இந்திய அரசு ஒன்றியமா? மத்தியமா?
1/4
அன்பின் உறவுகளே, வணக்கம்.
இந்த இரண்டு சொற்களில் எது பொருத்தமானது அல்லது எது முதன்மையானது என்பதை விடச் இச்சொற்களினால் மக்களின் இறைமை எவ்வாறு சீரழிக்கப் பட்டது என்பதே நாம் ஆய்ந்து சொல்ல வேண்டிய கருப் பொருளாகும்.
நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அரசு மத்தியமா? அல்லது ஒன்றியமா? எனக் கேட்டால் என் பார்வையில் இரண்டுமே கூட்டாட்சி அல்லது மாநிலத் தன்னாட்சிக் கோட்பாடுகளுக்கு எதிரான நிலைப்பாடுடையப் பொருளையே இந்திய நாட்டு அரசியலில் நமக்குத் தந்துள்ளன.
மத்தியம், நடுவண் அல்லது மையம் என்ற சொற்கள் நிலவியல், பொருளியல், சமுகவியல், அரசியல் போன்ற எதிலும் பொருத்திப் பார்க்க இயலாத அளவு வேற்றுமைக் காரணிகளைக் கொண்ட ஒரு சொல்லாட்சியாகவேத் தென் படுகிறது. இந்திய அரசமைப்பிலும் இந்த சொல்லாட்சி எங்கும் காணப் படவில்லை. இந்தியா என்றழைக்கப்படும் நாடு வடக்கு, தெற்கு என்பவை நிலவியல், மொழி, இனம், நாகரிகம், பண்பாடு, அரசியல் என அனைத்திலும் பொருந்தா ஒன்றாகவே உள்ளது. மத்திய அரசு இந்தியாவின் மத்தியிலும் அமையவில்லை அல்லது மாநிலங்களுக்கிடையில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்க்கும் மையத் தீர்வாயமாகவும் அமையவில்லை. எனவே அச்சொல் இங்கு பொருத்தமற்ற ஒன்று.
அடுத்து அண்மைக் காலமாகப் பயன் பாட்டுக்கு வந்திருக்கும் ஒன்றியம் என்ற சொல் 1950 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த இந்திய அரசமைப்பின் முதல் பிரிவில் இந்தியா அல்லது பாரத்து என்பது இது மாநிலங்களின் ஒன்றியம் (shall be a union of states) எனக் குறிக்கப் பட்டுள்ளது. மொழி மாற்ற அளவில் இது தமிழில் “ஒன்றியம்” என்ற பொருளைத் தருகிறது. எனவே அவ்வாறு அழைப்பதில் தவறில்லை என்பது ஏற்றுக் கொள்ளப் பட வேண்டிய ஒன்று.
ஆனால், இந்த ஒன்றியம் என்ற சொல்தான் கூட்டாட்சி (Federation) என்ற சொல்லைத் தகர்த்துள்ளது. கூட்டாட்சி என்ற சொல் வெறும் இணைதலைக் குறிக்கிறது; ஆனால் ஒன்றியம் என்ற சொல் “இரண்டறக் கலந்து விடுதல்” என்ற பொருளைக் கொடுக்கிறது. எனவே இது திட்டமிட்டுப் புகுத்தப் பட்ட ஒரு சொல்லாகும். இதன் மூலம் இந்தியா என்பது பல மாநிலங்கள் இணைந்த கூட்டாட்சி என்பதற்குப் பதிலாக இந்தியா என்பது பல மாநிலங்களை இணைத்துக் கொண்ட ஒரு நாடு என்ற பொருளில், அதுவும் அழிக்க முடியாத (Indestructible Union) அதாவது எந்த நிலையிலும் மாநிலங்கள் பிரிந்து போவதற்கு உரிமையில்லாத நிலை என்ற பொருள் பட அமைந்துள்ளது. இதனால் தான் ஒன்றிய அரசு அல்லது நடுவண் அரசு என்பது இன்று வரை மாநில மக்களின் விருப்பங்களுக்கும், இறைமை உரிமைகளுக்கும் எதிராக ஒரு வல்லாண்மைப் போக்கைக் கடை பிடித்து மாநில மக்களை அடிமைப் படுத்தி வருகிறது.
எனவே இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பின்னணியைச் சற்று உற்று நோக்குவது தேவையாகும்.
ஆங்கிலேயர்களால் இந்தியா என்றழைக்கப் பட்ட நிலப்பகுதியில் ஒரு காலத்தில் ஆப்கானிசுத்தான், ஏமன், பருமா, பாகிசுத்தான், வங்காள தேசம் ஆகிய பல பகுதிகள் உள்ளடக்கம் என்பதை முதலில் தெரிந்து கொள்வது தேவையாகும். இதில் 1916, 1935, 1947 எனக் கால ஓட்டத்தில் சிறு சிறு பகுதிகளாகத் தனிமைப் பட்டு இன்று நாம் வசிக்கின்ற இந்தப் பரப்பு 1947 ஆகசுடு 15 க்குப் பின் ஆங்கிலேயரின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட, விடுதலையடைந்த ஒரு நிலப் பரப்பு அல்லது நாடு. அந்த நாட்டில் அரசமைப்பு- நிருவாகச் செயல்முறைகளுக்காக ஏற்படுத்தப்பட்ட ஆவணமே இந்திய அரசமைப்புச் சட்டமாகும். இந்த ஆவணம் பொது மக்கள் கருத்தறிந்தோ அவர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தியோ ஒப்புதல் பெறப்பட்ட ஒன்று அல்ல.
இஃது ஆங்கிலேயர் காலத்தில் நடைமுறையிலிருந்த 1919 ஆண்டு இந்திய அரசுச் சட்டம் மற்றும் அதன் பின்பு மாற்றியமைக்கப் பட்ட இந்திய அரசுச் சட்டம் 1935 ஆகியவற்றின் மறு வடிவம் என்று சொல்லாம்.
இந்த அரசமைப்புச் சட்டவரைவின் முதல் படிநிலை என்பது ஆங்கிலேயர் காலத்தில் சூலை 1946 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட தற்காலிக அரசமைப்புச் சட்ட குழு ஆகும். இதில் அன்றைய நாளில் பெரும் அரசியல் கட்சியாக இருந்த பேராயக் கட்சி (காங்கிரசு) சார்பில் 211 பேரும் முசுலிம் லீக்கு சார்பில் 73 பேரும் பங்கேற்றனர். இந்தக் குழு 1947 ஆம் ஆண்டு ஏற்படுத்தப் பட்ட இந்திய விடுதலை வரைவு(மசோதா) 1947 க்குப் பின் அதிகாரமிக்க ஓர் அமைப்பானது. இதன் நிரந்தரத் தலைவராக இராசேந்திர பிரசாத் தேர்வு செய்யப் பட்டார். இந்தக் குழுதான் முதல் வரைவுப் படியை அணியப் படுத்திய ஒன்றாகும். அதன் பின்பு அமைக்கப் பட்ட அரசமைப்பு வரைவுக் குழுவில் ஏழு உறுப்பினர்கள் நியமிக்கப் பட்டனர்.
அல்லாடி கிருட்டிணசாமி( ஐயர்), என். கோபாலசாமி (ஐயங்கார்), கே.எம் . முன்சி, பி. ஆர். அம்பேத்துகர், மொகம்மது சாதுல்லா, பி. எல். மிட்டர், டி.பி. கைத்தான் என்பவராவர். இவர்களில் பி.எல். மித்தர் என்பவர் எந்தக் கூட்டத்திலும் கலந்து கொள்ளாததையடுத்து என். மாதவராவு என்பவர் நியமனம் செய்யப்பட்டார். அதேபோல டி.பி. கைத்தான் அவர்கள் மறைவுற்றதால் பின்னர் தி.த. கிருட்டிணமாச்சாரியும் இடம் பெற்றார். இந்தக் குழுவினரில் அதிகம் படித்தவரான பி. ஆர். அம்பேத்துகர் தலைவராகத் தேர்வு செய்யப் பட்டார்.
1919 ஆம் ஆண்டின் இந்திய அரசுச் சட்டம் என்பது 1914 முதல் 1918 வரை நடந்த உலகப் போருக்குப் பின்னர் ஓரினம், ஒரு நாடு என்ற தனியாட்சிக் கொள்கை உலகளாவிய அளவில் பரவும் போது ஏற்படுத்தப் பட்ட ஒன்று. 1921 முதல் 1937 வரை இந்தியாவில் ஓரளவு தன்னாட்சி முறையில் நிருவாகம் நடைபெற்றது. இதில் காங்கிரசுக் கட்சி நேரடியாகப் பங்கு பெறவில்லையெனினும் அதன் ஒரு உறுப்பான சுயராசியா கட்சி பங்கு பெற்றது.
(தொடரும்)
மும்பை இதழாளர் சு.குமணராசன்
[தமிழ்க்காப்புக்கழகம் சார்பில் ‘இந்திய அரசு ஒன்றியமா? மத்தியமா?’ என்னும் தலைப்பில் ஆனி 20, 2052 ஞாயிறு 04.07.2021 அன்று நடைபெற்ற இணைய உரையரங்கத்தில் ஆற்றிய உரை.]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக