முள்ளிவாய்க்கால் மே18 – தமிழீழத் தேசியத் துக்க நாளை நினைவேந்தத் தயாராவோம் ! – நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல்.

கறுப்புப்பட்டி அணிதல்
சுடரேற்றல்
முள்ளிவாய்க்கால் கஞ்சி

உலகத்தமிழர்களின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு
முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரை
மரக்கன்றுகள் வழங்குதல்

தமிழர் வரலாற்றில் முதன்மையான ஒர் கூட்டு நினைவாக அமையும் மே-18 முள்ளிவாய்க்கால் தமிழினஅழிப்பின், தமிழீழத் தேசிய துக்க நாளினை நினைவேந்திக் கொள்ள நாம் தயாராவோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் விடுத்துள்ளது.
கறுப்புப்பட்டி அணிதல், சுடரேற்றல், முள்ளிவாய்க்கால் கஞ்சி, முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரை, மரக்கன்றுகள் வழங்குதல் எனத் தமிழினப்படுகொலையினை நினைவேந்தும் செயற்பாடுகளுடன், இந்நாளில் சிறப்பாக உலகளாவிய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வொன்றினையும் இணையவழியூடாக ஏற்பாடு செய்துள்ளது. தாயகம், தமிழகம், புலம்பெயர் நாடுகள் என்று உலகெங்கும் உள்ள தமிழர் தலைவர்கள், அமைப்புச் சார்பாளர்கள் ஒன்றுகூடி இதில் நினைவேந்துகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமையர்   பணிமனை விடுத்துள்ள ஊடக அறிக்கையின் முழுமையான விவரம் :  
ஈழத்தமிழருக்கு எதிரான இனப்படுகொலையின் ஓர் இரத்தச் சான்றாக விளங்கும் முள்ளிவாய்க்கால், உலகில் வாழும் அனைத்துத் தமிழர்களின் கூட்டுநினைவிலும் நிலைத்து நிற்கும் நாளாக அமைகிறது. 
உலகளாவிய நிலையில் நெருக்கடியினை ஏற்படுத்தியுள்ள மகுடை(கொரோனா) பெருந்தொற்;றினால்,  மக்கள் ஒன்றுகூடுகின்ற பொதுநிகழ்வுகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டிருக்கும் ஒரு சூழலில், முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் 11ஆவது ஆண்டு நினைவினை உலகெங்கும் வாழும் தமிழ்மக்கள் நேரடியாக ஒன்றுகூடி நினைவு கூர முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

எமது மக்கள் போரே வாழ்வாகவும், வாழ்வே போராகவும் கொண்டு வாழ்ந்து வந்தவர்கள். பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்ட போதும் விடுதலைப் பயணத்தினைத் தமது தோளேந்தி நின்றவர்கள். முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் பின்னரும் சிங்களத்தின் ஆக்கிரமிப்புக்கு எதிராக உரிமைக்குரல் எழுப்பி வருபவர்கள்.  முள்ளிவாய்க்கால நினைவுடன் மே 18இனைத், தேசிய துக்க நாளாகக் கடைப்பிடிப்பது எமது தேசிய  உயிர்ப்புணர்வை வலுப்படுத்தும் செயன்முறையாக இருக்கிறது. இதனால் மகுடை(கொரோனா) பெருந்தொற்றினால் ஏற்பட்டுள்ள இன்றைய இந்த நெருக்கடியினை நாம் எதிர்கொண்டவாறு, துயர்தோய்ந்த, அவலம் நிரம்பிய முள்ளிவாய்க்கால் கூட்டுநினைவுகளை நமது வீடுகளில் இருந்தவாறு நினைவேந்துவோம்.
இந் நாளில் பின்வரும் நினைவேந்தல் செயன்முறைகளுக்கு நம்மைத் தயராக்கிக் கொள்வோம்.
1. மே 18 ஆம் நாள் திங்கட்கிழமை எமது வீடுகளில் சுடரேற்றி முள்ளிவாய்க்காலை குடும்பமாக நினைவேந்திக் கொள்வோம்.
2. இந்நாளில் வேலைத்தளங்களுக்கோ, இன்றியமையாத் தேவைகளுக்கோ வெளியில் செல்பவர்கள் கறுப்புப்பட்டியணிந்து சென்று எமது மக்கள் பட்ட துயரினை உலகுக்கு வெளிப்படுத்துவோம்.
3.‘இன்னுமொரு முள்ளிவாய்க்காலை நடக்கவிடமாட்டோம்’ என்ற உறுதியினை எமது அடுத்த மரபினரின் மனங்களில் நிறைய வைக்க, முள்ளிவாய்க்கால் மக்களின் அவலத்தினை நினைவிற் கொள்ளும் ‘முள்ளிவாய்க்கால் கஞ்சியினை’ குடும்பமாக உண்போம். இம் «முள்ளிவாயக்கால் கஞ்சி» என்பது எமது மக்கள் பட்ட துயரினை நாம் உள்ளுணர்ந்து அன்றைய நாள் எமது விடுகளில் நாம் ஆக்கி உணவாக உட்கொள்ளும் கஞ்சியினைக் குறிக்கும். (இ)யூதர்கள் தமக்கென்று ஓர் தேசம் உருவாகிய பின்னரும், கஞ்சி குடித்து தமதினத்தின்; அவலத்தை நினைவு கொள்வதுபோல், முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்ட கஞ்சிக்கொட்டில்கள் குண்டுமழைக்கும் மத்தியிலும் மக்களின் பசிதீர்த்தது போல் நாமும் முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நினைவுநாளில் கஞ்சி உண்டு எமது மக்களின் முள்ளிவாய்க்கால் இனவழிப்புக்கால வாழ்வியலைக் காலாதி காலம் நினைவிற் கொள்ளவோம்.
 4. இந்நாளில் உலகத்தமிழர்களின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இணையவழியே (அமெரிக்கா) புதுயோர்க்கு காலை 8 மணி, ஐரோப்பா நண்பகல் 14 மணி, இந்தியா, இலங்கை மாலை 5:30 மணிக்கு இடம்பெற இருக்கின்றது. இதில் தாயகம், தமிழகம், புலம்பெயர் நாடுகள் என்று உலகெங்கும் உள்ள தமிழர் தலைவர்கள், அமைப்புச் சார்பாளர்கள்  ஒன்றுகூடி நினைவேந்துகின்றனர். இந்த இணையவழி நிகழ்வினைத் தமிழர் ஊடகங்களிலும், சமூகவலைத்தளங்களிலும் காணலாம்.
5. இந்நாளில் ஆண்டுதோறும் உலக ஆளுமைகள் பங்கு கொள்ளும் முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரையும் சிறப்புற இணையவழி மூலமாக உலகத்தமிழர்கள் காணும் வகையில் இடம்பெற இருக்கின்றது.   
6.இதேவேளை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினை முன்னிட்டு மே12 ஆம் நாள் முதல் வீட்டுத்தோட்ட மரக்கன்றுகளைத் தமிழர் தாயகத்தில் வழங்குவதற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடுகளைச் செய்து வருவதோடு, வழமைபோல் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை கூடி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினை உணர்வுபூர்வமாக தொடங்கி வைக்க இருக்கின்றது.
முள்ளிவாயக்கால் இனவழிப்பின் தம்முயிர் ஈந்தவர்கள் நினைவுடன் தமிழீழத் தேசத்தின் விடுதலைக்காகத் தொடர்ந்து ஓயாது உழைப்போம் என உறுதி எடுத்துக் கொள்வோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நினைவேந்தல் வணக்கப் பாடல் : http://youtu.be/BUPRH4yugyQ
தமிழீழத் தேசிய துக்க நாள் பாடல் : http://youtu.be/U2ZkYdI9vaw