வெள்ளி, 7 ஜனவரி, 2022

திருச்சி சமால் முகமது கல்லூரி முதுகலைத் தமிழாய்வுத்துறையின் முப்பெரு விழா

 

அகரமுதல



முப்பெரு விழா

திருச்சிராப்பள்ளி சமால் முகமது கல்லூரி. முதுகலைத் தமிழாய்வுத்துறையில் 16-12-2021 அன்று 'முப்பெரும் விழா' நடைபெற்றது. இவ்விழாவில் திருச்சிராப்பள்ளி தமிழ்ச் சங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி, தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் கவிஞர் நி.அமிருதீன் எழுதிய "இலைகளின் மௌனம் கவிதைகளாய். . . . . . ." நூல் வெளியீட்டு நிகழ்ச்சி, நுண்திறன் மேம்பாட்டுச் சிறப்புச் சொற்பொழிவு ஆகிய நிகழ்வுகள் இனிதே நடைபெற்றன.

கல்லூரியின் செயலர் - தாளாளர் முனைவர் அ.கா.காசா நசீமுதீன், முதல்வர் முனைவர். சை.இசுமாயில் முகைதீன், திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கத் தலைவர் முனைவர். ஐ.அரங்கநாதன், தமிழ்ச்சங்க அமைச்சர் திரு.பெ.உதயகுமார் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்ததில் கையெழுத்திட்டனர். கவிஞர் நி.அமிருதீன் எழுதிய 'இலைகளின் மௌனம் கவிதைகளாய்' கவிதை நூலை வெளியிட்டு, கல்லூரிச் செயலர் முனைவர் அ.கா.காசா நசீமுதீன் அவர்கள் வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்தார். தமிழ்த்துறையின் உதவிப்பேராசிரியர் திரு. து.பிரபாகரன் அவர்கள் நூலை அறிமுகம் செய்தார். சமகாலப் பாதிப்புகளும் சமூக பிரக்ஞைகளும் தன்னைக் கவிதை எழுதத் தூண்டின என ஏற்புரையில் நூலாசிரியர் நி.அமிருதீன்  குறிப்பிட்டார். தமிழ்த்திரைப்பட வசனங்கள் தொடர்பாடல் திறன்களை வளர்க்க எங்ஙனம் உதவுகின்றன என்பதை உரிய சான்றுகளுடன் நகைச்சுவை ததும்ப ஆளுமைப் பயிற்சியாளர் திரு வெ.தேவராசு சிறப்புரை யாற்றினார்.

 

தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் -மாணவர்களின் துறை சார்ந்த கல்வியியற் செயற்பாடுகளுக்குக் கல்லூரி நிருவாகம் எப்போதும் உறுதுணையாக இருக்கும் என முதல்வர் முனைவர் சை. இசுமாயில் முகைதீன் தலைமையுரையில் குறிப்பிட்டார். கல்லூரி நிருவாகக் குழுப் பொருளாளர் ஆசி எம்.சே. சமால் முகமது. துணைச் செயலாளர் முனைவர் க. அபுதுல் சமது, மதிப்பில் இயக்குநர் - உறுப்பினர் முனைவர் கா.ந. அபுதுல் காதர் நிகால் ஆகியோர் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர். கல்லூரியின் துணை முதல்வர் அ. முகமது இபுராகீம், கூடுதல் துணை முதல்வர் முனைவர் எம். முகமது சிகாபுதீன், விடுதி நிருவாக இயக்குநர்கள் முனைவர் கா.ந. முகமது பாசில், செல்வி ச. ஆசிரா பாத்திமா ஆகியோர் நிகழ்ச்சிக்கு வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்தனர்.

முன்னதாக தமிழ்த்துறைத் தலைவர் கலைப்புல முதன்மையர் முனைவர் அ சையத்து சாகீர் அசன் வரவேற்புரை நிகழ்த்தினார். தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் திரு.க. இமதாதுல்லா  நன்றியுரை நவின்றார். நிகழ்ச்சியில் சங்கமம் ஆசிரியர் கருத்தரங்கம், மாணவர் படைப்பரங்கம் நிகழ்ச்சிகளின் பங்கேற்பாளர்கள்,ஒருங்கிணைப்பாளர்களைப் பாராட்டிச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தமிழ்த்துறைப் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள், பிறதுறைப் பேராசிரியர்கள், இலக்கிய ஆர்வலர்கள் பெருமளவில் நிகழ்ச்சியில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக