நாளைய தமிழுக்கு இன்றைய தேவைகள்!
இந்தத் தலைமுறையில் தமிழ் மன்பதை மக்களிடம் தமிழை வளர்க்க, பாதுகாக்க ஒவ்வொரு தமிழனுக்கும் தலையாய கடமையாக உள்ளது
1) தொலைக்காட்சி, வானொலி
இன்றைய காலத்தில் தமிழை வளர்க்க முதல் கடமை தொலைக்காட்சி நடத்துபவர்களுக்கு உண்டு. அதுவும் தமிழர்கள் நடத்தும் தொலைக்காட்சிக்கு முதன்மைப் பங்கு உண்டு. தமிழ் சார்ந்த கல்வெட்டு, கோயில், இலக்கியம், இசை, விளையாட்டு, நாடகம், தற்காப்புக் கலை, வேளாண்மை, பண்பாடு, சித்த மருத்துவம், வரலாறு இது போன்ற தலைப்பில் நிகழ்ச்சி நடத்துதல், விவாதம் செய்தல், நேரடி ஒளிபரப்பு செய்தல், நீண்ட தொடர்களை எடுத்தல் வேண்டும். ஏனென்றால் தொலைக்காட்சியில் நீங்கள் காட்டும் நிகழ்ச்சி பார்க்கும் பெண்கள், இளைஞர்கள், குழந்தைகள் மனத்தில் உடனே பதிகிறது. எடுத்துக்காட்டாக அரைகுறை ஆடையுடன் ஆபாசமாக வரும் பெண்களைப் பார்த்து நாமும் இது போல் ஆடை அணிவதால் எந்தத் தவறும் இல்லை என்று மனநிலை உருவாகிறது. இது அடுத்த தலைமுறைக்கு மிகவும் கவர்ச்சியாக ஆபாசமாகவும் உடை அணிந்தால் தவறில்லை என்று பிம்பத்தை உருவாக்குகிறது.
2) நாளேடுகள், இதழ்கள், நூல்கள்
தமிழ் நாட்டில் வெளிவரும் நாளேடுகள் பெயரில் மட்டும் தமிழ் வைத்துக்கொண்டு தமிழ் எழுத்தில் கலப்படத்தை ஏற்படுத்தி அழிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றன. எப்படி என்றால் ” விவசாயி காரிலிருந்து இறங்கி டோரை லாக் செய்துவிட்டு வாட்ச்மேனிடம் தன் கீ கொடுத்து பார்க் செய்து சொன்னான். டேபிளில் உட்கார்ந்து பேப்பர் படித்துக்கொண்டு டிபன் ஆர்டர் செய்தான்” இதில் பாதி எழுத்துகள் தமிழ் அல்ல. அதுபோல் நூறு சொற்களுக்கு 50 சொற்கள் ஆங்கிலம், சமற்கிருதம் போன்ற பிறமொழிகளில் எழுதினால் இன்னும் 50 ஆண்டுகளில் தமிழ் எழுத்துகள் முழுவதும் கலப்படமாக மாறிவிடும். நாளேடுகள், இதழ்கள் உரிமையாளர்கள் தமிழ் மீது பற்று இருந்தால் இதை மாற்ற முயலலாம். மேலும், புதிய நூல்கள் எழுதும் அறிஞர்கள், எழுத்தாளர்கள் அனைவரும் பிறமொழிகள் கலப்பு இல்லாமல் தூய தமிழ் சொற்களால் எழுதினால் மிகவும் நன்றாக இருக்கும்.
3 ) திரைப்படங்கள்
இன்றைய தமிழ் திரைப்படத்தில் வரும் பாடல்களில் ஒரு வரி கூடத் தமிழ்ச் சொல் வரவில்லை. படத்தலைப்பில் கூடத் தமிழ்ப் பெயர் வைப்பதில்லை. தமிழ்த் திரைப்படத்தில் ஆங்கிலம், சமற்கிருதம், இந்தி , மலையாளம், தெலுங்கு போன்ற பிற மொழிகளில் உரையாடல், பாடல் வரிகளே அதிகமாக இடம் பெறுகின்றன. கேட்டால் தமிழ் வளர்ச்சி என்று பெருமையாக சொல்வது, ஒரு சில பாடல் வரிகளுக்கு உலகில் எந்த ஒரு மொழி அகராதியிலும் பொருள் காண முடியவில்லை. அந்த அளவிற்குத் தமிழ் எழுத்தைக் கொச்சைப்படுத்துகிறார்கள். இதைத் தடுக்க “தமிழ்த் திரைப்படத் தணிக்கைக்குழு” என்று உருவாக்கி இதன்மூலம் திரைப்படத்தில் வரும் பிற மொழி உரையாடல்கள், பாடல்கள் நீக்கப்பட வேண்டும். தமிழ்ப் பண்பாட்டைப் பாதிக்கும் அளவில் காட்சிகள் இருந்தால் கண்டனத்தையும் தெரிவிக்க வேண்டும். பிறமொழி கலந்து எடுக்கப்படும் தமிழ்த் திரைப்படத்திற்குத் தமிழக அரசு எவ்வகையிலும் நல்கைகள், சலுகைகள், விருதுகளை வழங்கக் கூடாது. இதுபோன்ற படத்தைத் தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
4 ) தமிழில் பெயர் வைத்தல்
தமிழ் மொழியின் தன்மையைப்பற்றித் தெரிந்து கொள்ளாமல் இருப்பது அவமானம். நம் இளைய தமிழ்க் குமுகாயம் பிறமொழியில் கலந்து பேர் வைப்பதைப் பெருமையாகக் நினைக்கிறார்கள். கிரந்த எழுத்துகள்(ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ போன்றவை) தமிழ் எழுத்துகள் அல்ல. தூய தமிழில் நம் குழந்தைக்குப் பெயர் வைக்க வேண்டும். இது போலக் கடைகளுக்கும் தமிழில் பெயர்ப் பலகைகள் வைக்க வேண்டும். நாம் வாங்கும் வாகனங்களில் தமிழ் மொழி வரலாறு பெருமைப்படுத்தும் விதமாக ஓவியம், வரைபடங்கள், எழுத்துகள் இடம்பெறச் செய்ய வேண்டும். சிறு வயதிலேயே தமிழில் கையெழுத்திடச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
5 ) நூலகம்
ஒரு நாடின் வளர்ச்சி, முன்னேற்றம் அந்த நாட்டிலுள்ள நூலகங்களின் எண்ணிக்கையைப் பொறுத்தே அமைகிறது. ஆனால், தமிழ்நாட்டில் நூலகத்தை விட அதிக எண்ணிக்கையில் மதுபானக் கடைகள் உள்ளன. இப்படி இருந்தால் தமிழ் வளர்ச்சி அடையாது. ஒவ்வொரு ஊருக்கும் நூலக வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும். அதில் அதிக தமிழ் நூல்களை இடம்பெறச் செய்ய வேண்டும். ஆயிரம் கோடி உரூபாய் கடலில் முழுகினால் அல்லது தொலைந்தால் மீண்டும் அதைவிடப் பன்மடங்குப் பணத்தாள்களாக அச்சடிக்கலாம். ஆனால், ஒரு நூலை அழித்தால் மீண்டும் அதை உருவாக்க முடியாது. இதுவரைக்கும் தமிழ்நாட்டில் சிறப்புவாய்ந்த பல ஆயிரம் தமிழ் நூல்கள் அழிக்கப்பட்டுவிட்டன. ஒரு சிறு நூலகம் தீவிபத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. கடல்கோள்(சுனாமி) வந்தாலும், நிலநடுக்கம் வந்தாலும், தீ நேர்ச்சி(விபத்து) ஏற்பட்டாலும் நூலகம் பாதிக்காத அளவுக்கு (ஓலைச்சுவடி , பழைய நூல்கள்) இரும்புப் பெட்டகத்தில் வைத்துப் பாதுகாக்க வேண்டும். பல நூலகங்களில் தீ நேர்ச்சியை(விபத்தை)த் தடுக்க எந்த ஒரு பாதுகாப்புக் கருவியும் இல்லை.
6 ) தமிழர் உணவு
இப்போது உள்ள உணவுப் பழக்கவழக்கங்கள் செயற்கை உணவாகும், மரபணு மாற்றப்பட்ட உணவாகவும், கலப்பட உணவாகவும் உள்ளன. தமிழருடைய உணவு முற்றிலும் மாறிவிட்டது. மீண்டும் தமிழருடைய உணவு முறையை இயற்கை சார்ந்து பின்பற்ற வேண்டும். நமது முன்னோர்கள் எழுதிவைத்த உணவு பழக்கவழக்கங்களை வரும் தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். சமையலுக்குப் பயன்படுத்தும் பாத்திரங்கள் செப்புப் பாத்திரம், மண் வகை சார்ந்த பாத்திரங்களை மட்டும் பயன்படுத்துவது உடலுக்குச் சிறந்தது.
7) தமிழர் நாள்காட்டி
தமிழர்கள் அனைவரும் ஒவ்வொரு வருடமும் ஆங்கில புத்தாண்டு தொடங்கும் நாளை முன்னிட்டு நாள்காட்டி அச்சடித்து கொடுக்கிறார்கள். இதற்கு மாற்றாக எப்போது தமிழ்ப் புத்தாண்டு தொடங்குகிறதோ அன்றைய நாளில் இருந்து தமிழ் நாள்காட்டிகளை வெளியிட வேண்டும். ஆங்கிலத்தைத் தவிர்த்துத் தமிழ் மாதத்தைக் கணக்கிட்டு, நேரத்தையும் கணக்கில் வைத்து புதிய தமிழ் நாள்காட்டி உருவாக்க வேண்டும்.
8) அரசின் கடமைகள்
உலக அளவில் உள்ள திறமையான தமிழறிஞரைக் கொண்டு “தமிழ் அகராதி வளர்ச்சிக்குழு ” என்று ஆரம்பித்து அதன் மூலம் உலகில் எந்த நாட்டிலும் எந்த மூலையிலும் ஒரு புதிய பொருளைக் கண்டுபிடித்தால் அந்தப் பொருளுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை உருவாக்க வேண்டும். டூ வீலர் என்ற வார்த்தைக்கு மட்டும் இருசக்கர வாகனம் என்று தமிழ்ச் சொற்களை உருவாக்கி உள்ளோம். ஆனால், இருசக்கர வாகனத்தில் ஆயிரம் உதிரிப்பாகங்களும் உள்ளன. அதற்கு நிகரான தமிழ்ச் சொற்களை இதுவரை உருவாக்கவில்லை. ஒவ்வொரு வருடமும் பிறமொழி புதிய சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொல் உருவாக்கித் தமிழ் அகராதி வெளியிட வேண்டும். மேலும், இந்திய அரசு, தமிழ்நாடு அரசு வெளியிடும் திட்டங்கள், உத்தரவுகள், அரசாணைகள், சட்டங்கள், சட்டமன்ற உரைகள், ஆய்வறிக்கைகள் போன்ற முதன்மை நிகழ்வுகளைத் தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பு செய்து வெளியிட வேண்டும். இதற்குத் “தமிழ் மொழிபெயர்ப்புக் குழு” என்று உருவாக்கி உடனுக்குடன் நூலாக வெளியிடுவதுடன் இணையத்தளத்திலும் வெளியிட வேண்டும். கலப்படமில்லாமல் முழுக்க முழுக்கத் தமிழ்ச் சொற்களைக் கொண்டு உருவாகும் நூல்களுக்கு மட்டும் உதவித்தொகை, விருதுகள் வழங்க வேண்டும். தமிழ் படித்தால் மட்டும் தமிழ்நாட்டில் அரசு வேலை என்பதைக் கட்டாய நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும். தமிழில் கையெழுத்திடச் சட்டம் கொண்டு வரவேண்டும். தமிழில் கையெழுத்து இடும் அரசு ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும். தமிழக அரசு வெளியிடும் எந்த இணையத் தளத்திலும் பெயரளவு மட்டும் தமிழ் உள்ளது. முழுக்க முழுக்க தமிழில் இணையத் தளம் அமைக்க வேண்டும். மத்திய அரசு வேலைவாய்ப்பில் இ.ஆ.ப., இ.கா.ப. போன்ற உயர் பதவிகளில் இடம்பெறச் செய்ய தமிழ் மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு ஏற்படுத்த வேண்டும்.
த.விசயகுமார், இ.இ.படையணி, புதுச்சேரி மாநிலம்.
கைப்பேசி – 7845500777, மின்னஞ்சல் – kumar051431@gmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக