(தோழர் தியாகு எழுதுகிறார் 45 தொடர்ச்சி)

சொல்லடிப்போம் வாங்க! (6)

பொன்முருகு கவிமுருகு எழுதுகிறார்:

இயம்இசம்இயல் எல்லாமே கொள்கை அல்லது தத்துவம்  என்பதற்கான சொல்லாட்சிதானே தோழர்?

தாராளியம் என்பது எப்படி அமைப்பையும்தத்துவத்தையும் குறிக்கிறதுஎன்பதை விளக்கப்படுத்துங்கள்.

இசம் என்று எழுதுவது ism என்று ஆங்கிலத்தில் சொல்வதன் ஒலிப்பெயர்ப்பு. இயல் என்பது அமைப்பாகவும் இருக்கலாம், கொள்கையாகவும் இருக்கலாம். அரசியல் (politics), பொருளியல் (economics), புவியியல் (geography) என்னும் சொற்கள் இடம் பொருள் ஏவலைப் பொறுத்து வாழ்க்கைத் துறைகளையோ அறிவுத் துறைகளையோ குறிக்கும்.

இசம் என்பதற்கு மாற்றாகச் சிலர்  இயலைப் பயன்படுத்துகின்றனர். காட்டாகப், பெரியாரியல் என்பது பெரியாரியம் என்ற பொருளில் ஆளப்படுகிறது. நுட்பமாகப் பார்த்தால் இரண்டுக்கும் வேறுபாடுள்ளது. Marxism என்பது மார்க்குசியம். இது மார்க்குசியக் கொள்கையமைப்பைக் குறிக்கும். இது மார்க்குசிய மெய்யியல், மார்க்குசியப் பொருளியல், மார்க்குசிய அரசியல் ஆகிய மூன்று கூறுகளாலானது. ஆனால் Marxology வேறு. இதை மார்க்குசியல் எனலாம். இது மார்க்குசைப் பற்றிய ஆய்வுத்  துறை. மார்க்குசியம் மார்க்குசின் ஆய்விலிருந்து கிடைத்தது. மார்க்குசியல் மார்க்குசைப் பற்றிய ஆய்விலிருந்து கிடைத்தது. Geography புவியியலைக் குறிக்கும்.  ஆனால் historiography வரலாற்றெழுதியல் ஆகும். History வேறு, historiography வேறு. சிலர் இதனை வரலாற்றியல் என்று சொல்வோருண்டு. வரலாறு என்றால் வந்த வழி. வரலாறு எழுதும் முறை வரலாற்றியல் அல்லது வரலாற்றெழுதியல் ஆகும்.

இயம் என்பது இசம் என்பதன் தமிழ் வடிவமாக இருக்க வேண்டியதில்லை, இயைபு (composition), இயல்பு (nature) என்பவை தூய தமிழ்ச் சொற்கள். இயைதல் என்பதும் தமிழே. எனவே இயைந்து அமையும் அமைப்பு இயம் என்ற பின்னொட்டைத் தருகிறது. இது இடம் பொருள் ஏவலைப் பொறுத்து கருத்தமைப்பாகவும் இருக்கலாம். குமுக அமைப்பாகவும் இருக்கலாம்.

முதலியம் (முதலாளியம்) என்பது முதல்சார் கருத்தமைப்பாகவும் இருக்கலாம். முதல்சார் பொருளாக்க அமைப்பாகவும் இருக்கலாம். Liberalism என்பதும் அப்படித்தான். தமிழில் தாராளியம் அல்லது தாராளவியம் என்பது இரண்டு பொருளிலும் பயன்படும். பொருள் (அருத்தம்) என்பது மட்டுமல்ல, பொருட்சாயல் (shade அல்லது அருத்தச் சாயல்) என்ற ஒன்றும் உண்டு. Liberalism என்பது இரு பொருட்சாயல்கள் கொண்டது என்றால், தாராளியம் (தாராளவியம்) இடம் பொருள் ஏவலைப் பொறுத்து இரண்டில் எந்தச் சாயலையும் குறிக்கலாம். ஆனால் ‘தராளவாதம்’ ஒரு பொருளாக்க முறைமை என்ற சாயலைக் காட்டிலும் ஒரு கருத்தியல் என்ற சாயலையே கூடுதலாகச் சுட்டுவதாக நினைக்கிறேன். நவ-தாராளவாதம், புதுத் தாராளியம் இரண்டையும் சொல்லிப் பாருங்கள். தமிழ் நாவிற்கு எது பொருத்தம்? என்று எண்ணிப் பாருங்கள்.

Ism என்பது செயலை அல்லது தொழிலைக் குறிக்கும் இடங்களும் உண்டு. காட்டாக, terrorism, journalism.

சொல்லாக்கம் என்பது சுவையான விளையாட்டு. பள்ளிப் பருவத்தில் விளையாட்டுகளில் பங்கேற்க முடியாத ஏக்கம் எனக்குண்டு. மாற்றாக அப்பா எனக்குச் சொல்லிக் கொடுத்த விளையாட்டு சொல் விளையாட்டு. Concise Oxford Dictionary  மொத்தமான புத்தகத்தைக் கையில் கொடுத்து சொல்- அதன் சமன் – சமனின் சமன் என்று தேடச் சொல்வார். READERS DIGESTஇல் சுவையான ஒரு பகுதி சொல் விளையாட்டு (WORDPLAY). ஆங்கில நாளேடுகளின் cross words பக்கம் செல்ல நேரமில்லை.

இரா. கிருட்டிணய்யாவோடு ஒருசில சொல்லாக்கங்கள் தொடர்பாக நிறைய சமர் செய்திருக்கிறேன். அவர் சொல்வார்: சொற்கள் நம் குழந்தைகள், விட்டுக் கொடுக்க முடியாது அல்லவா?

ஒரு சொல், அதற்கு ஒரு பொருள் என்று முடிவாக அமைந்து விட்டால், சொல்லாக்கத்தில் சிக்கலே இருக்காது. ஆனால் உலகம் (வாழ்க்கை)  சிக்கலானதாக இருப்பதால் உலகை விளக்கப்படுத்தும் சொல்லாக்கமும் சிக்கலானதாகிறது. பொருட்களின் பல்வகைமைக்கு எல்லையில்லை என்பதால்,  சொற்கள், அவற்றின் பொருட்கள், பொருட்சாயல்களின் பல்வகைமைக்கும் எல்லையில்லை.

வாழ்க்கையிலிருந்தும் இலக்கியத்திலிருந்தும் நம் அறிவுத் தேவைகளை நிறைவு செய்வதற்கான சொற்களைப் பெற முடியும். அவை போதாத போது நாமே நம் மொழியின் இலக்கணத்துக்கும் ஒலியமைதிக்கும் இசைவாகச் சொல்லடிக்கலாம். வேறு வழியில்லாத போது, அயல்மொழிச் சொற்களை நம் மொழியின் ஒலியமைதிக்குப் பெயர்த்தும் பயன்படுத்தலாம்.

பொன்முருகு கவின்முருகு எழுதுகிறார்:

குற்றாய்வு குறித்த விளக்கத்திற்கு நன்றி தோழர்.”

நல்லது. குற்றம் என்பது கடுமையாக இருப்பதால் வேறு மென்மையான சொல்லடிக்க முயலலாம் என்று தாழி அன்பர் தமிழ்க் காப்பர் இலக்குவனார் திருவள்ளுவன் சொல்கிறார். சரி, சிந்திப்போம்.

தாராளவியம் என்பதற்குச் சிபி சொல்லும் இலக்கண விளக்கம் சரியானது என்கிறார் இலக்குவனார் திருவள்ளுவன்.

தாராளம் + இயம் தாராளவியம்தான். இதை தாராள் + இயம் எனக் கொண்டால் மட்டுமே தாராளியம் என முடியும். தாராள இயம், தாராள் இயம் ஆகுமா? ஆழக் கடல் ஆழ்கடல் ஆவது போல்!

தாராளிகம் என்று சொல்லாய்வறிஞர் அருளியார் சொல்வதையும் கருத்தில் கொள்வோம்.

இந்த உரையாடல் தொடரும்.

சத்தியசீலன் கேட்கிறார்:    

தாராளவாதம் அல்லது தாராளவியம் (Liberalism) என்பதும் தாராளமயம் (Liberalisation) என்பதும் ஒன்றா அல்லது வேறு வேறானவையா?

வேறு வேறுதான். தாராளவியம், தாராளவாதம் (liberalism) பற்றி முன்பே விளக்கி விட்டேன். அதன் வரலாறும் பார்க்கப் போகிறோம். தாராளமயம் அல்லது தாராளமயமாக்கம் (liberalization) என்பது தாராளியத்தின் செயலாக்கம். அதன் பரவலாக்கம். Nationalism, nationalization இரண்டும் வேறு வேறுதானே?

இனிய அன்பர்களே!

தாழி அன்பர் சத்தியசீலன் என் நேற்றைய மடலுக்கு மறுமொழி இட்டுள்ளார். அதே பொருள் குறித்து சிபி, நலங்கிள்ளி மடல்களும் வந்துள்ளன. இரோசிமா நாகசாகி தொடர்பான அன்பர் இயூபருட்டு மடலும் வந்துள்ளது. நாளை அந்த உரையாடலைத் தொடர்கிறேன். இன்று அரசியல் வகுப்புக்கு அணியமாக வேண்டும். நாளை சந்திப்போம் – தாழியில்தான்!

(தொடரும்)

தோழர் தியாகு

தரவு : தாழி மடல்  31