தமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன் எனக் கொழும்பு தன்னைத்தானே கேள்விக் கேட்டுக்கொள்ள வேண்டும் – நோபள் விருதாளர் ஒசே இரமோசு ஓர்தா
கிழக்குத் திமோரின் முன்னாள் குடியரசுத் தலைவரும் நோபள் விருதாளருமான ஒசே இரமோசு ஓர்தா
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நிகழ்வில் முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரை ஆற்றியுள்ளார். அப்பொழுது அவர்,
தமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன் எனத் தன்னைத்தானே இலங்கை அரசு கேட்டுக் கொள்வதும், தமிழர்களிடம் அதனைக் கேட்டுப் பார்ப்பதும் இலங்கை அரசின் பொறுப்பு எனத் தெரிவித்தார்.
கிழக்கு திமோர் தலைநகரம் திலீயிலிருந்து இணையவழியே அவர் வழங்கிய முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரையில் பின்வருமாறு தெரிவித்தார்:
கத்தலோனியா மக்கள் நூற்றாண்டுக் கணக்கில் சேர்ந்து வாழ்ந்த பின் பிரிந்து செல்ல விரும்புவது ஏன்? என்ற கேள்வியை மாட்ரிட்டு தனக்குத்தானே கேட்டுக் கொள்ள வேண்டும் என்பது போலவே, இசுகாட்டுகள் பிரித்தானியாவிடம் இருந்து பிரிந்து செல்ல விரும்புவது ஏன்? என்று இலண்டன் தன்னைத்தானே கேட்டுக் கொள்ள வேண்டும் என்பது போலவே, கொழும்பில் இடம்பெற்றுள்ள அரசாங்கமும் தமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன் என்று கேட்டுக் கொள்ள வேண்டும்.
தமிழர்களைப் போன்று மீப்பெரும் இன அடையாள உணர்வும் வரலாற்று உணர்வும் கொண்ட ஒரு தேசிய இன மக்கள் தனித்திருக்க விரும்புவது ஏன்? தம்மைத்தாமே கேட்டுக் கொள்ளும் பொறுப்பு ஆளும் அரசுகளுக்கு இருப்பதாக அவர் வலியுறுத்தினார். ஏதோ தவறு நடந்திருக்க வேண்டும் என்பதையும் அரசுகள் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்;இசுபெயினில் கத்தலோனியர்களும், துருக்கியில் குர்துகளும், ஐக்கிய பிரித்தானிய முடியரசில் இசுகாட்டுகளும் நடத்தி வரும் நிகழ்காலப் போராட்டங்களைச் சிறப்பு எடுத்துக்காட்டுகளாகக் குறிப்பிட்டவர் தமிழ்மக்களின் போராட்டத்தையும் அதே வரிசையில் வைத்துக் கருத்துரைத்தார்.
இலங்கையில் தமிழர் இனவழிப்பு என்பதைக் குறிப்பிட்ட அவர், சென்ற நூற்றாண்டில் செருமனியில் (இ)யூதர்கள் இனவழிப்பு, சிரியாவிலும் சூடானிலும் இப்போதும் தொடரும் இனவழிப்பு ஆகியவற்றின் விரிவான சூழலில் பொருத்திக் காட்டினார். தேசிய இனக் குழுக்கள் ஒன்றையொன்று அரக்கராக்கிக் காட்டுவதற்கு மேல் உயர்ந்து, தேசிய இனச் சிக்கல்களைத் தீர்க்க ஆக்கவழியில் உரையாட வேண்டிய தேவையை வலியுறுத்தினார்.
தன்னாட்சிக்கும் தேசியத்துக்குமான போராட்டம் ஒரு வரலாற்று உண்மையாகும். ஒவ்வொரு தேசமும் விடுதலையாக இருக்க வேண்டும் என விரும்புகின்றன. ஆனால் அந்த விடுதலையின் பொருள் பிரிவினையாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை என்றார். இந்தோனேசியாவில் தன்னுடைய கிழக்கு திமோரிய மக்களின் போராட்டம் கடந்து சென்ற பாதையை எடுத்துரைத்தவர் எப்படிப் பின்னொரு கட்டத்தில் தங்களின் எதிர்ப்பியக்கம் ஐநாவின் நடுவாண்மையில் இந்தோனேசிய அரசாங்கத்துடன் உரையாடல் என்ற முயற்சியில் ஈடுபட்டது என்பதையும், எப்படி முடிவில் பொதுவாக்கெடுப்பு நடைபெற்று அது தங்கள் விடுதலைக்கு வழிகோலிற்று என்பதையும் குறிப்பிட்டார்.
இந்தோனேசிய அரசு ஒடுக்குமுறை வழிகளைக் கடைப்பிடித்த காலத்தில் எந்தக் கட்டத்திலும் கிழக்கு திமோரியர்கள் தங்கள் ஒடுக்குமுறையாளரை அரக்கராக்கிக் காட்டியதில்லை என்றார்.
இலங்கை அரசாங்கம் கூடுதல் வலுவாற்றலாக இருப்பதால் பௌத்தத்தின் கருணையைக் காட்டி, தமிழ் மக்களைத் தேடிச்சென்று உதவலாம் என்பது முனைவர் இரமோசு-ஓர்தாவின் கருத்து. ஒருபோதும் நம்பிக்கை இழக்காதீர்கள், ஒருபோதும் கனவு காண்பதை நிறுத்திக் கொள்ளாதீர்கள் என்று அவர் தமிழ் மக்களைக் கேட்டுக் கொண்டார். எது வரினும் வெற்றி உங்களுக்கே என்று கூறித் தன் உரையை நிறைவு செய்தார்.
மே18-முள்ளிவாய்க்கால் துயரத்தை நினைவிற்கொள்ளும் பொருட்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஆண்டுதோறும் முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரை நிகழ்வை ஒழுங்கு செய்து வருகிறது. பலவாறான பின்னணிகள் கொண்டோரும் அமெரிக்கா, கொசோவோ, தெற்கு சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தோருமான புகழார்ந்த பேச்சாளர்கள் முன்சென்ற ஆண்டுகளில் இந்தப் பேருரை ஆற்றியுள்ளார்கள் என்பது இங்கு குறிப்பிடதக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக