ஆங்கில விளம்பரங்களை நிறுத்து!

தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன் வலியுறுத்தல்

44ஆவது சதுரங்கப் பெருவிழாவில் ஆங்கில விளம்பரங்களே எங்கும் காணப்படுகின்றன.

இது குறித்து ஆட்சித் தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக மேற்கொண்டு சில விவரங்களை அவரிடம் கேட்டோம்.

அந்த நேர்காணல் இதோ…

வணக்கம் ஐயா

வணக்கம்.

ஐயா, நீங்கள் சதுரங்க உலகப் போட்டி தொடர்பாகச் சில கருத்துகளைத் தெரிவித்துள்ளீர்கள். அது குறித்து மேற்கொண்டு சில விவரங்களைக் கேட்கலாமா?

கேளுங்கள். சொல்கிறேன்.

நடைபெறும் சதுரங்கப் போட்டியை ஆங்கிலத்தில் குறிப்பிடாமல், 44 ஆவது சதுரங்க ஞாலப்போட்டி என்று அழைக்க வேண்டும் என்றும் ஆங்கிலத்தில் விளம்பரங்கள் செய்து வருவது தமிழை அகற்றும் செயல் என்றும் தெரிவித்துள்ளீர்கள். இவ்வளவு குறுகிய காலத்தில் ஆங்கில விளம்பரங்களை அகற்றித் தமிழில் விளம்பரம் செய்ய இயலுமா?

அரசு நினைத்தால் முடியாதது என்ன உள்ளது? இனி தரும் விளம்பரங்களையும் போட்டி நடைபெறும் இடம், மேடை முதலிய இடங்களிலும் தமிழிலேயே விளம்பரம் செய்ய வேண்டும்.

மேடையில் மட்டும் முதலில் தமிழில் 5 பங்கு அளவிலும் அடுத்து ஆங்கிலத்தில் 3 பங்கு அளவிலும் போட்டி விவரங்களைக் குறிப்பிட வேண்டும். பேருந்து விளம்பரங்களைத் தமிழ் விளம்பரமாக மாற்ற வேண்டும்.

இதனால் வீண் செலவாகாதா?

வீண் செலவாகும் என்றால் ஆங்கிலத்தில் விளம்பரப் படுத்தியவர்களுக்குக் காரணமாக இருந்தவர்களிடமிருந்து அந்தச் செலவுத் தொகையைத் திரும்பப் பெற வேண்டியதுதான். அப்பொழுதுதான் அவர்களும் பிறரும் இனி ஆங்கிலத்தைப் புகுத்தித் தமிழை அகற்ற அஞ்சுவார்கள்.

நீங்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் பூசி மெழுகுவதுபோல் சொல்வதாகத் தெரிகிறதே! அரசை நேரடியாகக் கண்டிக்காமல் அதிகாரிகளைக் கண்டிப்பது ஏன்?

அரசின் கருத்தைச் சரியாகச் செயற்படுத்தாமல் திசை திருப்புபவர்களாக அதிகாரிகள்தான் இருக்கிறார்கள். இதற்குப் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. சரியாக வழிகாட்ட வேண்டிய அதிகாரிகள், தமிழை அகற்றுவதற்குச் செயற்பட்டால் அவர்களைக் கண்டிக்க வேண்டியதுதானே முறை.

ஒருவேளை,

தமிழ்ப்பாட்டு பாடு

இல்லையேல் ஓடு

எனப் பாரதிதாசன் கூறுவதுபோல்,

தமிழில் விளம்பரப்படுத்து

இல்லையேல் விழாவை நிறுத்து

எனச் சொல்ல வேண்டும் என்கிறீர்களா?

ஆம். அப்படிச் சொல்லியிருக்கலாமே!

அதற்குத் தேவையில்லை. அங்கிங்கெனாதபடி எங்கும் ஆங்கிலமே காட்சியளிப்பது கண்டு அரசிற்கே குற்ற உணர்ச்சி வந்திருக்கும்.

தமிழை அகற்றுபவர்களை மக்கள் அகற்றுவார்கள் என்னும் தமிழகச் சூழலையும் உணருவார்கள்.

இனித் தவறுகளைச் சரி செய்வார்கள்; தமிழ் விளம்பரங்களைக் காணலாம் என எதிர்நோக்கலாம்.

உங்கள் நம்பிக்கை பொய்க்காமல் இருக்க வாழ்த்துகள்.

நன்றி. வணக்கம்.

https://thaaii.com/2022/07/25/chess-olympiad-english-add/