இந்திய அரசு ஒன்றியமாமத்தியமா?

4/4

 இந்தியா என்ற நாட்டில் சமன்மை, உடன்(பிறப்பு)மை என்ற இரண்டு அடிப்படைக் கூறுகளில் முழுமையானதொரு வெற்றிடம் உள்ளது என்பதைத் தயங்காமல் ஒப்புக் கொள்ள வேண்டும். மேலிருந்து கீழ் என்ற படிநிலைச் சமுக அமைப்பும், பெரும் பணக்காரன், வறுமையில் உழலும் ஏழை என்கிற பொருளாதார ஏற்றத் தாழ்வும் நீங்காத வரை நாம் பெற்றிருக்கின்ற இந்த அரசியல் விடுதலை என்பதற்குப் பொருளில்லை என்பதே என் கருத்தாகும்.

சாதியக் கோட்பாடு என்பது உடன்(பிறப்பு)மைக்கும் சமன்மைக்கும் எதிரானது. சாதி என்பது தேசப் பகை (விரோதம்). இதைக் கடைபிடிக்க எண்ணுகின்றவர்கள் தான் உண்மையிலே நம் தேசப் பகைவர்கள் (விரோதிகள்) என்று கருத வேண்டும்.

ஒரு நாட்டின் விடுதலை என்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்றுதான் என்பதை நான் இந்த அவையில் மறுக்க எண்ணவில்லை.

ஆனால் இந்திய மக்கள் (the People of India) என்று சொல்வதற்குப் பதிலாக  இந்தியத்தேசியம் ( the Indian Nation) என்று சொல்வதைச் சிலர் பெருமையாகக் கருதுகிறார்கள். நாம் இதை ஒரு தேசம் என்று நம்புகின்றோம். அப்படிச் சொல்வது ஒரு மாயை (elusion) என்பதை முதலில் நாம் உணர வேண்டும். மக்கள் பல்லாயிரக் கணக்கான சாதிகளாய் ஏற்றத்தாழ்வுடன் பிரிந்து கிடக்கையில் எங்கிருந்து வரும் இந்தத் தேசியம்?

இனியும் நம் வறுமைக்கும், வாழ்வுக்கும் ஆங்கிலேயர்கள் காரணம் என்று சொல்ல இயலாது. இனி நமது கடமைகள் காத்திருக்கின்றன. எனவே இனி வரும் காலங்களிலும் இது சரிசெய்யப் படவில்லையென்றால் இப்போது நாம் கொண்டாடும் இந்த விடுதலை மகிழ்ச்சிக் கொண்டாட்டம் பொருளில்லாத ஒன்றாகி விடும்.

1953 ஆம் ஆண்டு செப்டம்பர் 3 ஆம் நாள் இந்திய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அறிஞர் அம்பேத்துகர்

“ அரசமைப்பை நான் தான் உருவாக்கினேன் என்று என் நண்பர்கள் கூறுகிறார்கள். ஆனால் அந்த அரசமைப்பைக் கொளுத்தும் முதல் ஆளாக நான் தான் இருப்பேன் என்பதைக் கூறுவதற்கும் நான் அணியமாக உள்ளேன். என்னை ஒரு வாடகைக் குதிரையாகப் பயன்படுத்தி என் விருப்பத்திற்கெதிராகப் பலவற்றைச் செய்ய வைத்துள்ளனர். அரசமைப்புச் சட்டத்தின் பாயிரம் சொல்கின்ற செய்தியை மனப் பூர்வமாக ஏற்றுச் செயல்படத் தவறினால் நாம் சொல்கின்ற இந்த இந்தியத் தேசம் என்பது ஒரு மாயை என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்  

(1955, 19th March, Dr. Ambedkar in Parliament:-

My friend says that the last time when I spoke, I said that I wanted to burn the Constitution. Well, in a hurry I did not explain the reason. Now that my friend has given me the opportunity, I think I shall give the reason. The reason is this: We built a temple for god to come in and reside, but before the god could be installed, if the devil had taken possession of it, what else could we do except destroy the temple? We did not intend that it should be occupied by the Asuras. We intended it to be occupied by the Devas. That’s the reason why I said I would rather like to burn it.

Dr BR Ambedkar in the Rajya Sabha on 19 March 1955)

எனது நண்பர் கூறுகையில், கடைசியாக நான் பேசியபோது, நான் அரசியலமைப்பை எரிக்க விரும்பினேன் என்று சொன்னேன். சரி, அவசரமாக நான் காரணத்தை விளக்கவில்லை. இப்போது என் நண்பர் எனக்கு வாய்ப்பு அளித்துள்ளதால், அதற்கான காரணத்தை நான் தருவேன் என்று நினைக்கிறேன். காரணம் இதுதான்: கடவுள் உள்ளே வந்து வசிப்பதற்காக ஒரு கோவிலைக் கட்டினோம், ஆனால் கடவுளை நிறுவுவதற்கு முன்பு, பிசாசு அதைக் கைப்பற்றியிருந்தால், கோயிலை அழிப்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? அதை அசுரர்கள் கைக்கொள்ள வேண்டும் என்று நாங்கள் கருதவில்லை. நாங்கள் அதைத் தேவர்கள் கைக்கொள்ள வேண்டும் என்று நினைத்தோம். அதை எரிக்க விரும்புகிறேன் என்று நான் சொன்னதற்கு இதுவே காரணம்.

எனவே தன்னாட்சி இல்லா ஒரு மாநிலமாக இந்திய வல்லாண்மைக்கு அடிமைப் பட்டு இருப்பதை விடத் தனியாட்சி நோக்கிப் பயணிப்பதே தமிழர்களுக்கும், தமிழ் நாட்டிற்கும் நன்மை சேர்க்கும். இதைத்தான் தந்தை பெரியார் அவர்கள் 1938 ஆம் ஆண்டு முன்னெடுத்தார். எனவே தற்போது தமிழ்நாடு அரசின் முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கும்  மாண்புமிகு மு.க.தாலின் அவர்கள் இந்திய அரசியலில் அனைத்து மாநில முதலமைச்சரைகளையும் ஒன்று சேர்த்து ஒன்றிய அரசின் வல்லாண்மைப் போக்கை விளக்க வேண்டும் என்பது என் கருத்து. இந்தியாவுக்கு தமிழ்நாடுதான் வழி காட்ட வேண்டும் என்று பதிவு செய்து வாய்ப்பளித்தமைக்கு நன்றி தெரிவித்து விடை பெறுகிறேன்.

நன்றி!

மும்பை இதழாளர் சு.குமணராசன்

[தமிழ்க்காப்புக்கழகம்  சார்பில் ‘இந்திய அரசு ஒன்றியமா? மத்தியமா?’ என்னும் தலைப்பில் ஆனி 20, 2052 ஞாயிறு  04.07.2021 அன்று நடைபெற்ற இணைய உரையரங்கத்தில் ஆற்றிய உரை.]