(தோழர் தியாகு எழுதுகிறார் 62 தொடர்ச்சி)

சமந்தா எழுதுகிறார்:

1.   இந்திய மாறுதலுக்கான தேசிய நிறுவனத்தின் (NITI) பரிந்துரை

வேளாண் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் வேளாண் அல்லாத பிற துறைகளின் தொழிலாளர்கள் போன்ற பிற நலிந்த பிரிவினரையும் உள்ளடக்கித் தலைமை யமைச்சர்,உழவர் திட்டத்தை அனைவருக்குமான அடிப்படை வருமானத்திற்கான (UBI) திட்டமாக மத்திய அரசு மாற்ற வேண்டும் என்றும், பின்னர் பிற மானியங்களையும் இதனுடன் இணைத்துக் கொள்ளலாம் என்றும்  இ.மா.தே.நி.உறுப்பினர் இரமேசு சந்து பரிந்துரைத்துள்ளார். இது வரவேற்கத்தக்கது என்ற போதும் போதாக் குறையானது. ஆண்டிற்கு 6,000 உரூபாய் / மாதத்திற்கு 500 உரூபாயை அடிப்படை வருமானம் என்று குறிப்பிடுவது தகுமா? அதன் மூலம் வறுமையை ஒழிக்கலாம் என்று கருதினால் அஃது ஓர் இழிய நகைச்சுவையாகவே, கேலிக் கூத்தாகவே இருக்கும்.  இத்தகைய அனைவருக்குமான அடிப்படை வருமானத்திற்கான (UBI) திட்டத்துடன் பிற நல்கைகளையும் இணைத்துக் கொள்ளலாம் எனும் போதுதான் எச்சரிக்கையாக இருக்க வேண்டியுள்ளது. உணவு மானியத்திற்கும், பொது வழங்கல் முறையில் உணவு தானியங்கள் வழங்கும் திட்டத்திற்கும் மூடுவிழா நடத்தவுள்ளார்களா? என்ற ஐயம் ஏற்படுகிறது. அவ்வாறு இருப்பின் அதனால் வறுமை மேலும் அதிகரிக்குமே தவிர குறையாது.

2022 திசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்ட த.அ.ஏ.உ.பா.தி.( PMGKAY) (பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோசனா என்னும் மூலப்பெயரைச் சொன்னாலேயே மூச்சு முட்டுதே.)   திட்டத்தின் கீழ் உணவு தானியங்கள் வழங்குவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும்.  அதற்கு மாற்றாக இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட தானியங்களை வெளிச் சந்தையில் விற்று தானியங்களின் விலையைக் குறைக்க வேண்டும் என்று இ. மா.தே.நி.உறுப்பினர் இரமேசு சந்து  பரிந்துரைத்துள்ளார்.

+ இத்திட்டம் மகுடை(கோவிட்டு) தாக்கத்தால் வேளாண்மை அல்லாத துறைகளின் வளர்ச்சியில் தேக்கநிலை ஏற்பட்ட போது பாதிக்கப்பட்ட மக்களில் விளிம்பு நிலையில் உள்ளவர்களின் துயர்தணிப்பை நோக்கமாகக் கொண்டிருந்தது என்றும்,

+ இயல்பு நிலை மீண்டுள்ளதால் இலவசப் பொது வழங்கல்-பகிர்வு திட்டத்திற்கான நிதி ஆதாரங்களை இன்னுஞ் சிறந்த நோக்கங்களுக்குப் பயன்படுத்தலாம் என்றும்,

+ பொருளாதார நடவடிக்கைகள் இயல்பு நிலைக்குத் திரும்பிய பின்னும் இத்திட்டத்தைத் தொடர்வதில் எந்த நியாயமும் இல்லை என்றும்,

+ இந்தத்  திட்டத்தைச் செயல்படுத்த மாதந்தோறும் ஒதுக்கப்படும் 4 பேராயிரம் பார( மில்லியன் டன்) அரிசி, கோதுமையைப் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும் இந்திய சேம வங்கியின் மீதுள்ள பணக் கொள்கையை மேலும் கடுமையாக்குவதற்கான அழுத்தத்தைக் குறைக்கவும் ஒதுக்க வேண்டும் என்றும்  

இந்த மகானுபாவர் (இரமேசு சந்து ) பரிந்துரைத்துள்ளார்.

மகுடை(கோவிட்டு) தாக்கம், வேலையின்மை, ஊதியக் குறைவு, உயரும் பணவீக்கம் ஆகியவற்றால் வீழ்ந்த மக்களின் வாங்கும் திறன் இன்னும் மீட்கப்படாத நிலையில் இத்திட்டத்தை நிறுத்துமாறு பரிந்துரைப்பது கடும் கண்டனத்திற்குரியது. உலகப் பட்டினிக் குறியீட்டில் இந்தியாவின் கடைநிலை என்பதன் பொருள் என்ன? அனைவருக்கும் பொது வழங்கல் முறையில் உணவு தானியங்களும்  இன்றியமையாப் பண்டங்களும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதுதான். அனைவருக்குமான அடிப்படை ஊதியம் வழங்க வேண்டும் இந்த இரமேசு சந்து  பரிந்துரைத்த போதே பொது வழங்கலுக்கு மூடுவிழா நடத்துவதற்கான ஏற்பாடு நிகழ்ச்சி நிரலில் இருக்கும் என மேலே எச்சரித்திருந்தது சரிதான்..

2.   பணவீக்கம்

ந்தியாவின் சில்லறைப் பணவீக்கம் எனப்படும் நுகர்வோர் விலைக் குறியீடு நவம்பரில் 5.88% உயர்ந்துள்ளது; பணவீக்கம் சனவரி யிலிருந்து தொடர்ந்து 10 மாதமாகச் சேம வங்கியின் உச்ச வரம்பான 6 விழுக்காட்டிற்கு மேல் இருந்து வந்துள்ள நிலையில் நவம்பர் மாதத்தில் 5.88 விழுக்காடாகக்குறைந்துள்ளது. சில்லறைப் பணவீக்கம் 2022 அட்டோபரில் 6.77 விழுக்காடாகவும், கடந்த ஆண்டு நவம்பரில் 4.91 விழுக்காடாகவும் இருந்துள்ளது. உணவுப் பொருட்களின் பணவீக்கம் 4.67 விழுக்காடு உயர்ந்துள்ளது. அட்டோபர் மாதத்தில் இது 7.01 விழுக்காடாக இருந்தது.

நவம்பரில் தானியங்களின் விலைவாசி 12.96% உயர்ந்துள்ளது. பால் பொருட்களின் விலைவாசி 8.16% உயர்ந்துள்ளது. பழங்களின் விலைவாசி 2.62% உயர்ந்துள்ளது. காய்கறிகளின் விலைவாசி 8.08% குறைந்துள்ளது. பருப்பு வகைகளின் விலைவாசி 3.15% உயர்ந்துள்ளது. வாசனைப் பொருட்களின் விலைவாசி 19.52% உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் பணவீக்கம் 5.9% உயர்ந்துள்ளது. இந்திய மாநிலங்களிலேயே அதிக அளவாக தெலங்கானாவில் பணவீக்கம் 7.89% உயர்ந்துள்ளது.

3. அட்டோபரில் தொழில்துறை வளர்ச்சி

ட்டோபர்  மாதத்திற்கான தொழில் துறை  உற்பத்திக்  குறியீடு  புள்ளியியல் அமைச்சகத்தால் வெளியிடப் பட்டுள்ளது. தொழில் துறை உற்பத்திக் குறியீடு அட்டோபர் மாதத்தில் 4 விழுக்காடு குறுக்க மடைந்துள்ளது. சென்ற ஆண்டு செட்டம்பரில் 4.2% வளர்ச்சியடைந்திருந்தது. அட்டோபரில்  சுரங்கத் துறையின் உற்பத்தி 2.5% வளர்ச்சியடைந்துள்ளது. உற்பத்தித் துறை 5.6% குறுக்கமடைந்துள்ளது. மின்சார உற்பத்தி 1.2% உயர்ந்துள்ளது. அட்டோபரில் முதன்மைப் பொருட்களின் உற்பத்தி 2% உயர்ந்துள்ளது. மூலதனப் பொருட்களின் உற்பத்தி 2.3% குறைந்துள்ளது. இடைநிலைப் பொருட்களின் உற்பத்தி 2.8% குறைந்துள்ளது. உள்கட்டமைப்பு, கட்டுமானப் பொருட்களின் உற்பத்தி 1% உயர்ந்துள்ளது. விரைவில் நுகரக்கூடிய பொருட்களின் ஆக்கம் 13.4% குறைந்துள்ளது. நீடித்த நுகர்வுப் பொருட்களின் ஆக்கம் 15.3% குறுக்கமடைந்துள்ளது.

இந்தத் தரவுகள் அட்டோபரில் தொழில்துறை, குறிப்பாகச் செய்பொருளாக்கத்  துறை (manufacturing sector) தேக்கநிலையில் இருப்பதையே காட்டுகின்றன.

+++++++

அன்பர் ஆசுபான் சோசுவா எழுகிறார்:

தாங்கள் அனுப்பும் தாழி மடல்களுக்கு மிகவும் நன்றி. என் அன்பு. என் பெயர் ஆசுபான். நான் ஒரு திருச்சபை போதகர். எல்லாம் வல்ல இறை அருளாலும் இயற்கையின் அன்பிலும் நூறாண்டு கடந்து நீங்கள் வாழ வாழ்த்துகிறேன். வயதில் சிறியவன். உங்களுக்காக இறையிடம் இறைஞ்சுகிறேன்.

நன்றிங்க அன்பரே! உங்கள் அன்புக்காகவும் வாழ்த்துக்காகவும்!

(தொடரும்)

தோழர் தியாகு

தரவு : தாழி மடல் 38