சிங்கப்பூரில் 10 ஆண்டுகளில் 

100 நிகழ்ச்சிகள் நடத்திய

சமால் முகம்மது கல்லூரி

முன்னாள் மாணவர்கள் சங்கம்

 

சமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை) அதன் 10ஆம் ஆண்டு நிறைவு விழாவை 28-11-2020 அன்று இணையம் வழி நடத்திக் கொண்டாடியது.

சிங்கப்பூரில் கல்வி சார்ந்த சமூக நல அறப்பணிகளை ஆற்றி வரும் இச்சங்கம், கடந்த 10 ஆண்டுகளில் 100 நிகழ்ச்சிகளை நடத்தி அருவினை படைத்துள்ளது. மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கான இலவசப் பயிற்சிப் பட்டறைகள், கருத்தரங்குகள், பொதுமக்களுக்கான மருத்துவச் சொற்பொழிவுகள், ஒற்றுமையை வளர்க்கும் குடும்ப நாள், நோன்புத் துறப்பு,  சமய இன நல்லிணக்க நிகழ்ச்சிகள், தமிழ் மொழி வளர்ச்சிக்கான விழாக்கள், இறகுப் பந்து விளையாட்டுப் போட்டிகள், மாணவர்களுக்கான ஓவியப் போட்டிகள், மாணவர்களுக்கான கல்வி உதவி நிதி வழங்குதல், முதியோர் இல்லத்தில் வசிப்போருக்கு ஆடைகள், சக்கர நாற்காலிகள் நன்கொடை வழங்குதல், மாணவர்களுக்கான எழுதுபொருட்கள் நன்கொடை வழங்குதல், பல்வேறு சமூக அமைப்புகளுடன் இணைந்து சமூக நலப் பணியாற்றுதல் முதலான சேவைகளைச் செய்து, சமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை) கடந்த 10 ஆண்டுகளாகத் தொடர்ந்து அரும்பணி ஆற்றி வருகிறது.

சங்கத்தின் தலைவர் கணக்காய்வாளர் முனைவர் மு. அ. காதர் தலைமையில் நடைபெற்ற 10ஆம் ஆண்டு நிறைவு விழாக் கொண்டாட்டத்தில் சங்கத்தின் செயலாளர் கணிதப் பேராசிரியர் திரு அமானுல்லா, சங்கம் ஆற்றிய கல்வி, சமூக நலப் பணிகளை எடுத்துரைத்தார். 10 ஆண்டுகளில் நடத்திய 100 நிகழ்வுகளின் தொகுப்பு காணொளியாக வெளியிடப்பட்டது. நாகூர் உரூமி எழுதிய “மீண்டுமோர் கருவறை தந்த தாயே!” என்ற பாடலை மாணவிகள் சினேகா முரளி, அனுமிதா முரளி இணைந்து பாட, “சமால் சமால் நீ வாழ்கவே!” என்ற பாடல் இசைமணி பரசு கல்யாண் குரலில் ஒலித்தது. கல்லூரியின் செயலர் முனைவர் காசா நசீமுதீன் சாகிபு, பொருளாளர் சமால் முகம்மது சாகிபு, முதல்வர் முனைவர் இசுமாயில் முகைதீன், பேராசிரியர் சாகிர் உசைன், கல்லூரியின் உலகளாவிய முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சார்பாளர்கள் வாழ்த்துரை வழங்கினர். சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் அத்துல் சுபஃகான் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

தமிழகத்தில் திருச்சியில் 1951ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சமால் முகம்மது கல்லூரி  கடந்த 70ஆண்டுகளாக உயர்கல்வி பட்டப்படிப்புகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

– முதுவை இதாயத்து