(தோழர் தியாகு எழுதுகிறார் 51 தொடர்ச்சி)

சொல்லடிப்போம் வாங்க! (7)

அன்பர் சிபி எழுதுகின்றார்:
ஆழ-கடல் என்பதில் உயிரொலி மெய்யொலியோடு புணர அகரம் கெடும். இவ்விதி தாரள-இயம் என நிலைமொழியிலும் வருமொழியிலும் உயிரொலி நிற்கும் நிலைக்குப் பொருந்தா என எண்ணுகிறேன்.

சிபி சுட்டும் இலக்கணம் சரி என்று இலக்குவனார் திருவள்ளுவன் சொல்லி விட்டார். இந்தப் புதிய மடல் குறித்தும் அவர் கருத்தறிவோம்! சொல்லாய்வறிஞர் அருளியாரிடமும் பேசுகிறேன். அது வரை முடிவெடுப்பதைத் தள்ளி வைத்து விட்டு மற்ற சொல்லாக்கங்களில் கவனம் செலுத்துவோம்.
Imperiaslism = ஏகாதிபத்தியமா? வல்லரசியமா? அல்லது வேறு சொல் உண்டா? இது குறித்து அன்பர்கள் எழுதுங்கள்.
Capitalism = முதலாளித்துவமா? முதலாளியமா? முதலியமா? – இது குறித்த உரையாடலையும் தொடங்குவோம், தொடங்குங்கள்.

பெரியாரா? பிராபகரனா? (தாழி மடல் 30) கட்டுரைக்கு எதிர்வினையாக அன்பர் சிபி எழுதுகின்றார்:
ஈழத்தில் பிரபாகரன் ஈவெராவையோ திராவிடத்தையோ குற்றாய்வு செய்யவில்லை என்பதால் இங்கு யாரும் அதனைச் செய்யக்கூடாது என்பது ஏற்புடையதல்ல.
சரியாகச் சொன்னீர்கள். நானும் திருப்பிச் சொல்கிறேன்: ஈழத்தில் பிரபாகரன் (பெரியார்) ஈவெராவையோ திராவிடத்தையோ குற்றாய்வு செய்யவில்லை என்பதால் இங்கு யாரும் அதனைச் செய்யக் கூடாது என்பது ஏற்புடையதல்ல.
யார் அப்படிச் சொன்னது? எங்கே? எப்போது? நான் எங்கும் அப்படியோ அந்தப் பொருள்படும்படியோ சொன்னதாக எனக்கு நினைவில்லை. உண்மையில் நான் அப்படிச் சொல்லியிருந்தால் எடுத்துக் காட்டுங்கள், சிபி!
சிபிதான் என்றில்லை! அன்பர்கள் யார் வேண்டுமானாலும் எடுத்துக் காட்டுங்கள்! திருத்திக் கொள்கிறேன். சத்தியசீலனின் கடிதம் தொடங்கி இந்த மடல் வரை 29 முதல் 33 வரைக்குமான தாழி மடல்களில் இது குறித்து வந்துள்ள அனைத்தையும் படித்து விட்டுச் சொல்லுங்கள்.
பிரபாகரன் தமிழீழத் தேசியத் தலைவரே தவிர எமதியக்கத்தின் தலைவரல்லர் என்று நான் தெளிவாக எழுதிய பின் சிபி சாற்றுவது போல் நான் எப்படிச் சொல்வேன்?
உரையாடலைத் தொடர்வோம்.
(தொடரும்)

தோழர் தியாகு

தரவு : தாழி மடல் 33