(தோழர் தியாகு எழுதுகிறார் 67 தொடர்ச்சி)

தமிழீழத் தோழமையின் கொள்கைவழி ஒற்றுமை

தமிழ்நாட்டில் தமிழீழத் தோழமை இயக்கம் சற்றே நலிவுற்ற நிலையில் இருப்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். இதற்கான முகன்மைக் காரணங்களில் ஒன்று: தமிழ்த் தேசியம் – எதிர் – திராவிடம் எனும் கருத்தியல் பிணக்காகும். இது பல நேரம் கருத்தியல் விவாதம் என்ற எல்லையைக் கடந்து கசப்பான சொற்போராகவும் மாறிவிடக் காண்கிறோம். தமிழக அரசியல் ஆற்றல்கள் தமிழக, இந்திய அரசியல் வேறுபாடுகளைக் கடந்து தமிழீழத் தோழமைக் கொள்கையில் ஒன்றுபட்டுப் போராடுவது நமக்கொன்றும் புதிதன்று.

1990ஆம் ஆண்டு செட்டம்பர் திங்கள் திலீபன் மன்றம் நிறுவிய போது “ஈழத் தமிழர் துயர்துடைக்க இயன்றதைச் செய்வோம் வாருங்கள்!” என்ற செயல் முழக்கத்தோடு, தமிழ்நாட்டு ஈழ ஆதரவு ஆற்றல்கள் முன்னெடுக்க வேண்டிய கொள்கை முழக்கங்களையும் முன்மொழிந்தோம்:

1)   தமிழீழ விடுதலை ஒரு வரலாற்றுத் தேவை!

2)   இராசிவு – செயவர்த்தனா உடன்படிக்கை ஈழத் தமிழர் நலனுக்குப் பகை!

3)   தமிழீழ விடுதலைப் போரில் விடுதலைப் புலிகளை ஆதரிப்போம்!

1991 செட்டம்பர் 15ஆம் நாள் திலீபன் மன்ற அறிமுகக் கூட்டத்தில் இந்த முழக்கங்களை விளக்கிப் பேசினேன். உடனே மா.பொ.க.(சிபிஎம்) கட்சியிலிருந்து என்னை நீக்கினர். செப்டம்பர் 26ஆம் நாள் மயிலை பொட்டி சிறிராமுலு அரங்கில் திலீபன் மன்றம் ஒரு தொடக்கக் கூட்டம் வாயிலாக நிறுவப்பட்டது. பேராசிரியர் சரசுவதி தலமையிலான அன்னையர் முன்னணியுடன் இணைந்து திலீபன் மன்றம் பல முன்முயற்சிகளை மேற்கொண்டது.

பிறகு (1991 இறுதி அல்லது 92 தொடக்கத்தில்) தமிழர் தேசிய இயக்கத் தலைவர் திரு பழ. நெடுமாறன் மயிலை கற்பகம் விடுதியில் ஈழ ஆதரவுக் கலந்தாய்வுக் கூட்டம் கூட்டினார். தமிழீழ ஆதரவு இயக்கங்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று திலீபன் மன்றம் சார்பில் நான் முன்மொழிந்தேன். கோவை இராமகிருட்டிணன், அருள்மொழி ஆகியோர் என்னை வலுவாக வழிமொழிந்தனர். நெடுமாறனை அமைப்பாளராகக் கொண்டு தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டது. ஒருங்கிணைப்புக் குழுவுக்கு அடிப்படையாக மூன்று கொள்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

1)   தமிழீழ மக்கள் மீதான தேசிய ஒடுக்குமுறைக்குத் தீர்வு தனித் தமிழீழமே!

2)   தமிழீழ விடுதலைப் போரில் விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறோம்!

3)   தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் விடுலைப் புலிகளையும் ஆதரிப்பதால் மைய மாநில அரசுகள் எவ்வித அடக்குமுறையை ஏவினாலும் பின்வாங்க மாட்டோம்!

இந்தக் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளும் அமைப்புகள் மட்டுமே ஒருங்கிணைப்புக் குழுவில் சேரலாம். இவ்வடிப்படையில் நாற்பதுக்கு மேற்பட்ட குழுக்கள், இயக்கங்கள், கட்சிகள் ஒருங்கிணைந்தன. 1991-92 முதல் 2008 வரை சற்றொப்ப இருபதாண்டுக் காலம் இந்த ஒருங்கிணைப்புக் குழுவின் தொடர்ச்சியான செயற்பாடுகள் தமிழ்நாட்டில் தமிழீழ விடுதலைத் தோழமை நெருப்பு அணையவிடாமல் காத்தன. நெடுமாறன் அவர்களின் தலைமைக்கு இதில் ஒரு முகன்மைப் பங்கு உண்டு என்பதை அறிந்தேற்கிறேன்.

தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவில் தமிழீழ விடுதலைக்கு நேர்த் தொடர்பில்லாத செய்திகளை நுழைக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தோம். எனக்கு நினைவுள்ளது: ஒரு மா-இலெ குழுவைச் சேர்ந்த தோழர்கள் ந்திய விரிவாதிக்க எதிர்ப்பை நான்காவது கொள்கையாகச் சேர்க்க வேண்டும் என்று கூறிய போது நான் அதை ஏற்க மறுத்தேன். ஈழம் தவிர மற்ற வகையில் இந்தியத் தேசியத்தை எதிராகக் கருதாதவர்களும் கோட்பாட்டளவில் ஈழத் தோழமையில் இணைய இடமுண்டு என்று நான் நிலையெடுத்தேன். மொத்தமாகவே இந்திய விரிவாதிக்கத்தை எதிர்ப்பதில் எனக்கு உடன்பாடுண்டு என்றாலும் ஒருங்கிணைப்புக் குழுவின் மீது அந்நிலைபாட்டைத் திணிக்க இயலாது என்றேன். அப்படித் திணிப்பது போராடும் தமிழீழ மக்களின் நலனை மையப்படுத்திச் சிந்திக்காமையைக் குறிக்கும் என்றேன். இத்தனைக்கும் இந்தியப் படையெடுப்புக்கு எதிராகப் புலிகள் வீரப் போர் புரிந்து கொண்டிருந்த காலம் அது.

ஒருங்கிணைப்புக் குழுவில் திராவிடக் கொள்கை, தமிழ்த் தேசியம், பொதுமை, இடதுசாரி என்று எல்லாச் சார்பாளர்களும் இருந்தனர். ஆனால் அந்த அடிப்படையில் எந்தப் பிணக்கும் தோன்றியதில்லை. ஒற்றுமைக்கு எந்த அச்சுறுத்தலும் எழுந்ததில்லை. குறிப்பாகச் சொன்னால், தமிழீழத் தோழமையில் திராவிடம், தமிழ்த் தேசியம் என்ற மோதல் வந்ததே இல்லை. தெருக்களில் சேர்ந்து முழங்கி சேர்ந்து நடந்தோம்.  சிறைகளில் சேர்ந்து அடைந்தோம். திராவிடம், தமிழ்த் தேசியம் என்ற விவாதங்கள் அப்போதும் நடந்து கொண்டிருந்தன. ஆனால் ஈழ ஆதரவு இயக்கத்தின் ஒற்றுமை அதனால் கெட்டதில்லை.

2008 பிற்பகுதியில் ஈழப் போர் தீவிரமடையும் வரை தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு உயிரோட்டமாக இயங்கி வந்தது. அந்த ஆண்டு அட்டோபரில் இனவழிப்புப் போருக்கு எதிராக இந்தியப் பொதுவுடைமைக்கட்சி  போராட  முன்வந்த போது  நாங்கள் அதனை மனமுவந்து வரவேற்றோம். அந்தப் பட்டினிப் போராட்டத்தில் நானும் வாழ்த்திப் பேசினேன்.

திமுக கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் “இனவழிப்புப் போரை நிறுத்தக் கோரியும், இந்தியா இலங்கைக்கு ஆய்தம் கொடுப்பதை எதிர்த்தும், போரை இந்தியா நிறுத்தத் தவறினால் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுவதென்றும்“ தீர்மானங்கள் இயற்றப்பட்டன. இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி மனித சங்கிலி இயக்கமும் நடத்தப்பட்டது.

ஆனால் இந்திய அயலுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்சி நேரில் வந்து சோனியா காந்தி சார்பில் வேண்டுகோள் வைத்த போது கலைஞர் வேறு எந்தக் கட்சித் தலைவரையும் கலந்து கொள்ளாமலே தற்போக்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் கோரிக்கைகளையும் எச்சரிக்கையையும் கை விட்டார்.

ஆனால் போருக்கு எதிராகத் தமிழ்நாட்டு மக்களின் அனைத்துப் பிரிவினரும் கிளர்ந்தெழுந்தனர். மதிமுக, பாமக, இ.பொ.க. விடுதலைச் சிறுத்தைகள், தமிழர் தேசிய இயக்கம் நெடுமாறனை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு இலங்கைத் தமிழர் ;பாதுகாப்பு இயக்கம் பிறந்தது. இ.பொ.க. தலைமைக்கு ஒவ்வாது என்பதால் ஈழம் என்ற பெயர் தவிர்க்கப்பட்டதாம்.

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் அமைந்தவுடன், கிட்டத்தட்ட இருபதாண்டுக் காலம் உயிரோட்டமாக இயங்கி வந்த தமிழீழ விடுதலை ஆதர்வாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் இயக்கம் முடிந்தது.

ஆனாலும் போர் எதிர்ப்பு இயக்கத்தில் ஒற்றுமையின் தேவை கருதி நாங்களும் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் எடுத்த முயற்சிகளில் விலகி நிற்காமல் செயலளவில் பங்கேற்றோம். திமுக ஒருபுறம் போரை எதிர்த்துப் பேசிக்கொண்டிருந்த போதே, திமுக ஆட்சி, போர் எதிர்ப்பு இயக்கங்களுக்கு எதிராகக் காவல் துறையின் அடக்குமுறையை ஏவியது.

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் இந்திய அரசைத் தனிமைப்படுத்தும் படித் தீவிர மக்கள் இயக்கங்கள் நடத்த முற்படாத போது தோழர்கள் பெ.மணியரசன், கொளத்தூர் மணி, நான் மூவரும் கூடிப்பேசி, தமிழர் ஒருங்கிணைப்பு என்ற கூட்டியக்கத்தை நிறுவி, சென்னை வருமான வரி அலுவலக  முற்றுகை, சிங்கள அரசுக்கு இந்தியா படைக்கலன்கள் அனுப்பப் பயன்படுத்திய தஞ்சாவுர் வான் தளத்துக்கு எதிரான முற்றுகை ஆகிய போராட்டங்களை நடத்தினோம். அந்த நேரம் வெளிவந்த தமிழர் கண்ணோட்டம், புரட்சிப் பெரியார் முழக்கம், சமூகநீதித் தமிழ்த் தேசம் இதழ்களில் இந்தச் செய்திகள் விரிவாக இடம் பெற்றன.

போரை நிறுத்த அழுத்தம் கொடுக்கும் வகையில் 2009 பொதுத் தேர்தலில் காங்கிரசைத் தோற்கடிக்க இயக்கம் நடத்தும் முடிவு தமிழர் ஒருங்கிணைப்பு சார்பில்தான் எடுக்கப்பட்டது.

நடந்த ஒவ்வொன்றையும் பட்டியலிடுவது ஈண்டு என் நோக்கமன்று. நான் வலியுறுத்த விரும்புகிற ஒரே ஒரு செய்தி: தமிழீழ ஆதரவு இயக்கத்தை திராவிடம்  எதிர்  தமிழ்த் தேசியம் என்ற பூசலால் பிளவுபடுத்தத் தேவையில்லை, நாங்கள் அப்படிப் பிளவுபடுத்தவும் இல்லை என்பதே.

இனவழிப்புப் போருக்கு ஈடுசெய் நீதி கோரும் போராட்டத்தில் தமிழ்நாட்டுத் தமிழர்களின் ஒற்றுமையைக் கட்ட வேண்டிய கடமையை மறந்து தன்னல அரசியல் நோக்கங்களுக்காக தமிழீழத் தோழமையைச் சிதைக்கும் வேலையை யார் செய்தாலும் புறந்தள்ளும் தெளிவு நமக்கு  வேண்டும். அப்படிச் சிதைப்பது யார்? தொடர்ந்து பேசுவோம்.

(தொடரும்)

தோழர் தியாகு

தரவு : தாழி மடல் 41