(தோழர் தியாகு எழுதுகிறார் 216 : கலைமகள் எனும் தொன்மம்-தொடர்ச்சி)

தோழர் தியாகு எழுதுகிறார்
குடியாட்சியமும் கல்வியும்

இனிய அன்பர்களே!

படிக்க வேண்டும்! ஏன் படிக்க வேண்டும்? நல்ல வேலைக்குப் போய்ப் பொருளீட்டுவதற்காகப் படிக்க வேண்டும். படிக்கா விட்டால் மற்றவர்களோடு போட்டியிட்டு முன்னேற முடியாதல்லவா? சுருங்கச் சொல்லின் வாழ்க்கைக்கு அணியமாக வேண்டும் என்பதற்காகவே கல்வி!

இதுதான் கல்வி பற்றிப் பரவலாக நிலவும் நம்பிக்கை. இதை மறுத்த கல்வியாளர் அமெரிக்காவைச் சேர்ந்த அறிஞர் சான் தெவி. இவர் அம்பேத்துகரின் ஆசிரியர். “கல்வி என்பது வாழ்க்கைக்கு அணியமாதல் அன்று. கல்வி என்பது வாழ்க்கையே ஆகும்.” [“Education is not preparation for life; education is life itself.”]

குடியாட்சியமும் கல்வியும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்றார் தெவி. இரண்டுமே தன்-தீர்வுக்கும் தன்-வளர்ச்சிக்கும், பொது நன்மையில் பங்கேற்பதற்கும் இன்றியமையாதவை. அறிவுக் கூர்மையுடனும் அறிவியல் உணர்வுடனும் பொது நன்மையில் பங்கேற்பதற்குக் கல்வி இல்லாமல் முடியாது.

சான் தெவியின் முற்போக்குக் கல்விச் சிந்தனைகளுக்கு நேர் எதிரானதுதான் இந்திய அரசின் புதிய தேசியக் கல்விக் கொள்கை. அது மாணவர்களைச் செயற்கை அறிவு எந்திரங்களாகப் பயிற்றுவிக்க விரும்புகிறது. தனியொரு மாணவர் ஆனாலும், அந்த மாணவரை உறுப்பினராகக் கொண்ட தமிழ்க் குமுகமானாலும் தன்-தீர்வோ தன்-வளர்ச்சியோ பொது நன்மையில் அறிவார்ந்த பங்கோ பெற அது உதவாது. பார்க்கப் போனால் இதற்கு நேரெதிரான விளைவையே அது ஏற்படுத்தும்.

இந்திய அரசின் பிற்போக்கான புதிய தேசியக் கல்விக் கொள்கையை அடியோடு எதிர்ப்பது தவிர தமிழ்மக்களுக்கு வேறு வழியே இல்லை. தமிழகத் திமுக அரசு இந்தக் கொள்கையை எதிர்ப்பது சரியானது. ஆனால் அடியோடு எதிர்க்க வேண்டும், முழுமையாக எதிர்க்க வேண்டும். கொஞ்சம் இப்படி கொஞ்சம் அப்படி என்ற அணுகுமுறை உதவாது. கொஞ்சம் உணவு கொஞ்சம் நஞ்சு என்பது உயிர்க்கிறுதியாகி விடும்.

பிற்போக்கை எதிர்க்க வெறுங்கையால் முடியாது. முற்போக்கை முன்னிறுத்தித்தான் பிற்போக்கை முறியடிக்க முடியும். இந்தியாவுக்கு ஒரு கல்விக் கொள்கை என்பது தன்னளவிலேயே தமிழ்நாட்டின் தன்னாட்சிக்கு எதிரானது. இதற்கு மாற்றாகத் தமிழ்நாட்டுக்கான தனித்தன்மை வாய்ந்த கல்விக் கொள்கை என்பது தமிழ் மாணாக்கருக்கும் தமிழ்நாட்டுக்கும் தன்னாட்சி முன்னேற்றத்தைக் குறிக்கும்.

தமிழக அரசு தமிழ்நாட்டு மக்களுக்குத் தனித்துவமான கல்விக் கொள்கை வகுப்பதில் உறுதியாக இல்லை என்றால், அது உறுதி மீறுகிறது என்று பொருள்.

அரசைச் செய்தவர்கள் மக்களே என்பது உண்மையானால் அரசு செய்யாததைச் செய்ய வைக்கும் பொறுப்பு மக்களுக்குள்ளது. இந்தப் பொறுப்பை நிறைவேற்றும் ஒரு தொடக்க முயற்சிதான் இளைஞர் அரண் நடத்திய கல்வி உரிமை மாநாடு. இப்படிப் பல முயற்சிகள் தேவை என்பதை உணர்ந்திருக்கிறோம். ஒரு விளக்கை ஏற்றினோம்! அதைக் கொண்டு பல விளக்குகள் ஏற்றலாம்!

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 244