(தோழர் தியாகு எழுதுகிறார் 119 : வள்ளலார் சொல்கிறார்-தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

ஈழத் தமிழர் இனவழிப்புக்கு சிங்களப் பேரினவாத அரசு காரணம், அதற்கு உடந்தையாக இருந்த இந்திய அரசு காரணம் என்ற உண்மையை மறைத்துத் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது பழிபோடும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இப்படிப் பழி சுமத்துகின்றவர்கள் எடுத்துக் காட்டும் ஒரு முகன்மைச் சான்று 2005ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற பொதுத் தேர்தல் ஆகும். இந்தத் தேர்தலில் இரணில் விக்கிரமசிங்காவும் மகிந்த இராசபட்சேவும் போட்டியிட்டார்கள். இந்தத் தேர்தலை விடுதலைப் புலிகளின் வேண்டுகோளை ஏற்றுத் தமிழ் மக்கள் புறக்கணித்தார்கள். தேர்தல் முடிவில் இராசபட்சே வென்றார், இரணில் தோற்றார்.
“இந்தத் தேர்தலை விடுதலைப் புலிகள் புறக்கணிக்காமல் இரணிலை ஆதரித்திருந்தால் இராசபட்சே தோற்றுப் போயிருப்பார், இனவழிப்புப் போர் நடக்காமல் இருந்திருக்கும்” என்பதுதான் புலிகள் மீது பழிபோடுவோர் சொல்லும் கணக்கு. விடுதலைப் புலிகளின் இந்தத் தேர்தல் புறக்கணிப்புக்கு உள்நோக்கம் கற்பித்து, அவர்கள் மீது சூழ்ச்சிக் குற்றம் சுமத்தி இந்து ஆங்கில நாளேடு ஆசிரியவுரையே தீட்டியது.
உடனடியாக இதை மறுத்து தமிழர் கண்ணோட்டம் 2005 திசம்பர் இதழில் “இரு தேசங்கள் ஒரு தேர்தல்- தமிழர் புறக்கணிப்பு” என்ற தலைப்பில் கட்டுரை எழுதினேன். 2009 முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்குப் பின் இரணில் இதே பழியைச் சுமத்தினார். “புலிகள் 2005ஆம் ஆண்டு தேர்தலைப் புறக்கணிக்கவில்லை என்றால் இராசபட்சே வென்றிருக்க முடியாது, போர் தவிர்க்கப்பட்டிருக்கும். புலிகள் செய்த தவறினால்தான் இறுதிக் கட்டப் போர் நிகழ்ந்தது” என்ற பொருள்பட அவர் பல ஊடகங்களுக்குப் பேட்டியளித்தார்.
நக்கீரன் ஏட்டிலும் அவரது பேட்டி வெளிவந்தது. இனவழிப்புப் போரைத் தடுக்கத் தவறியதோடு அப்போருக்கான பழியில் ஒரு பகுதியையும் சுமக்க வேண்டிய நிலையில் இருந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியும் புலிகள் மீது பழி போட இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டார்.
“இரணிலே சொல்லி விட்டார், புலிகள் தவறு செய்து விட்டார்கள்” என்று சொல்லித் தன் மீதான பழியைத் துடைத்துக் கொள்ள முயன்றார்.
2005 தேர்தலில் புலிகள் தவறு செய்து விட்டார்கள் என்ற குற்றாய்வுக்குக் கண்காதுமூக்கு வைத்து, அவர்கள் இராசபட்சேக்கு வாக்களிக்கச் சொன்னார்கள், அதற்குக் கைம்மாறாக உதவிகள் பெற்றுக் கொண்டார்கள் என்று ‘புலிக் கடியர்கள்’ அவதூறு பரப்பவும் துணிந்து விட்டார்கள். ‘காக்கைச் சிறகினிலே‘ கட்டுரையாளரும் இதே பொய்யைச் சொல்வதாக அன்பர் சிபி நேற்று எழுதியிருந்தார். இந்த அவதூறுக்கு மறுப்பாக தமிழ்க் குரல் வலையொளிக்கு நான் கொடுத்த செவ்வியின் இணைப்பை நேற்றுக் கொடுத்திருந்தேன்.
இந்தப் பேச்சு தொடங்கிய காலத்திலேயே தமிழர் கண்ணோட்டம் 2005 திசம்பர் இதழில் நான் எழுதிய கட்டுரை இதோ உங்கள் பார்வைக்கு! இதற்கு மேலும் யாருக்காவது குழப்பம் இருந்தால் எழுதுங்கள், தொடர்ந்து உரையாடுவோம்.

இரு தேசங்கள் ஒரு தேர்தல் தமிழர் புறக்கணிப்பு 1/2


இலங்கையின் ஏழாவது குடியரசுத் தலைவராக மகிந்த இராசபட்சர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இலங்கை சுதந்திரக் கட்சியின் வேட்பாளரான அவருக்கு 50.29 விழுக்காடு வாக்குகள் கிடைத்துள்ளன. ஐக்கியத் தேசியக் கட்சியின் வேட்பாளர் இரணில் விக்கிரமசிங்கரைக் காட்டிலும் இரண்டு விழுக்காட்டுக்கும் குறைவான பெரும்பான்மையே இது.
சிங்களத் தேசத்தின் அரசதிகாரத்துக்காக இரு சிங்களத் தலைவர்களுக்கு இடையே, இரு சிங்களக் கட்சிகளுக்கு இடையே நடைபெற்ற இத்தேர்தலில் சிங்கள மக்கள் பெருவாரியாக வாக்களித்தார்கள். இயல்பாகவே தமிழீழ மக்கள் யாருக்கும் வாக்களிக்காமல் தேர்தலைப் புறக்கணித்து விட்டார்கள். எடுத்துக்காட்டாக யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஏழு இலக்கம் பதிவு பெற்ற வாக்காளர்களில் 8,525 பேர் மட்டுமே வாக்களித்தார்கள்.

தமிழர்கள் இப்படித் தேர்தலைப் புறக்கணிக்காமல் இரணில் விக்கிரமசிங்கருக்கு வாக்களித்திருந்தால் அவர் வெற்றி பெற்றிருப்பார் என்பது ஓர் எளிய கணக்கு. இந்தக் கணக்கை வைத்துக் கொண்டு இந்து ஆங்கில நாளேடு (2005 நவம்பர் 19 ஆசிரியவுரை) தமிழீழ விடுதலைப் புலிகள் மீது சூழ்ச்சிக் குற்றம் சுமத்துகிறது.
குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இராசபட்சருக்கு விடுதலைப் புலிகள் விடுத்துள்ள சவாலாம் இது! எப்படி? சிங்களக் கடும்போக்கு அரசியல் வளர்வதே தனக்கு நல்லது என்று புலிப்படை நினைக்கிறதாம்! அதுவே இலங்கையைப் பிரித்து ஈழம் அமைக்கும் திட்டத்தை நியாயப்படுத்துவதற்கு உதவுமாம்!
இந்து சொல்கிறது:
“புதிதாகத் தேர்வு பெற்றுள்ள குடியரசுத் தலைவரும் அவருக்கு நெருங்கிய கூட்டாளியான சனதா விமுக்தி பெரமுனா (சே.வி.பி.) அமைப்பினரும் 2002இல் ஏற்பட்ட போர்நிறுத்தத்தை எதிர்க்கின்றனர். (நாட்டிற்குத் தெரியாமல் அவசரகோலமாய்ச் செய்த நகர்வு அது என்கின்றனர்.) மேலும் கூட்டாட்சியே சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வாகும் என்ற கருத்தையும் பொதுவாக எதிர்த்துப் பேசுகின்றனர். அவர்களின் இந்த நிலைப்பாட்டைப் பயன்படுத்தி த.ஈ.வி.பு.(எல்.டி.டி.இ.) இந்தக் கொடிய சூழ்ச்சித் திட்டத்தை வகுத்துள்ளது.”
கடந்த 2001 இறுதியில் புலிப்படைதான் போர்நிறுத்தம் அறிவித்தது. போரில் புலிப்படையை வெல்ல முடியாத நிலையிலும், சிங்கள மக்களே அமைதிக்குத் தந்த அழுத்தத்தாலும், உலக அரங்கில் நிலவிய பொதுக்கருத்தின் நெருக்குதலாலும் சிங்கள அரசும் வேறு வழியின்றிப் போர்நிறுத்தத்துக்கு இணங்கிற்று. சற்றொப்ப நான்காண்டு காலமாக எத்தனையோ ஆத்திரமூட்டும் நிகழ்ச்சிகளுக்கிடையிலும் புலிப்படைதான் போர்நிறுத்தத்தை நேர்மையாகவும் உறுதியாகவும் கடைப்பிடித்து வருகிறது. புலிப்படைக்கும் தமிழீழ மக்களுக்கும் இரண்டகம் செய்து ஓடிப்போன கும்பலை (இந்துவின் மொழியில் எல்.டி.டி.இ. கிழக்குப் பிரிவு) சிங்கள அரசின் இராணுவமும் உளவுத்துறையும் பாதுகாத்து வளர்த்து வருவது உறுதியான பிறகும் தமிழீழ மக்களின் சார்பில் புலிப்படை அமைதி காத்தே வருகிறது.
ஆனால் அமைதிக்காகவே அமைதி என்பதன்று. தமிழீழ மக்கள் மீதான தேசிய ஒடுக்குமுறைக்கு முடிவு கட்டும் வகையில் தேசிய இனச் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காணாமல் உண்மையான உறுதியான அமைதிக்கு வாய்ப்பில்லை. இந்த நோக்கில் அப்போதைய தலைமையமைச்சர் இரணில் விக்கிரமசிங்கரோ, அவரைத் தள்ளிவிட்டு முழுஅதிகாரத்தையும் கையில் எடுத்துக் கொண்ட அதிபர் சந்திரிகாவோ உருப்படியான (தமிழ் மக்கள் நம்பி ஏற்கும் படியான) எந்த முன்மொழிவையும் தரவில்லை என்பதே உண்மை. அடிப்படைத் தீர்வு, நிரந்தரத் தீர்வு என்பதெல்லாம் இருக்கட்டும், முறையான இடைக்காலத் தீர்வு ஒன்றைக் கூட அவர்களால் முன்மொழிய இயலவில்லை.

(தொடரும்)
தோழர் தியாகு
தரவு : தாழி மடல்
 94