“தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் வள்ளலார் ஆய்விருக்கை வேண்டும்!”

சிதம்பரம் ‘வள்ளலார் பெருவிழா’ வில் தீர்மானம்!


தமிழ்நாட்டின் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் வள்ளலார் இராமலிங்க அடிகளாரின் சிந்தனைகளை ஆய்வு செய்யும் ஆய்விருக்கைகள் ஏற்படுத்த வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுக்குத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சிதம்பரத்தில் நடைபெற்ற “வள்ளலார் பெருவிழா”வில் இதை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்த்தேசியப் பேரியக்கம், இறைவழி இயற்கை வாழ்வியல் நடுவம் ஆகியன இணைந்து நடத்திய “தமிழர் மறுமலர்ச்சி மூலவர் வள்ளலார் பெருவிழா, தை 07, 2052 /20.01.2021 மாலை கீரப்பாளையத்தில் எழுச்சியுடன் நடைபெற்றது.

இப்பெருவிழாவில், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் திரு. கி. வெங்கட்ராமன் தலைமை தாங்க, இறைவழி இயற்கை வாழ்வியல் நடுவம் ஒருங்கிணைப்பாளர் திரு. ஞான. சுந்தரபாண்டியன் முன்னிலை வகித்தார்.

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பரதூர் செயலாளர் மாணவர் செ. பொன்னிவளவன் வரவேற்புரை நிகழ்த்தினார். மேட்டுக்குப்பம் திருமதி. பிரேமா திருவருட்பாவை இசைபட ஓதினார். சிதம்பரம் தமிழர் தற்காப்புப் பயிற்சிப் பள்ளி மாணவர்கள் நடத்திய மல்லர் கம்பம், சிலம்பம், இளவட்டக் கல் தூக்குதல் நிகழ்ச்சி ஆகியன பார்வையாளர்களை உற்சாகப்படுத்தியது. இப்பள்ளியின் ஆசிரியர் இரா. எல்லாளன் இவ்விளையாட்டுகளை ஒழுங்கு செய்தார்.

புவனகிரியில் அமைந்துள்ள வள்ளலார் சபையில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக திருத்தொண்டாற்றி வரும் கீரப்பாளையம் திரு. நா. நல்லதம்பி அவர்களுக்கு “வள்ளலார் திருத்தொண்டர்” விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. பெருவிழாவின் நோக்க உரையை தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் திரு. வே. சுப்ரமணிய சிவா நிகழ்த்தினார்.

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன், விழாப் பேருரையாற்றினார். புதுக்கோட்டை மேலை சிவப்புரி கலை அறிவியல் கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் தா. மணி, ஆவடி – தமிழ்ச் சைவப் பேரவைத் தலைவர் தமிழ்த்திரு. கலையரசி நடராசன், கீரப்பாளையம் கற்ப சித்தர் திரு. நாகவேல் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

இறைவழி இயற்கை வாழ்வியல் நடுவம் முன்னணிப் பொறுப்பாளர் திரு. வே. இளவரசன் நன்றி நவின்றார். வள்ளலார் பெருவிழாவைத் தமிழ்த்தேசியப் பேரியக்க காட்டுமன்னார்குடி நகரச் செயலாளர் திரு. சிவ. அருளமுதன் மற்றும் தமிழக இளைஞர் முன்னணி துணைப் பொதுச்செயலாளர் திரு. ஆ. குபேரன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

பெருவிழாவில், பின்வரும் இரண்டு தீர்மானங்களும் பங்கேற்பாளர்களின் பலத்த கையொலிகளுடன் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் – 1 : வள்ளலார் இராமலிங்க அடிகள் சிந்தனைகளை ஆய்வு செய்ய தமிழ்நாட்டின் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஆய்வு இருக்கைகள் ஏற்படுத்துக!

தமிழ்த்தேசியப் பேரியக்கம் மட்டுமின்றி, பல்வேறு தமிழ் உரிமை இயக்கங்களும் ஆன்மிகச் சான்றோர்களும் கேட்டுக் கொண்டதை ஏற்று, இந்த ஆண்டு முதல் தைப் பூசத் திருநாளை தமிழ்நாடு தழுவிய அரசு விடுமுறையாக அறிவித்ததற்குத் தமிழ்நாடு அரசுக்கு வள்ளலார் பெருவிழா நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது!

தமிழர் ஆன்மிகச் சிந்தனை தனித்துவமானது; மெய்யியல் வகையிலும், அறிவியல் முறையிலும் புதிய படிநிலைகளைத் தொட்டுக் காட்டுவது ஆகும்!

நீண்ட நெடிய மரபுள்ள தமிழர் ஆன்மிகச் சிந்தனைத் தொடரில் வள்ளலார் இராமலிங்க அடிகளின் சமரச சுத்த சன்மார்க்கம் என்பது மிகப்பெரிய பாய்ச்சலாகும்!

அருளியலிலும், ஆன்மிகத்திலும் காலூன்றி நிற்கும் வள்ளலார் சிந்தனைகள் அறிவியல், அரசியல், மருத்துவம், உணவியல், வாழ்வியல் போன்ற பல துறைகள் சார்ந்து விரிந்து நிற்பதாகும். அதனால்தான், வள்ளலார் அவர்களைத் தமிழர் மறுமலர்ச்சி மூலவர் என்று அழைக்கிறோம்.

வள்ளலார் சிந்தனைகள் குறித்து ஆழமான – விரிவான ஆய்வுகள் வெளிவந்தால், தமிழினத்தின் பெருமையை உலகம் அறிய வாய்ப்பு ஏற்படும். மேலும், உலக மன்பதைக்கும் புதிய வழிகாட்டுதல்களை வழங்குவதாக அமையும்.

இதனைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டின் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் வள்ளலார் இராமலிங்க அடிகள் பெயரில் ஆய்வு இருக்கைகள் ஏற்படுத்தி, அவரது பன்முகச் சிந்தனைகள் குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொள்ள வழிவகை செய்தல் வேண்டும் என இப்பெருவிழா தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது!

தீர்மானம் – 2 : மல்லர் கம்ப வீரர்களுக்கு விளையாட்டு வீரர்கள் ஒதுக்கீட்டில் இடம் வழங்க வேண்டும்!

தமிழர் மரபில் தோன்றிச் சோழப்பேரரசு காலத்தில் தமிழர்களிடையே விரிவாகப் பயிலப்பட்ட வீர விளையாட்டுகளில் மல்லர் கம்பம் முகாமையானது. தாராசுரம் கல்வெட்டு இதற்கு அழுத்தமான சான்றாக விளங்குகிறது.

தமிழ்நாட்டை மராட்டியர்கள் ஆட்சி செய்த காலத்தில் மல்லர் கம்பம் வீர விளையாட்டை மராட்டியர்கள் தங்கள் தாயகத்திற்கு எடுத்துச் சென்று, மராட்டியர்களின் தேசிய விளையாட்டாகவே வளர்த்திருக்கிறார்கள். மகாராட்டிர மாநிலத்தில் மல்லர் கம்பம் வீரர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் விளையாட்டுகளின் பட்டியலில் மல்லர் கம்பமும் சேர்க்கப்பட்டு, சிறப்பான முறையில் அரசு வேலை வாய்ப்புகள் வழங்கப் படுகின்றன.

இடைக்காலத்தில், தமிழ்நாட்டில் மங்கியிருந்த இந்த வீர விளையாட்டுக் கலையை விழுப்புரத்தைச் சேர்ந்த உலகதுரை என்ற பெருமகனார் மீட்டெடுத்துப் பல மாணாக்கர்களை உருவாக்கினார்.

அதைத் தொடர்ந்து, இன்று தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மல்லர் கம்பம் வீர விளையாட்டு பொங்கல் விழாக்களிலும், கோயில் திருவிழாக்களிலும் பெருமளவில் விளையாடப்படுகின்றன.


ஆயினும், இந்த வீர விளையாட்டுக்குத் தமிழ்நாடு அரசு உரிய அங்கீகாரம் தராமல் இருப்பது வேதனைக்குரியது.

தமிழ்நாடு அரசு மராட்டிய மாநில அரசைப் போல மல்லர் கம்பம் வீர விளையாட்டையும் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுகளில் ஒன்றாக ஏற்றுக் கொண்டு, மாவட்ட அளவிலும் தமிழ்நாடு அளவிலும் போட்டிகள் நடத்தி அதில் சிறந்து விளங்குவோருக்கு அரசு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும், கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் மற்ற விளையாட்டுகளைப் போல மல்லர் கம்பத்தையும் பயிற்றுவிக்க உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசை இப்பெருவிழா கேட்டுக் கொள்கிறது!

விழாவில், வள்ளலார் தொண்டர்களும், இறைநெறிச் சான்றோர்களும், தமிழின உணர்வாளர்களும் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.