆட்சிமுறையோடு ஒப்புநோக்கின் குடியரசு ஆட்சிமுறை என்பது வரலாற்று நோக்கில் ஒருபெரும் முன்னேற்றப் பாய்ச்சல் என்பதில் ஐயமில்லை.
அடிமையுடைமைக் குமுகத்திலேயே குடியரசுக் கொள்கையைக் கடைப்பிடித்த பெருமை கிரேக்கத்துக்கும் உரோமாபுரிக்கும் உண்டு — அது ஆண்டைகளுக்கும் உயர்குலத்தினருக்குமான குடியரசாகவே இருந்த போதிலும். குடியரசுக் கொள்கையை அம்மக்கள் மதித்துப் போற்றினார்கள். சூலியசு சீசர் உரோமாபுரிக் குடியரசில் தனக்குக் கிடைத்த புகழில் மயங்கி தன்னை முடிமன்னனாக்கிக் கொள்ள முற்பட்ட போது அவனுடைய நெருங்கிய நண்பன் புருட்டசே அவனைக் குத்திக் கொன்றான். “நான் சீசரை நேசிக்கவே செய்தேன், ஆனால் அவனை விடவும் உரோமாபுரியைக் கூடுதலாக நேசித்தேன்” என்று சொல்லி அந்தக் கொலையை நியாயப்படுத்திய போது மக்கள் அதனை ஏற்றுக் கொண்டார்கள்.
குடியரசு பெயரளவுக்கான குடியரசாக இருந்தால் போதாது. அது குடியாட்சிய உள்ளடக்கம் கொண்ட குடியரசாகவும் இருக்க வேண்டும். முடியரசு அல்லாதவை அனைத்துமே வடிவ அளவில் குடியரசுகள்தாம். குடியாட்சிய உள்ளடக்கம் இல்லாத பல குடியரசுகளை உலகம் கண்டுள்ளது, இன்றும் கண்டு வருகிறது. இராணுவ வல்லாட்சிகள் பலவும் குடியரசுகளாகவே அறியப்படுகின்றன. அவை குடியாட்சிய உள்ளடக்கம் இல்லாத குடியரசுகள். பெயரளவுக்குக் குடியரசுகளாக இருப்பினும் செயலளவில் ஒரு குடும்பம் அல்லது குறுங்குழுவின் வல்லாட்சியப் பிடியில் இருக்கும் குடியரசுகளும் உண்டு. ஒற்றைக் கட்சி ஆளுமையில் உள்ள குடியரசுகளும் முழுமையான குடியாட்சியக் குடியரசுகளாக இருக்க முடியாது.
குடியரசுக் கொள்கை வரலாற்றுநோக்கில் முற்போக்கானதாக இருப்பினும், இன்றைய உலகம் மொத்தத்தில் முடியரசுக் காலத்தைக் கடந்து குடியரசுக் காலத்துக்குள் நுழைந்து விட்டதென்பது உண்மையானாலும், குடியாட்சிய உள்ளடக்கம் பெற்ற குடியரசுகளுக்கான போராட்டத்தை உலக மக்களும் மக்களினங்களும் தொடர்ந்து நடத்தி வருகின்றன.
குடியாட்சியம் (சனநாயகம்) என்பதற்கு வாக்குரிமையும் தேர்தலும் இன்றியமையாதன. ஆனால் அவை மட்டுமே குடியாட்சியம் ஆகி விட மாட்டா. ஒன்றுக்கு மேற்பட்ட தேசங்களை உள்ளடக்கிய ஒரு குடியரசில் அந்தத் தேசங்கள் தன்-தீர்வுரிமை (சுய நிர்ணய உரிமை) பெற்றுள்ள போதுதான் அது உண்மையான குடியாட்சியக் குடியரசு ஆகும்.
இலங்கைத் தீவில் குடியேற்றஆதிக்க(காலனியாதிக்க)க் காலத்திலேயே 1930௧ளின் தொடக்கத்தில் வயதுவந்த அனைவருக்கும் வாக்குரிமை (universal adult franchise) வழங்குவதற்கான தோனமோர் ஆணையப் பரிந்துரைகள் பற்றித் தமிழர் தலைவர்களில் ஒருவரான பொன்னம்பலம் இராமநாதன் (“தோனமோர், தமிழ்சு நோ மோர்” [Donough more Tamils no more]) என்று கூவினாராம்! தோனமோர் வந்தால் தமிழன் செத்தான்! ஏனென்றால் சிங்களர் முக்கால் பங்கும் தமிழர் கால் பங்கும் இருக்கிற நாட்டில் வயதுவந்த அனைவருக்கும் வாக்குரிமை என்பது பெரும்பான்மையான சிங்களரின் ஆதிக்கத்துக்கு வழிகோலும், தமிழர்களை இரண்டாந்தகைக் குடிமக்களாக்கி விடும்! இராமநாதனின் அச்சத்தைப் பின்வந்த வரலாறு மெய்ப்பித்து விட்டது.
ஒரு தேசிய இனம் பெரும்பான்மையாகவும் மற்றொரு தேசிய இனம் சிறுபான்மையாகவும் இருக்கும் சூழலில் பெரும்பான்மையாதிக்கம் ஏற்படாமல் தடுக்க ஒரே வழி பிரிந்து போகும் உரிமை உள்ளிட்ட தன்-தீர்வுரிமைதான்! தேசிய இனங்களின் நிகர்மையையும் விடுமையையும் இது ஒன்றே உறுதி செய்யும். இலங்கைத் தீவில் சிறுபான்மை நலன்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதாகக் கூறிக் கொண்ட ‘சோல்பரி’ அரசமைப்பினால் சிங்களப் பேரின வெறிக்கு அணைபோட முடியவில்லை.
‘டொமினியன்’ தன்னரசுத் தகுநிலையில் இருந்த ‘சிலோன்’ 1972ஆம் ஆண்டு சிறிமா பண்டாரநாயக்கா தலைமையில் முதல் குடியரசு அரசமைப்பை ஏற்ற போது வடிவ அளவில் அது ஒரு முன்னேற்றமாகக் கருதப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அது சிங்களப் பேரினவாதத்துக்கு முழுமையான சட்ட வடிவம் கொடுக்கும் ஏற்பாடே என்பதால் தந்தை செல்வா தலைமையில் தமிழ்மக்கள் அந்தக் குடியரசைப் புறக்கணித்தார்கள். இன்றளவும் சிறிலங்கா குடியரசு என்பது தமிழ்மக்களின் ஒப்புதல் பெறாத ஒன்றாகவே நீடித்து வருகிறது. சிறிலங்கா தன்னைக் குடியாட்சியக் குடியரசாகவும், ஏன், குமுகியக் (சோசலிச) குடியரசாகவும் கூட அறிவித்துக் கொள்ளலாம். ஆனால் தமிழ் மக்களுக்கு அது சனநாயகக் குடியரசு அல்ல, இனநாயகக் குடியரசே ஆகும். It is not democracy, but ‘ethnocracy’. இந்த இனநாயகத்தின் உச்ச வெளிப்பாடுதான் இனவழிப்பு.
சிங்கள, தமிழ்த் தேசங்களின் நிகர்மையும் இரு தேச உழைக்கும் மக்களின் ஒற்றுமையும் நிறுவப்பட வேண்டுமானால் சிறிலங்கா மெய்யாகவே குடியாட்சியக் குடியரசாக — எந்தத் தேசமும் மற்றத் தேசத்தை ஒடுக்குதல் இல்லாத குடியாட்சியக் கூட்டாட்சிக் குடியரசாக — மாற்றியமைக்கப்பட வேண்டும். அப்படி ஒரு குடியரசாக வழி இல்லையென்றால் இரு குடியரசுகளாக வேண்டும். ஒரு சிங்களக் குடியரசும் ஒரு தமிழ்க் குடியரசுமாக அமைத்துக் கொண்டால் இரண்டுமே குடியாட்சியக் குடியரசுகளாக இருக்க முடியும். இனவெறி ஒழியும். மக்கள் ஒற்றுமை மலரும். இஃதல்லாத எந்தத் தீர்வும் இனநாயகத் தீர்வாக இருக்குமே தவிர சனநாயகத் தீர்வாக இருக்க முடியாது.
தென் ஆப்பிரிக்காவில் வெள்ளை இனவெறி அரசும் கறுப்பின மக்களை ஒடுக்கும் இனஒதுக்கல் அரசாக இருந்து கொண்டே தன்னைக் குடியரசாகத்தான் சொல்லிக் கொண்டிருந்தது. ‘ஒருவருக்கு ஒரு வாக்கு, ஒரு வாக்குக்கு ஒரு மதிப்பு’ என்ற முழக்கத்துடன் நெல்சன் மண்டேலா தலைமையில் தென் ஆப்பிரிக்க மக்கள் உண்மையான குடியாட்சியக் குடியரசுக்காகப் போராடி விடுதலை பெற்றார்கள்.
ஒரு குடியரசு பெயரளவில் அல்லது வடிவளவில் மட்டும் குடியரசாக இருந்தால் போதாது. அது குடியாட்சிய உள்ளடக்கம் கொண்டதாகவும் இருக்க வேண்டும். ஒரு குடியரசின் தோற்றம் என்பது ஒருநாள் நிகழ்வன்று. ஒரே ஒருவரால் அல்லது ஒரே ஒரு கட்சியால் நிகழ்வதுமன்று. குடியரசு ஆக்கம் என்பது ஒரு போராட்டச் செயல்வழி. ஒரு காலத்தில் அல்லது கட்டத்தில் முற்போக்காக இருந்து குமுக முன்னேற்றத்துக்குத் துணை செய்யும் ஒரு குடியரசு பிறிதொரு காலத்தில் அல்லது கட்டத்தில் முன்னேற்றத்துக்குத் தடைபோடும் பிற்போக்குக்குக் குடியரசாக மாறிப் போவதும் உண்டு.
இந்தியக் குடியரசு அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் தன்னை இறைமையுள்ள குமுகிய சமயச்சார்பற்ற குடியாட்சியக் குடியரசு (SOVEREIGN SOCIALIST SECULAR DEMOCRATIC REPUBLIC) என்று அறிவித்துக் கொள்கிறது. இறைமை, குமுகியம், சமயச் சார்பின்மை, குடியாட்சியம் இவையெல்லாம் எந்த அளவுக்கு மெய்? எந்த அளவுக்குப் பொய்? எந்த அளவுக்கு மெய்யும் பொய்யுமான கலவை? என்று விரிவாகப் பேச முடியும். வெறும் சொற்களை மட்டும் பிடித்துக் கொண்டிராமல் இந்த அரசமைப்பு கருவாகி உருவாகித் திருவான வரலாற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும். புதுக்குடியேற்ற9காலனிய), புதுத்தாராளிய ஊழியில் இறைமையை எங்கு போய்த் தேடுவது? இன்று இந்தியாவின் இறைமை என்பதற்கு ஒரே பொருள் மாநிலங்களாகக் குறிக்கப் பெறும் பல்வேறு தேசங்களின் இறைமையை மறுப்பது தவிர வேறொன்றுமில்லை.
குமுகியமா (சோசலிசமா?) ஆழாக்கு என்ன விலை? சமயச் சார்பின்மை என்றெல்லாம் மோதி காலத்தில் கனவு காணவும் முடியுமா? விலைக்கு வாங்கப்படும் எம்எல்ஏ.க்களிடமும், வோட்டுக்குத் ‘துட்டு’ வாங்கும் வாக்காளர்களிடமும் கேட்டுக் குடியாட்சியத்தின் மதிப்பைத் தெரிந்து கொள்ள்ளுங்கள்.
மையம் மனமிரங்கினால் அரைக் கூட்டாட்சி, அது கோலெடுத்தால் கண்டிப்பான ஒற்றையாட்சி – இதுதான் இந்திய அரசமைப்பு. இந்தப் பொய்க் கூட்டாட்சியைத்தான் இந்திய அரசமைப்பின் அடிக் கட்டுமானங்களில் ஒன்று என்கிறது இந்திய உச்ச நீதிமன்றம்!
அரசியல் குடியாட்சியத்துக்கே பஞ்சம் என்னும் போது அம்பேத்கர் வலியுறுத்திய குமுகக் குடியாட்சியம் (சமூக சனநாயகம்) பற்றிப் பேச என்ன இருக்கிறது? இந்தியாவை ஒரு தேசம் என்று திணிக்கும் முயற்சியில் இந்தியாவிலடங்கிய பல்வேறு தேசங்களுக்கும் உரித்தான தன்-தீர்வு (சுய நிர்ணயம்) மறுக்கப்படுவது மட்டுமல்ல, தேசம் என்ற ஓர்மையே (அடையாளமே) மறுக்கப்படுகிறது. எனவேதான் இந்திய அரசமைப்பை தேசங்களின் அடிமைமுறியாகப் பார்க்கிறோம்.
சமூக நீதிக் கண்ணோட்டத்திலும் வரலாற்றுவழி வந்த போராட்ட முத்திரைகளாகச் சில முற்போக்கு நெறிகளைத் தாங்கியுள்ள போதும் இந்திய அரசமைப்பு இறுதி நோக்கில் சாதிகாக்கும் சட்டமாகவே இருக்கிறது. எனவேதான் தந்தை பெரியார் சாதி ஒழிப்புப் போராட்டத்தை சட்ட எரிப்புப் போராட்டமாக நடத்தினார். அரசமைப்பின் சிற்பி என்று போற்றப்படும் அண்ணல் அம்பேத்துகரும் மூன்றாண்டு காலத்துக்குள் அதற்கான பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டார்.
அறிவுத் தளத்தில் இந்திய அரசமைப்பின் அடிப்படையிலான இந்தியக் குடியரசை அறிஞர் ஆனந்து தெல்துமுதே சாதிக் குடியரசு என்றே வண்ணித்தார். இந்த அரசமைப்பை அம்பேத்துகர் பெயரில் நியாயப்படுத்தும் முயற்சிகளையும் உறுதியாக மறுதலித்தார். சரி, என்ன செய்யலாம்?
இந்திய அரசமைப்பு வரலாற்று வழியில் காலாவதியாகி விட்டாலும் அரசியல் வழியில் காலாவதியாகி விடவில்லை. இந்த அரசமைப்பும் அதன் சார்பியலான முற்போக்குக் கூறுகளும் (relatively progressive aspects) இப்போது மக்களுக்குப் பகையான பிற்போக்கு ஆற்றல்களின் நச்சு நோக்கங்களுக்குத் தடையாக நிற்கின்றன. முகப்புரை உட்பட எங்கெல்லாம் நல்ல குறிக்கோள்கள் சொல்லப்படுகின்றனவோ அங்கெல்லாம் அவற்றைச் சிதைக்க விரும்புகின்றார்கள்.
சமயச் சார்பற்ற இந்தியக் குடியரசை வெளிப்படையான இந்துக் குடியரசாக அறிவித்து இந்து இராட்டிரத்தை நிறுவத் திட்டமிட்டுள்ளார்கள்.
இந்தியாவில் இப்போதுள்ள மொழிவழி மாநில அமைப்பைக் கலைத்து விட்டு ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே அரசு என்று வெளிப்படையான ஒற்றையாட்சியை ஏற்படுத்த விரும்புகின்றார்கள்.
இந்திய அரசமைப்பின் சமூக நீதிக் கூறுகளை ஒழித்துக் கட்ட ஆசைப்படுகின்றார்கள். பொருளியலில் நலிந்த பிரிவினர் என்ற பெயரில் பார்ப்பனருக்குச் செய்யப்பட்டுள்ள இடஒதுக்கீடு என்பது தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குரிய இடஒதுக்கீட்டுக்குக் கல்லறை கட்டும் முதல் முயற்சியே தவிர வேறல்ல.
தொழிலாளர் நலம், உழவர் நலம், மாதர் நலம், இளைஞர் நலம் உள்ளிட்ட சேமநலக் கூறுகளை அடியோடு நீக்கி விட்டுப் பன்னாட்டுப் பெருங்குழுமங்களின் கட்டற்ற சுரண்டல் வேட்டைக்கு வழியமைப்பதே அவர்களின் விருப்பம்.
இவையெல்லாம் நாளை நடந்து விடும் என்பதல்ல, இன்றே இப்போதே நடந்து கொண்டிருக்கும் கொடுமுயற்சிகள் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
அதிகார வெறியினால் பிரெஞ்சு அரசமைப்பைச் சீர்குலைக்க முயன்ற உலூயி போனபார்ட்டைப் போல இந்துத்துவ வெறியோடு இந்திய அரசமைப்பைச் சீர்குலைக்க முயலும் நரேந்திர மோதி கும்பல் குறித்து நமக்கு எச்சரிக்கை தேவை.
இந்திய அரசமைப்பை இந்துத்துவ பாசிச அதிகாரத்தின் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கும் போராட்டத்தில்தான் நாம் விரும்பும் தமிழ்த் தேசக் குடியரசுக்காகப் போராடும் களத்தை நாம் காப்பாற்றிக் கொள்ள முடியும். இந்தக் களத்தை இழந்தால் இந்தியாவின் முற்போக்கு முழுவதற்கும் அழிவுதான் மிஞ்சும்.
(தொடரும்)
தோழர் தியாகு
தரவு : தாழி மடல் 81
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக