(தோழர் தியாகு எழுதுகிறார் 150 : கீழடியும் தென்முடியனூரும் தொடர்ச்சி)
சித்திரம் அல்லேன்
இனிய அன்பர்களே!
எனக்குக் கிடைத்த ஆசிரியர்கள் போல் எல்லாருக்கும் கிடைத்து விட மாட்டார்கள். பள்ளி செல்வதற்கு முன்பே அப்பாதான் ஆசிரியர். வீடுதான் முதல் பள்ளிக்கூடம். மிகவும் சிறு வயதிலேயே கற்கை தொடங்கி விட்டது.
திருவாரூரில் வீட்டருகே இருந்த ‘பாத்திமா கான்வெண்டில்’ சேர்த்த போது எடுத்தவுடனே இரண்டாம் வகுப்பு. பிறகு இரட்டை வகுப்பேற்றம் (double promotion) கொடுத்து நான்காம் வகுப்பில் போட்டார்கள். மடப்பள்ளியில்(கான்வெண்டில்) ஆசிரியர்கள் நிருவாகிகள் பெரும்பாலும் கிறித்துவ அருட்சகோதரிகள்தாம். அப்போது ஒருநாள் மாதாகோயில் நிகழ்ச்சிக்காக மெழுகுவத்தி வாங்கக் காசு கேட்டார்கள். காலணாவோ அரையணாவோ இருக்கலாம். நான் அம்மாவைக் கேட்டேன். அவர்கள் அப்பாவிடம் சொல்லி விட்டதோடு “இதே வேலையாப் போச்சு” என்று விசிறியும் விட்டார்கள்.
அப்பாவுக்கு வந்தது கடுஞ்சீற்றம்! என்னை இழுத்துக் கொண்டுபோய் அருட்பெண்ணிடம்(சிசுட்டரிடம்) நிறுத்தி மா.சா.(டி.சி.) கேட்டுக் கத்தினார்கள். மா.சா.வோடு நந்தவனம் தொடக்கப் பள்ளிக்கு அழைத்துப் போய் நான்காம் வகுப்பில் சேர்த்து விட்டார்கள். நான்காம் வகுப்பு ஆசிரியர் என் பேர்க்காரர்: தியாகராசன். திருவாரூரில் தியாகராசன், அடுத்தபடி தட்சிணாமூர்த்தி அதிகம்.
என் நான்காம் வகுப்பு ஆசிரியர் தியாகராசன்தாம் பிற்காலத்தில் ஆரூரான் என்றும் சின்னக்குத்தூசி என்றும் பெயர் பெற்றார். ஆசிரியர் வரிசையில் உயர்நிலைப் பள்ளியில் பிசி கணேசன், சிவசண்முகம் என்று பலரும் வந்தனர், என்னைச் செதுக்கினர் என்றாலும் நான் எப்போதுமே சின்னக் குத்தூசியைத்தான் என் முதல் ஆசிரியராகக் குறிப்பிட்டு வந்தேன். நீண்ட பல ஆண்டுகளுக்குப் பின் சிறைமீண்டு வந்து சென்னையில் தங்கிய போது எல்லாரிடமும் நான் சின்னக்குத்தூசியின் மாணவன் என்று சொல்லிக் கொண்டிருந்தேன். அப்போது குங்குமத்தில் பாவை சந்திரன் ஆசிரியராக இருந்தார், அப்பாவிடம் படித்தவர். என்னிடம் மூலதனம் தமிழாக்கம் பற்றி நண்பர் வந்தியத்தேவனை அனுப்பிப் பேட்டி எடுத்து வெளியிட்டார்.
அந்தப் பேட்டி பற்றிப் பேசிக்கொண்டிருந்த போதும் சின்னக்குத்தூசி என் ஆசிரியர் என்றேன். இதைச் சொன்ன போது சின்னக் குத்தூசி சொன்னாராம்: “அது அந்தக் காலம். இப்போது அவர்தான் எனக்கு ஆசிரியர் என்று சொல்லுங்கள்.”
பெரியார் திடலில் ஒருமுறை ஆசிரியர் வீரமணியுடன் பேசிக் கொண்டிருந்த போது சின்னக் குத்தூசியைப் பற்றிச் சொன்னேன். வீரமணி சொன்னார்: “நீங்கள் அவருடைய மாணவர். அவர் எங்கள் மாணவர்.” சின்னக்குத்தூசிதான் பெரியார் சுயமரியாதைப் பயிற்சி நிறுவனத்தின் முதல் மாணவர் என்று விளக்கினார்.
சின்னக்குத்தூசி அப்போது முரசொலியில் பணியாற்றிக் கொண்டிருந்தார். சென்னையில் பத்திரிகையாளர்கள் அனைவரும் அவரைப் பெரிதும் மதித்தனர். விகடன் ஆசிரியர் குழுவினருடனும் அவருக்கு நல்ல உறவு என்று கேள்விப்பட்டிருந்தேன். அதனால்தான் அவர் சொல்லித்தான் அவர்கள் என்னை அழைத்திருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டேன். இல்லை, உங்கள் கடிதம்தான் உங்களை எங்களுக்குக் காட்டியது என்று இராவு சொல்லி விட்டார்.
“நீங்கள் எங்கள் இதழில் எழுத வேண்டும், இது ஆசிரியர் (பாலசுப்ரமண்யம்) விருப்பம்” என்றார்.
விகடன் இதழ்களில் அறிவியல் கட்டுரைகள் வருகின்றன. ஆனால் அறிவியல் என்றால் இயற்கை அறிவியல் மட்டும் போதாது. சமூக அறிவியல் அதை விடவும் தேவை. நான் சமூக அறிவியல் எழுதலாம். விடுதலை இயக்கங்களின் வரலாற்றை எழுதினால் நன்றாக வரும்.
ஆனால் அவர்கள் வேறு குறி வைத்திருந்தார்கள். “முதலில் உங்கள் சிறைவாழ்க்கை பற்றி எழுதினால் நன்றாக இருக்கும். பிறகு மற்றதை எழுதலாம்” என்றனர். சிறை வாழ்க்கை பற்றி எழுதுவதில் எனக்கு ஒரு தயக்கம் இருந்தது. சிறையில் நாங்கள் தொடங்கிய இயக்கம் தொடர்ந்து கொண்டிருந்தது. அது பற்றி வெளிப்படையாக எழுதும் நேரம் இன்னும் வரவில்லை என்பது என் பார்வையாக இருந்தது.
இதற்கு முன்பே தராசு சியாமும் நக்கீரன் கோபாலும் என்னைச் சிறை வாழ்க்கை பற்றி எழுதக் கேட்டதுண்டு. அவர்கள் முதலில் என் வழக்கைப் பற்றி எழுத வேண்டும் என்றனர். குறிப்பாக அழித்தொழிப்பு நடவடிக்கையிலிருந்து தொடங்கினால் நன்றாக இருக்கும் என்றனர்.
நான் அதை ஏற்கவில்லை. அழித்தொழிப்பு நாங்கள் செய்த புரட்சி என்று பெருமை கொள்ளும் நிலையில் நாங்கள் (தோழர் இலெனினும் நானும்) இல்லை. அது மோசமான அரசியல் பிழை என்ற முடிவுக்கு வந்திருந்தோம். அதனால் புரட்சிக்கு நன்மை இல்லை என்பதோடு சில கேடுகளும் நேரிட்டிருந்தன. அது பற்றிப் பகுத்தாய்ந்து எழுதுவதானாலும் அதற்குரிய நேரமும் இடமும் இதுவன்று.
என்னை ஆசிரியரிடம் அழைத்துச் சென்று உட்கார வைத்தனர். அவர் சொன்னார்: தியாகு, நீங்கள் தோழர்தானே? சூவியில் எழுதும் போதும் நீங்கள் தோழராகவே எழுதலாம், எங்களுக்காக நீங்கள் எதையும் மாற்றிக் கொள்ள வேண்டாம். எதை எழுதலாம் எதை எழுத வேண்டா என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். நாங்கள் குறுக்கிட மாட்டோம். எங்களை நீங்கள் ஏற்கச்செய்ய வேண்டியதில்லை. உங்கள் வாசகரை நீங்கள் ஏற்கச் செய்தால்போதும்.
என்னைச் சிறைக்கு அனுப்பிய வழக்கு பற்றியோ என் சிறை வாழ்க்கை பற்றியோ இப்போதைக்கு எழுத மாட்டேன். சிறையில் நான் சந்தித்த மனிதர்களைப் பற்றி மட்டும் எழுதுவேன். சுவருக்குள் சித்திரங்கள் என்ற பெயரையும் நானே கொடுத்தேன். சித்திரங்கள் தீட்டுவேன், நானே சித்திரமாக மாட்டேன். எல்லாவற்றையும் பாலசுப்ரமண்யம் ஏற்றுக் கொண்டு ஓர் அறிமுக உரை எழுதிக் கொண்டுவரச் சொன்னார்.
அடுத்த ஓரிரு நாளில் எழுதி எடுத்துப் போனேன்.
“ஓ, சூவிக்கென்று எழுதி வந்தீர்களா? உங்கள் பத்திரிகையில் இப்படித்தான் எழுதுவீர்களா? உங்கள் எழுத்தில் வருக்கச் சீற்றம் இல்லையே? விகடனையும் என்னையும் மறந்து விட்டு எழுதி வாருங்கள்.”
நான் எழுதிய எதையும் அவர் நீக்கியதோ மாற்றியதோ இல்லை. மாற்றம் வேண்டுமென நினைத்தால் எனக்கே சொல்லியனுப்புவர். ஆனால் முடிவை என்னிடமே விட்டு விடுவார். நல்ல ஆலோசனைகள் சொல்வார்.
சுவருக்குள் சித்திரங்கள் முதற்சில பகுதிகள் எல்லாம் சித்திரங்களே! மாணிக்கம் செட்டியார்! சுப்பையா கவுண்டர்! வரதராச ஐயர்! எம்.ஆர். இராதா கூட வருவார். என்னைப் பற்றிக் கொஞ்சம் கொஞ்சம்! இந்தப் போக்கை மாற்றி என்னை உள்ளே இழுத்து விட்டவர் ஒரு நாள் இராவு அறையில் என்னைச் சந்தித்த எழுத்தாளர் திரு சா. கந்தசாமி! எப்படி? நாளை சொல்கிறேன்.
தொடரும்
தோழர் தியாகு
தாழி மடல் 121
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக