(தோழர் தியாகு எழுதுகிறார் 136 : குண்டர்களால் தாக்கப்பட்ட தமிழ்நாசரின் பேச்சு தொடர்ச்சி)

பாசிச எதிர்ப்பின் பன்னாட்டுப் பரிமாணம்

இனிய அன்பர்களே!

குசராத்தில் 2002ஆம் ஆண்டு நரேந்திர மோதி ஆட்சியில் நடந்தது என்ன? மதக் கலவரமா? இல்லை. தற்செயலாக வெடித்த வன்முறை நிகழ்ச்சிகளா? இல்லை.

உண்மையில் நடந்தது இசுலாமிய மக்கள் மீதான இனக் கொலைதிட்டமிட்ட இனக் கொலை. நரேந்திர மோதி ஆட்சிப் பொறுப்பில் இருந்து வழிநடத்திய இனக் கொலை என்பதை நாம் முன்பே அறிந்து வைத்துள்ளோம், பல முறை கூறியுள்ளோம் என்றாலும் பி.ஒ.நி.(பிபிசி)யின் மோதி வினா ஆவணப் படம் மீண்டும் ஒரு முறை தெளிவாகக் காட்டியுள்ளது.

குசராத்து இசுலாமியர் இனக் கொலைக்கு நீதி பெற வேண்டும். இந்த இனக் கொலையின் பகுதிகளான தனித்தனி வழக்குகளில் மிகச் சிலவற்றில் நீதிமன்றங்களில் குற்றத் தீர்ப்பு கிடைத்துள்ளது. சில இடைக்கால வெற்றிகளும் கிடைத்துள்ளன. பில்கிசு பானு வழக்கு ஓர் எடுத்துக்காட்டு. ஆனால் இந்த வழக்குகளிலும் கூட கொலை, கொலை முயற்சி, தீவைப்பு, பாலியல் வல்லுறவு, சதி போன்றவையே  குற்றச்சாட்டுகள். இனக்கொலைக் குற்றச்சாட்டே இல்லை. ஏன்? ஏனென்றால் இந்தியாவின் குற்றவியல் சட்டங்களில் அப்படி ஒரு வகைக் குற்றமே இடம்பெற வில்லை.

அப்படியானால் இனக் கொலை குற்றமே இல்லையா? இந்தியச் சட்டங்களின் படி இல்லை. பன்னாட்டுச் சட்டங்களின் படி மட்டுமே அது குற்றம். பன்னாட்டுச் சட்டங்களின் படியான குற்றங்கள் பன்னாட்டுக் குற்றங்கள் எனப்படுகின்றன. போர்க் குற்றம், மனித குலத்துக்கு எதிரான குற்றம் போல் இனக்கொலை ஒரு பன்னாட்டுக் குற்றம். ஒரு நாட்டுக்குள் நடந்தாலும் பன்னாட்டுக் குற்றம். பன்னாட்டுக் குற்றங்களை வினவுவதற்கும், புலனாய்வு செய்வதற்கும், வழக்குத் தொடுப்பதற்கும் பன்னாட்டுப் பொறிமுறைகள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தி நரேந்திர மோதி வகையறாவை இனக் கொலைக் குற்றத்துக்காகக் கூண்டிலேற்ற விரும்பினால் பன்னாட்டு விசாரணை கோர வேண்டும். இந்தக் கோரிக்கையும் இதற்கான போராட்டமும் ஆர்எஸ்எஸ் தலைமையிலான மோதியின் பாசிசத்துக்கு எதிரான பன்னாட்டு ஆற்றல்களை அணிதிரட்ட உதவும்.

மோதியின் பாசிசம் குசராத்து அளவிலோ இந்திய அளவிலோ மட்டுமல்ல, பன்னாட்டு அளவிலும் விழுது விட்டு வேர் பரப்பி நிற்கிறது. பாசிச எதிர்ப்பு ஆற்றல்களும் தமது செயற்களம் தமிழ்நாடாகவே இருந்தாலும் இந்திய அளவிலும் உலக அளவிலும் பன்னாட்டுத் தோழமைகளைக் கண்டு அணிசேராமல் காவியை வீழ்த்த முடியாது. குசரத்து இசுலாமியர் இனக்கொலைக்குப் பன்னாட்டு வினவல் என்ற கோரிக்கை இத்திசையில் பெரும்பயனுடைத்து.

ஈழத் தமிழர் இனவழிப்புக்கு நீதிபெறப் பன்னாட்டுப் புலனாய்வு தேவை என்பதை அனைவரும் – சிங்களப் பேரினவாத அரசும் அதன் கூட்டாளிகளும் தவிர – ஏற்றுக் கொள்கிறோம். ஈழத்து நியாயம்தான் குசராத்துக்கும்!

இசுலாமியர் இனவழிப்புக்கும் அதானி-மோதி ஒட்டுமுதலியக் கூட்டின் பெருவீக்கத்துக்குமான தொடர்பைப் புரிந்து கொள்ள வேண்டும். அதானியின் மோசடிகள் மோதியின் அரவணைப்பில் நடந்தன, அதானியின் கொள்ளை மோதியின் அரசியல் வெற்றிகளுக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. இசுலாமியர் இனக் கொலையும் அதானியின் பகல் கொள்ளையும் ஒரே பாசிச நாணயத்தின் இரு பக்கங்களே. கொலையும் கொள்ளையும் உலக மயத்தின் நச்சு விளைச்சல்களே. இன்றைய உலகில் சுரண்டலும் அநீதியும் உலக மயமாகும் போது உரிமைக்கும் நீதிக்குமான போராட்டமும் பன்னாட்டுப் பரிமாணங்கள் பெறத்தான் வேண்டும்.

(தொடரும்)
தோழர் தியாகுதாழி மடல் 108